கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வருகை புரிந்த
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ நாடு திரும்பியவுடன்,
செய்தியாளர்களின் வினாக்களுக்கு விடையளித்தபோது, இந்திய நிர்வாக முறை
நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்று சொல்லிச் சிரித்தார்.
சிங்கப்பூர் சென்றவர்களுக்குத் தெரியும் 1965 வாக்கில்
சுதந்திரம் பெற்று மலேசியாவில் இருந்து தனி நாடாகப் பிரிந்த சிங்கப்பூர்
தொடக்கக் காலத்தில் தொழிலாளர்களின் கலவர பூமியாக இருந்தது. தொழிலாளர்
அமைதியின்மை, வேலையின்மை ஆகியன அந்த நாட்டை வாட்டி வதைத்தன. முதல்
பிரதமராகப் பொறுப்பேற்ற லீ பத்தே ஆண்டுகளில் இரண்டு முக்கியமான
சிக்கல்களைத் தீர்த்தார்.
குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத அந்த நாட்டில் குடிநீர்
வேண்டுகிற அளவு கிடைக்க வழி செய்தார். மலேசியாவில் இருந்து இடையில் உள்ள
கடல் மேல், குழாய் அமைத்து சிங்கப்பூரில் வந்து தண்ணீர் கொட்டும்படி
செய்தார். இப்போது நம் நாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் கொசுக்களின்
படையெடுப்பு அங்கும் இருந்தது. அவற்றை ஒழிக்க நவீன நடவடிக்கை எடுத்தார்.
நீங்கள் அங்கு சென்றால், கொசுக் கடி என்றால் என்ன என்று கேட்கும்படியாக
இருக்கும்.
வீடு கட்ட நிலம் இல்லாத நாட்டில், 15 அடுக்கு, 20
அடுக்கு என்று அடுக்கு வீடுகளைக் கட்டினார். இந்த வீடுகளில் 24 மணி நேரமும்
இயங்கும் மின்தூக்கி (லிஃப்ட்) வசதிகள். கொசு மருந்து அடிக்கிற நகராட்சி
ஊழியர் வீடுவீடாக வந்து வீட்டில் ஈரம் ஒதுங்கும் இடங்களிலும் கழிவறைகளிலும்
மருந்து அடித்துச் செல்வதைக் காணலாம்.
நிர்வாகத்தில் சொல்லவே வேண்டாம், அவ்வளவு வேகம்.
சிங்கப்பூர் தொலைக்காட்சியோ, வானொலியோ உங்களை அழைக்குமானால், உங்கள்
நிகழ்ச்சி பதிவாகி நீங்கள் வெளியே வரும்போது கையில் காசோலையை
நீட்டுவார்கள். இப்படியெல்லாம் எப்படி முடிகிறது?
நான் ஐந்தாண்டுகள் பிரெஞ்சு காலனி நாடான செனகலில்
பணியாற்றினேன். அந்த நாட்டின் அதிபர் செங்கோர் அழைப்புக்கு இணங்க, அங்கு
உள்ள டக்கார் பல்கலைக்கழகத்தில் மானிட இயல் ஆராய்ச்சியாளராகப்
பணியாற்றினேன்.
இந்தியாவுக்கும் சென்னைக்கும் வந்து சென்றவர். இந்தியப்
பழக்கவழக்கங்களுக்கும் ஆப்பிரிக்கப் பழக்கவழக்கங்களுக்கும் ஆதி காலம்
முதல் தொடர்பு இருந்தது என்பதை ஆராய்ச்சிப்பூர்வமாக அறிந்தவர்,
நம்புகிறவர். அவருடன் எனக்குக் கடிதத் தொடர்பு அடிக்கடி நிகழும். நான்
கடிதம் எழுதிய அதே நாள் மாலையிலோ அல்லது அடுத்த நாளிலோ விடை மடலை
எடுத்துக்கொண்டு அதிபர் அலுவலக மோட்டார் சைக்கிள் நம் வீட்டுக்கு
வந்துவிடும்.
அவ்வளவு விரைவாக இயங்க முடிந்தது, இயங்க முடிகிறது. இதே வேகம் நம் நாட்டில் நிகழ்வதில்லையே, ஏன்?
உடனடியான விடை, ஆங்கிலேயர் காலத்தில் நம் மேல்
அவநம்பிக்கையால் அவர்கள் அறிமுகப்படுத்திய நிர்வாக முறை, அப்படியே அட்சரம்
பிசகாமல் நீடிப்பதுதான். அதுவே நாம் தற்போது கடைப்பிடித்து வரும் சிவப்பு
நாடா முறை.
