Friday, April 3, 2015

அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில், மாணவர்களுக்குத் தேவையான பொருள்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் அருகே முசரவாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கீழ்ஒட்டிவாக்கம், முசரவாக்கம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 390 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் ஊர் கூடி குழந்தைத் திருவிழா நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. இந்த விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் அவரவர் சக்திக்கு தகுந்தார் போல், பள்ளிக்கு உதவிகளை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதாவது, சாக்பீஸ் பெட்டி, கரும்பலகை அளிப்பான், பேப்பர், விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட 25 வகையான பொருள்கள் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதை ஏற்ற பெற்றோர், பொதுமக்கள் தங்களது வருமானத்துக்குத் தக்கவாறு பள்ளிக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுக்க முன்வந்தனர்.

இதைத் தொடர்ந்து, ஊர் கூடி குழந்தைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பெற்றோர், பொதுமக்கள் சார்பில் கல்வி சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டு முசரவாக்கம் திரெüபதி அம்மன் கோயிலில் இருந்து தாம்பலத் தட்டுகளில் பள்ளிக்குத் தேவையான பொருள்களை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.

மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியா சென்ற இந்த ஊர்வலம் பள்ளியில் முடிவடைந்தது. அங்கு, பெற்றோர்கள் வழங்கிய பொருள்களை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் கூறியதாவது:

மாணவர்களின் கல்விக்காக தமிழக அரசு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. இருந்த போதிலும் சில தேவைகளை நிறைவேற்ற பெற்றோர்களும் முன்வர வேண்டும். அப்போதுதான் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். மேலும், பள்ளி மீது கிராம பொதுமக்களுக்கு தனி ஈடுபாடு ஏற்படும்.

இதைத் தொடர்ந்து, ஊர்கூடி குழந்தைத் திருவிழா நடத்த திட்டமிட்டோம். பெற்றோர், பொதுமக்கள் அவரவர் வசதிக்கு ஏற்ற பொருள்களை வாங்கித் தருமாறு ஒரு பட்டியலை வழங்கினோம். கட்டாயம் வழங்க வேண்டும் என்பது கிடையாது. விழாவில் கலந்து கொண்டால் போதும் என்றோம். ஆனால், பெற்றோர் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சாதாரண ஏழை கூலித் தொழிலாளர்கள் முதல் அவரவர் வருமானத்துக்கு ஏற்ப பள்ளிக்கு பொருள்களை வாங்கிக் கொடுத்தனர். இவற்றை முறையாக பயன்படுத்தி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் சிவக்குமார், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024