சென்னை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முதன்மை பொறியாளர் செந்தில் ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்களை பணி நியமனம் செய்ததில், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திடீரென முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முதன்மை வேளாண் துறை பொறியாளர் செந்தில் ஆகிய இருவரையும் இன்று சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு முழுவதும் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று காலை 5.00 மணியளவில் அவரை கைது செய்து, நெல்லைக்கு அழைத்து சென்றனர்.
அவருடன் வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் கைது செய்து, நெல்லை அழைத்துச் சென்றனர். அங்கும், இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், விசாரணைக்கு பின் அவர்களை நெல்லை 3வது ஜுடிஷியல் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முதன்மை பொறியாளர் செந்தில் ஆகிய இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். பின்னர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி வழக்கறிஞர், அவருக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதனை பரிசீலித்த நீதிபதி அவருக்கு மருத்துவ பரிசோதனை அளிக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து இருவரரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அதன் பின்னர் சிறைச்சாலை மருத்துவமனையில் அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதனால், நாளையே இருவரையும் போலீஸ் காவலில் எடுக்கும் மனு சி.பி.சி.ஐ.டி. சார்பில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
No comments:
Post a Comment