நம் அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்றால், அங்கே உள்ள
அலுவலக மேஜை ஒவ்வொன்றிலும் பத்துக்குக் குறைவில்லாத கோப்புகள் ஒன்றின் மேல்
ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கோப்பையும் அட்டையால்
சாத்தி, சிவப்பு நாடா கொண்டு முடிந்து வைத்திருப்பார்கள்.
அலுவலர் ஒவ்வொன்றாகப் பிரித்து, கோப்பைப் பார்த்து
அவரது கையொப்பத்தைத் தன்னுடைய கருத்தோடு பதிவு செய்வார். அந்தக் கோப்பை
நாம் உற்றுப் பார்த்தால், ஒரு 10, 15 கையெழுத்துகள் சில குறிப்புகளுடன்
அமைந்திருக்கும்.
கோப்பை முதலில் வாங்கிய எழுத்தர், தலைமை எழுத்தர்,
அதற்கு மேல் உள்ள கண்காணிப்பாளர், அவருக்கு மேல் உள்ள உதவிப் பதிவாளர்,
அவருக்கு மேல் உள்ள துணைப் பதிவாளர் ஆகியோர் கையெழுத்தோடும்,
குறிப்புகளோடும் பதிவாளர் மேஜைக்கு அடுக்கடுக்காக வந்து சேரும்.
அடுத்து அந்தக் கோப்பைப் பார்க்கிறவர், அதில்
எழுதப்பட்ட அனைவருடைய வாசகங்களையும் படித்து முடிவெடுக்க வேண்டும். ஒரு
கோப்பு கீழேயிருந்து மேல் அதிகாரிக்கு வந்து சேர நாள் கணக்கும் ஆகும்.
மாதக் கணக்கும் ஆகும். சில சமயம் ஆண்டுக் கணக்கும் கூட ஆகும்.
பல்கலைக்கழகத்தை ஆளும் பல்கலைக்கழக நல்கைக் குழு
(யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் - யு.ஜி.சி.) தில்லியில் உள்ளது. நான்
துணைவேந்தர் பொறுப்பில் இருந்தபோது, அங்கிருந்து பதிலை எதிர்பார்த்துக்
காத்திருந்து முடியாமலும், அங்கிருந்த வரவேண்டிய காசோலையை எதிர்பார்த்துக்
காத்திருக்க முடியாமலும் நேரே செல்வோம். முதலில் நமது கோப்பு எங்கே
இருக்கிறது, எந்தப் பிரிவில் இருக்கிறது, எந்த மேஜையில் இருக்கிறது என்று
கண்டுபிடிக்க வேண்டும்.
யு.ஜி.சி. ஒரு சிறிய கட்டடமன்று. பல அடுக்குமாடிகளைக்
கொண்ட கட்டடம். கோப்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்த பிறகு தேடி
எடுத்துப் பார்ப்பார், உரிய கையெழுத்து ஆகிவிட்டதா என்று. சில சமயம்
ஆகியிருக்கும், பல சமயம் ஆகியிருக்காது. அப்பொழுது நாமே கெஞ்சிக் கூத்தாடி
உரியவரிடம் கையெழுத்துப் பெற்று நமக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால்,
அடுத்து செல்ல வேண்டிய ஒவ்வொரு பிரிவுக்கும் கோப்பை நாமே எடுத்துச் சென்று
கையெழுத்துப் பெற்று வருவதற்கு நாள் முழுக்க ஆகிவிடும்.
கடைசியில் வெற்றியோடும் திரும்புவோம். பின்னர்
வாருங்கள் என்ற அன்பு வார்த்தையோடும் திரும்புவோம். காசோலைகள் கூட தேங்கி
விடுவதுண்டு.
நம் நாட்டில் பல்கலைக்கழக பி.எச்டி. ஆராய்ச்சிகள்
நிகழுகின்றன. பதிவு செய்திருப்பவர் தம் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து,
தேர்வாளரிடமிருந்து சாதகமான அறிக்கைக்காகக் காத்திருக்க வேண்டும். இந்தக்
காத்திருப்பு ஓராண்டு முதல் மூன்றாண்டு வரை நீடிக்கும்.
டாக்டர் மால்கம் ஆதிசேஷையா காலத்தில் பி.எச்டி. பட்டம்
பெறுவதற்கு முன்பு வாய்மொழித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது
பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் உள்ள நடைமுறை. இந்தியாவிலும்
அறிமுகப்படுத்தப்பட்டது.
