Tuesday, January 19, 2021

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்

Updated : ஜன 19, 2021 07:14 | Added : ஜன 19, 2021 06:51 

சென்னை: மருத்துவ சேவைக்காக மகசசே, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை வென்ற, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், டாக்டர் சாந்தா (வயது 93) காலமானார்.

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் சாந்தா, உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, இன்று(ஜன.,19) அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, பழைய அடையாறு மருத்துவமனையில் வைக்கப்பட உள்ளது.


மருத்துவ சேவைக்காக பல உயரிய விருதுகளை டாக்டர் சாந்தா வென்றுள்ளார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே செலவு செய்தவர் டாக்டர் சாந்தா.


வாழ்க்கை வரலாறு:

சென்னை மயிலாப்பூரில், கடந்த மார்ச் 11, 1927 ஆம் ஆண்டு டாக்டர் சாந்தா பிறந்தார். விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் தான் இவரது தாய்மாமா. சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு டாக்டர் பட்டமும், 1955 ஆம் ஆண்டில் எம்.டி. பட்டமும் பெற்றார். அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் டாக்டராக தனது பணியை துவங்கினார்.

12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவாக போற்றும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் இவர் பெரும் பங்காற்றினார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த இவர், இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலை.,யின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இருந்து தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். உலகில் புற்றுநோய்க்கு எங்கு புதிய மருந்துகள் அல்லது புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், உடனடியாக அறிமுகம் செய்வதை தனது தலையாய கடமையாகக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024