பெருந்துறை கல்லுாரி கட்டணம் குறைகிறது
Added : பிப் 16, 2021 23:24
சென்னை:'ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி கட்டணம், விரைவில் குறைக்கப்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியை தமிழக அரசு ஏற்றது. அங்கு, மாணவர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தை அடுத்து, கல்வி கட்டணத்தை, அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு உள்ளது போல, அரசு மாற்றியமைத்தது.இதன்படி, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, 13 ஆயிரத்து, 610; பி.டி.எஸ்., படிப்பிற்கு, 11 ஆயிரத்து, 610; பட்ட மேற்படிப்புக்கு, 30 ஆயிரம்; டிப்ளமா படிப்பிற்கு, 20 ஆயிரம்; பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு, 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழக போக்குவரத்து துறை நடத்தி வந்த, பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லுாரியையும், தமிழக சுகாதாரத்துறை ஏற்றுள்ளது. ஆனால், மருத்துவ கட்டணம், பழைய நிலையிலேயே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லுாரியின் கட்டணத்தையும் குறைக்கக்கோரி, மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பெருந்துறை மருத்துவ கல்லுாரியை, சுகாதாரதுறை ஏற்று நடத்தி வருகிறது. உடனடியாக, கல்வி கட்டணத்தை மாற்றி அமைப்பதில், சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆனாலும், கல்வி கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து, சட்டசபை கூட்டத்திற்கு முன் அல்லது, சட்டசபையில் முதல்வர் அறிவிப்பார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment