Friday, April 3, 2015

கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்: பாஸ்போர்ட் பறிப்பால் சிக்கல்..DINAMALAR 23.4.2015

மலேசியாவில் கணினி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக, அழைத்துச் சென்ற ஏஜன்ட், பந்து பொறுக்கி போடும் வேலையை தான் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டதால், சொந்த ஊர் திரும்ப முடியாமல், சிவகாசி இளைஞர் தவித்து வருகிறார்.

பி.பி.ஏ., பட்டதாரி:

சிவகாசி, சசி நகரைச் சேர்ந்தவர் ராஜா கனி; பெயின்டர். இவரது மனைவி அஞ்சாதேவி. இவர்களின் மகன் அருண்பிரசாத், 24; பி.பி.ஏ., பட்டதாரி. இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கீதா மற்றும் ரத்தினசாமி ஆகியோர், அருண்பிரசாத்திடம், மலேசியாவில், கணினி ஆபரேட்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். இதற்காக, 25 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டனர். கடந்த மாதம் மலேசியாவுக்கு, அருண் பிரசாத்தை, ரத்தினசாமி அழைத்துச் சென்றார். அங்கு சென்றபின், சொன்ன வேலையை வாங்கித் தரவில்லை; பாஸ்போர்ட்டை யும் பறித்துக் கொண்டார்.

இதுகுறித்து, மலேசியாவில் இருந்து, 'தினமலர்' அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அருண்பிரசாத் கூறியதாவது: என்னை மலேசியாவிற்கு அழைத்து சென்ற ரத்தினசாமி, பிரிக்பீல்ட்ஸ் நகர் கிளப் ஒன்றில், கோல்ப் பந்துகளை பொறுக்கிப் போடும் வேலைக்குச் சேர்த்து விட்டார். நான் உடனடியாக ஊருக்குத் திரும்ப வேண்டும். அதற்கு, பணம் இல்லை. அதனால், இந்த வேலையைச் செய்தால், சம்பளம் வரும், ஊருக்குப் போய் விடலாம் என நினைத்தேன். ஆனால், ஒரு மாதம் வேலை பார்த்த பின், ரத்தினசாமி சம்பளம் வாங்கித் தரவில்லை. வேலை செய்த இடத்தில் கேட்டால், 'ஏஜன்ட் வாங்கிச் சென்று விட்டார்' என்றனர். ரத்தினசாமியிடம் பணம் கேட்டபோது, 'நீயே, இன்னும் பணம் தரணும்; வேலையை செய்' எனக்கூறி பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டார். 'ஊருக்கு போக வேண்டும்; விட்டுவிடு' என, கெஞ்சியும், பாஸ்போர்ட்டை தராமல், என்னை அடித்துத் துன்புறுத்தினார். ஏதாவது செய்து விடுவரோ என பயந்து, தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறி விட்டேன். ரத்தினசாமியின் மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சுற்றுலா விசாவில் தான் என்னை மலேசியா அழைத்து வந்தார். ஒரு மாத சுற்றுலா விசா முடிந்து விட்டது.

முறையீடு:

விசா இல்லாவிடில், போலீசார் பிடித்துக் கொள்வரோ என பயந்து, அங்கும், இங்கும் அலைந்து கொண்டுஇருக்கிறேன். இங்குள்ள, இந்திய தூதரகத்துக்குச் சென்று முறையிட்டேன். அரசு விடுமுறை, 5ம் தேதி வரை இருப்பதால், 6ம் தேதி வருமாறு கூறி அனுப்பி விட்டனர். இப்போது, என்ன செய்வது எனத் தெரியவில்லை. இவ்வாறு, அருண்பிரசாத் கூறினார்.

அரசு சொல்வது என்ன?


இப்பிரச்னை குறித்து, தமிழ்நாடு அயல்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் கூறியதாவது:

* பதிவு செய்யப்பட்ட ஏஜன்ட்கள் மூலம், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்.
* வெளிநாடு செல்வது குறித்து, கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ.,விடம் பதிவு செய்ய வேண்டும்.

இந்த விஷயங்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இவை எதையும் பின்பற்றாமல், பணத்தைக் கொடுத்து ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இவ்வாறு, அந்த அலுவலகம் சார்பில் கூறப்பட்டது.

தந்தை கதறல்:

இப்பிரச்னை குறித்து, சிவகாசியில் உள்ள அருண் பிரசாத்தின் தந்தை, ராஜா கனி கூறியதாவது: கீதா, எங்கள் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறார். அவரை கேட்டபோது, 'ரத்தினசாமியை என்னாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரிடம் பேசினால், விவரம் சொல்கிறேன்' என்கிறார். மகனை மீட்டுத் தருமாறு, போலீசில் புகார் செய்ய உள்ளேன். இவ்வாறு, ராஜா கனி கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024