Friday, April 3, 2015

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: வீடு தேடி வரும் அலுவலர்கள்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக விவரங்களைப் பெற வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தேடி வருவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்குடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த மார்ச் 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டத்தின் படி வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் பெறப்படும். தகவல்களைப் பொதுமக்கள் தாமாக முன்வந்து மக்கள் சேவை மையம், இணையதளம், சிறப்பு முகாம்கள் போன்றவற்றில் அளிக்கலாம்.
அதேவேளையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வாக்காளர்களின் வீடு தேடி வந்து விவரங்களைப் பெறுவார்கள். அப்போது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒரே பக்கத்தில் நகல் எடுத்துத் தர வேண்டும். அலுவலர்கள் வீடு தேடி வரும் போது கால தாமதத்தைத் தவிர்க்க முன்கூட்டியே பொதுமக்கள் நகல் எடுத்து தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான மனுக்கள் குறித்து சந்தேகங்களுக்கு பிரதி திங்கள், புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஏற்கெனவே வீடு வீடாகச் சென்று விவரம் பெறும் பணியைத் தொடங்கிவிட்டனர். ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதார் அட்டை எடுக்கும்போது வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024