மாணவர் சேர்க்கையை பல்கலை நடத்தினால் யு.ஜி.சி., விதிகள் தான் அமலாகும்: ஐகோர்ட்
Added : பிப் 17, 2021 00:14
சென்னை:'மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலையிடம் ஒப்படைக்கும் போது, யு.ஜி.சி., விதிமுறைகளையும், மாநில ஒதுக்கீட்டையும் தானே பின்பற்ற முடியும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலையில் நடத்தப்பட்டு வந்த, 'எம்.டெக்., பயோடெக், எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் பயாலஜி' என்ற படிப்புகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, மாணவியர் இருவர், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள், நீதிபதி புகழேந்தி முன், விசாரணைக்கு வந்தன.
மத்திய அரசு சார்பில்ஆஜரான வழக்கறிஞர், 'அண்ணா பல்கலைக்கும், மத்திய அரசுக்கும்இடையே உள்ள ஒப்பந்தப்படி, மத்திய நிதி உதவி அளிக்கும் படிப்புகளில், மத்திய அரசு உத்தரவை பின்பற்ற வேண்டும்' என்றார்.மாணவியர் சார்பில், ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், ''மாணவர்களுக்கு உதவித் தொகையை, மத்திய அரசு வழங்குகிறது. உள்கட்டமைப்பு வசதிகளை, அண்ணா பல்கலை தான் வழங்குகிறது.
''எந்த ஒதுக்கீட்டை பின்பற்றினாலும், எங்களை பொறுத்தவரை இந்த படிப்புகள் தொடர்ந்து நடக்க வேண்டும்,'' என்றார்.அப்போது, நீதிபதி கூறியதாவது:எப்படி இந்த படிப்புகளை தொடர்ந்து நடத்துவது என்பது பற்றி, தீர்வு காண வேண்டும். இத்தனை ஆண்டுகளாக, மாணவர் சேர்க்கையை மத்திய அரசு நடத்தியது; மத்திய ஒதுக்கீடு பின்பற்றப்பட்டது.
வைரஸ் தொற்று பிரச்னையால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலையிடம் ஒப்படைக்கப்பட்டது.மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலை நடத்தும் போது, யு.ஜி.சி., விதிமுறைகளையும், மாநில ஒதுக்கீட்டையும் தான் அமல்படுத்த முடியும். அடுத்த ஆண்டில் இருந்து, மத்திய ஒதுக்கீட்டை பின்பற்றிக் கொள்ளலாம்; இந்த ஆண்டுக்கு வழி காண வேண்டும்.இவ்வாறு, நீதிபதி கூறினார்.விசாரணையை, நாளைக்கு நீதிபதி புகழேந்தி தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment