யோகா மேற்படிப்பு இன்று கவுன்சிலிங்
Added : நவ 07, 2020 23:29
சென்னை:யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், இன்று நடக்கிறது.
சென்னையில் உள்ள, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரியில், முதுநிலை யோகா மருத்துவம், முதுநிலை இயற்கை மருத்துவம், முதுநிலை அக்குபஞ்சர் மருத்துவம் ஆகிய படிப்புகளில், தலா, ஐந்து இடங்கள் வீதம், 15 இடங்கள் உள்ளன. மூன்றாண்டு படிப்பான அவற்றில் சேர, இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பை நிறைவு செய்திருத்தல் அவசியம்.
மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தேர்வு குழுவால் நடத்தப்படும், நுழைவு தேர்வில் பங்கேற்க வேண்டும். அதில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.அந்த வகையில், இந்தாண்டுக்கான நுழைவு தேர்வு, சென்னையில் நேற்று நடந்தது. அதில், 105 மாணவர்கள் பங்கேற்றனர்.
விடைத்தாள்கள் உடனடியாக திருத்தப்பட்டு, முடிவுகளும், தரவரிசை பட்டியலும் மாலையில் வெளியிடப்பட்டன. அதில், டாக்டர் பாமா, செந்தில்குமார், யோகபிரியா ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை பெற்றனர். இதற்கான மாணவர் சேர்க்கை, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தேர்வு அலுவலகத்தில், கவுன்சிலிங் முறையில், இன்று நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment