Wednesday, May 12, 2021

சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்க கோரிக்கை

சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்க கோரிக்கை

Added : மே 11, 2021 20:36

சென்னை:கொரோனா பாதிப்பு நிவாரணமாக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படுவதை போன்று, சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சர்க்கரை கார்டுதாரர்கள் கூறியதாவது:சர்க்கரை கார்டுகளை வைத்திருப்போர் எல்லாம் வசதியானவர்கள் அல்ல; அரிசி கார்டுக்கு விண்ணப்பித்த போது, அதை ரத்து செய்த அதிகாரிகள், சர்க்கரை கார்டு வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். அதற்காகவே, பலரும் சர்க்கரை கார்டு பெற்றனர். எனவே, சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கார்டு வழங்குவது நிறுத்தமா?

இதற்கிடையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு, சமீப நாட்களாக பலர் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு புதிய கார்டுக்கு ஒப்புதல் அளிக்கும் பணி, நேற்று முன்தினம் முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: ஏற்கனவே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோம். 'தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது; நடத்தை விதிகள் ரத்தானதும் கார்டு வழங்க பரிந்துரைக்கப்படும்' என, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறினர். தேர்தல் முடிந்தும் கார்டு வழங்கவில்லை.

மீண்டும் அதிகாரிகளிடம் கேட்டால், 'இம்மாதம், 10ம் தேதி முதல், புது கார்டுக்கு, உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. 'நிவாரண தொகை வழங்கும் பணி முடிந்ததும், கார்டுக்கு ஒப்புதல் தரப்படும்' என்கின்றனர்.

குறித்த காலத்தில் ஆய்வு செய்து,ரேஷன் கார்டு வழங்காதது, அதிகாரிகளின் தவறு. தற்போது, கார்டுக்கு ஒப்புதல் தருவது நிறுத்தப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம். எனவே, புதிய கார்டுக்கு ஒப்புதல் அளிக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

உணவுத்துறை அதிகாரிஒருவர் கூறுகையில், 'தகுதியான அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர்' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024