Saturday, April 4, 2015

செல்லிடப்பேசி - பெருகும் தொல்லைகள்

Dinamani

தகவல் தொழில்நுட்பத்தின் உன்னத கண்டுபிடிப்பான செல்லிடப்பேசிகள் இப்போது தொல்லைபேசிகளாக மாறிவருகின்றன.

1990-களில் தரைவழித் தொலைபேசி இணைப்புக்குப் பதிவு செய்து நீண்ட காலம் காத்திருக்கும் நிலை இருந்தது. அதன்பின் செல்லிடப்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது செல்லிடப்பேசியில் இருந்து அழைக்கப்படும் அழைப்புகளுக்கும் உள்வரும் அழைப்புகளுக்கும் அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதன்பின் போட்டி அதிகமானதால், இப்போது சமுதாயத்தின் கடைசி நிலையில் உள்ளவர்களிடம் கூட செல்லிடப்பேசிகள், அதுவும் அதிநவீன செல்லிடப்பேசிகள் இருக்கும் சூழ்நிலை உள்ளது.

செல்லிடப்பேசியில் இப்போது பல்வேறு வகையான வசதிகளை செல்லிடப்பேசி நிறுவனங்கள் வழங்குகின்றன.

முகம் பார்த்துப் பேசுதல், விடியோ படங்கள் பதிவிறக்கம், குறுந்தகவல்கள் பரிமாற்றம், இணையதள சேவை, திரைப்படம், வர்த்தகம், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வசதிகளால் செல்லிடப்பேசியால் உலகம் கை அளவு சுருங்கி விட்டதை இதைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், வசதிகள் உள்ளதற்கேற்ப அதே அளவுக்கு ஆபத்துகளும் செல்லிடப்பேசிகள் மூலம் நமக்கு அழைப்பு விடுப்பதை மறுப்பதற்கில்லை.

தனக்குப் பிடிக்காத பெண்கள்/ஆண்களின் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக வெளியிட்டுத் தங்கள் பகையைத் தீர்த்துக் கொள்ளும் மனநோயாளிக் கயவர்கள் செய்யும் செயலால் எத்தனை குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மன அமைதியைக் குலைத்தவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டுள்ளது?

பெண்ணுடன் இருக்கும் காட்சியை செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து வைத்துக் கொள்கின்றனர். அவர்களில் பலர், சம்பந்தப்பட்ட பெண்ணை மிரட்டவும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

பலர் பழுதுநீக்குவதற்காகக் கடைக்குக் கொண்டு செல்லும்போது குறிப்பிட்ட செல்லிடப்பேசியில் பதிவாகியுள்ள விடியோ அல்லது புகைப்படப் பதிவுகளை சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் பார்த்து விலைபேசி விற்கும் அவலச் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இவ்வாறு வெளிவரும் தகவல்களால் தற்கொலைச் சம்பவங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.

இப்போதைய சூழ்நிலையில், செல்லிடப்பேசியைப் பயன்படுத்தாத பள்ளி மாணவ, மாணவியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சேவை தரும் செல்லிடப்பேசி நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு விதமான விளம்பரச் செய்திகளை செல்லிடப்பேசிகளுக்கு அனுப்புகின்றன.

டேட்டிங், பேசக் காத்திருக்கும் பெண்கள் என பல்வேறு விதமான தலைப்புகளுடன் கவரும் வார்த்தைகளுடன் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் பள்ளி மாணவ, மாணவியர் வைத்திருக்கும் செல்லிடப்பேசிகளுக்கும் வருகின்றன.

இதில் தெரியாத்தனமாக ஒரு மாணவர் அல்லது மாணவி ஒருமுறை பேசிவிட்டால் மீண்டும் மீண்டும் பேசத் தூண்டும் வகையில்தான் எதிர் முனையில் இருப்பவர் பேசுகிறாராம். இதைத் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ஏன் தடை செய்யக் கூடாது?

குறுந்தகவல்களை அனுப்ப வேண்டாம் என்றாலும், விடாப்பிடியாகத் தொடர்ந்து அனுப்பி அனைவரையும் கஷ்டத்துக்கு உள்ளாக்கும் செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கு மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அனுப்புவதில் நாட்டின் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். உள்பட தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.

செல்லிடப்பேசி இணைப்புப் பெறுவதற்கு போலி முகவரியைக் கொடுத்துள்ளவர்கள் மீதும் பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

முகவரியைச் சோதனையிடாமல் இணைப்புத் தந்த சம்பந்தப்பட்ட முகவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி நிறுவனத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கு யார் பொறுப்பேற்பது?

இப்போதைய சூழ்நிலையில் செல்லிடப்பேசி இல்லாவிட்டால் ஒருவருக்கும் ஒரு வேலையும் ஓடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தகவல் தொடர்புக்காக மட்டுமே என்பதைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.

இப்போதைய இளைஞர்கள் தங்கள் செல்லிடப்பேசியில் உள்ள கேமராக்களில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதில் காட்டும் அக்கறையைத் தங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் மீது காட்டுவதில்லை என்பது வேதனை தரும் உண்மை.

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே சென்ற பலர் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது, மாடியில் இருந்து தவறி விழுந்து இறப்பது போன்ற சம்பவங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

வாகனங்களில் செல்லும்போதும், நடந்துசெல்லும்போதும் பேச்சு மும்முரத்தில் நம்மைச் சுற்றிலும் நடப்பதை மறந்து தங்கள் உயிரை இனி மேலும் இழப்பதைத் தடுக்க வேண்டும்.

செல்லிடப்பேசி மூலம் குற்றங்கள் புரிந்தது நிரூபிக்கப்பட்டால், கடும் தண்டனைகளை வழங்க வேண்டும். இதேபோல, செல்லிடப்பேசி நிறுவனங்கள் அனுப்பும் விளம்பரக் குறுஞ்செய்திகளையும் தணிக்கை செய்து அனுப்ப வேண்டும்.

அந்தச் செய்திகள் சிறுவர்களுக்கோ, சிறுமியருக்கோ செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் மீறிச் செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024