மூன்று தேர்வாளரிடமிருந்து அறிக்கைகள் வந்தபின் 15 நாள்
இடைவெளி வைத்து வாய்மொழித் தேர்வு நடத்தப்பெறும். புறத்தேர்வாளர் ஒருவர்
அழைக்கப்பெற்றுத் தேர்வை நடத்துவார். கேள்விகள் கேட்பவர்களுக்கு ஏற்ற
விடையை ஆய்வாளர் அளித்தால், புறத்தேர்வாளர் இவருக்குப் பல்கலைக்கழகம்
பி.எச்டி. பட்டம் வழங்கலாம் என்று பல்கலைக்கழகத்துக்குப் பரிந்துரை
செய்வார்.
இந்தப் பரிந்துரை பெறப்பெற்று மூன்று தேர்வாளருடைய
பரிந்துரைகளும், அவற்றுக்கு உரிய கோப்புகளும் ஆராய்ச்சி நிர்வாகப் பிரிவைத்
தாண்டி, உதவிப் பதிவாளர், துணைப் பதிவாளர், பதிவாளர் ஆகியோரையும் கடந்து
துணைவேந்தருக்கு வந்து சேரும். துணைவேந்தர் கோப்பைப் பார்த்துக் கையெழுத்து
இட்ட பின்னர், இக்கோப்பு வந்த வழியே திரும்பி வரும்.
இதனை அடியொற்றி உரிய பிரிவு ஆய்வாளருக்கு பி.எச்டி.
பட்டம் வழங்கலாம் என்பதைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது என்று
தெரிவிப்பார். இது நடந்து முடிவதற்கு மாதக் கணக்காகும்.
எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இந்த முறைதான்
கடைப்பிடிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க மனோன்மணீயம் சுந்தரனார்
பல்கலைக்கழகத்தில் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தினோம். புறத்தேர்வாளர்
முன்னிலையில் வாய்மொழித் தேர்வு நடத்தப்பெறும். தேர்வு முடிந்து
புறத்தேர்வாளர் உரிய ஆய்வாளர் பட்டத்துக்குத் தகுதி உடையவர் என்று
அறிவிக்கும்போதே அந்த மேடையிலேயே பி.எச்டி. சான்றிதழைத் தாற்காலிகமாக
(புரொவிஷன்) வழங்க ஏற்பாடு செய்தோம். அத்தனை பேரும் வரவேற்றனர்.
ஆனால், இதனை அறிமுகப்படுத்திய துணைவேந்தர் பணிக் காலம்
முடிந்த பிறகு இந்த முறை கைவிடப்பட்டது. காரணம் என்ன? நிர்வாக எதிர்ப்பு.
மீண்டும் பழைய முறையிலேயே ஒவ்வொரு மேஜை, மேஜையாக கோப்பு பயணம் செய்தது.
நமது காலதாமதத்துக்குத் தனிப்பெரும் காரணம் முடிவெடுக்க
அதிகாரம் இல்லாத அமைப்புகள்தான். நம்முடைய அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாமல்
தலைமையை நோக்கிக் குவிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, ஒவ்வொரு
கோப்பும் நெடும்பயணம் மேற்கொள்ளும்போது தாமதம் தவிர்க்க முடியாததாகிறது.
அதிகாரத்தைப் பரவலாக்கி, முடிவெடுப்பதை கீழே
உள்ளவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு
அவர்களே பொறுப்பேற்கும்படி செய்தால் நம் நிர்வாகம் சீர்பெற வாய்ப்புண்டு.
தற்போது செல்லிடப்பேசி அறிமுகம் ஆகிவிட்ட நிலையில், செல்லிடப்பேசியிலேயே பல
தகவல்கள் பரிமாறிக்கொள்ளப் பெறுகின்றன.
மின்னஞ்சல், நெடுந்தொலைவை ஒன்றுமில்லாமல்
செய்துவிட்டது. இதைப் பயன்படுத்திக் கொள்கின்ற நிர்வாக முறையை நம்மவர்கள்
கற்றுக்கொள்ள வேண்டும்.
குறித்த நாளில் குறித்த நேரத்தில் செய்து முடிக்கும்
பழக்கம் நம்மிடம் பொதுவாக இருப்பதில்லை. ஆனால், இந்தக் கால தாமதம்
எல்லாவற்றிலும் நிகழ்வதில்லை.
சான்றாக, குறித்த நாளில், குறித்த நேரத்தில் ஒரு நொடி
கூடப் பிசகாமல் திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகள்
நிகழுகின்றன. கோயில் அபிஷேகங்கள் நிகழுகின்றன. இவற்றையெல்லாம் குறித்த
நேரத்தில் ஒரு கணம் கூடப் பிசகாமல் கடைப்பிடிக்கும் நமக்குக் கடமைகளைக்
கடைப்பிடிக்க முடியாதா என்ன? முயற்சியிருந்தால் முடியும்.