சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன. இதனால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்போரையும், வீடு தேடி வருபவர்களையும் அனுசரித்து நடக்கத் தொடங்கியுள்ளனர்.
வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் பல நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். தண்ணீரை குறைவாகத்தான் செலவிட வேண்டும், மின்சார கட்டணத்தை கூடுதலாக தரவேண்டும் என்றெல்லாம் வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகளால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் திணறி வந்தனர். இதற்காகவே கடன்பட்டு வீடு வாங்கிச் சென்றவர்கள் ஏராளம்.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருப்பதால் சென்னையில் சுமார் 30 ஆயிரம் அடுக்குமாடி வீடுகள் காலியாக உள்ளன. வங்கிக் கடனில் வீடு வாங்கியவர்கள் அதனை வாடகைக்கு விடும்போது அவர் மாதந்தோறும் கட்டும் கடன் தவணைத் தொகையைவிட வாடகை குறைவாக இருக்கிறது. அதனால் தன் கையில் இருந்து பணத்தைப் போட்டு மாத தவணை கட்டும் நிலையில் வீட்டு உரிமையாளர்கள் பலர் உள்ளனர். மேலும் வீட்டில் குடியிருப்பவர்கள் காலி செய்தால் மாத பட்ஜெட்டில் துண்டு விழுமே என்ற பயத்தால் குடியிருப்போரை அனுசரித்துப் போகத் தொடங்கியுள்ளனர்.
“கடந்த 10 ஆண்டுகளில் சொத்து வரியும், தண்ணீர் வரியும் 40 சதவீதம் அதிகரித்திருப்பதால் வீட்டுக்கான பராமரிப்பு செலவு அதிகமாகியிருக்கிறது. இருந்தாலும், வீட்டு வாடகையை அதிகரிக்க முடியவில்லை. அப்படி அதிகரித்தால் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வீட்டை காலிசெய்துவிடுகிறார்கள். புதியவர்கள் வராமல் நான்கைந்து மாதங்கள் வீடு காலியாக இருக்கிறது. அந்த காலத்தில் ஏற்படும் நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு சற்று குறைந்த வாடகைக்கு வீடு கொடுத்துள்ளேன்” என்கிறார் பெரம்பூரைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் ராஜேஷ்.
தனியார் வீடுகளுக்கு மட்டுமின்றி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டிக்கொடுக்கும் வீடுகளிலும் இதே நிலைதான். சோழிங்கநல்லூரில் சுயநிதித் திட்டத்தில் கட்டிக் கொடுத்த 900 அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 100 வீடுகள் வரை வாடகைக்குப் போகாமல் இருக்கின்றன. சென்னையில் பரவலாக வீடுகளில் ‘டூ லெட்’ போர்டு தொங்குவதைப் பார்க்க முடிகிறது. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பலரும் இடமாறிச் செல்வதால் வீடுகளில் ‘டூ லெட்’ போர்டு தொங்கும். சில நாட்களிலேயே வீடு வாடகைக்கு விடப்பட்டுவிடும். ஆனால், இப்போது சென்னையின் மையப் பகுதியில்கூட ஒரு மாதம் வரை வீடு காலியாகவே கிடக்கிறது. இதற்கு தண்ணீர் தட்டுப்பாடு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நகரில் சென்னைக் குடிநீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள் மட்டுமே வீடுகள் வாடகைக்கு போகிறது. மற்ற பகுதிகளில் உள்ள வீட்டு உரிமை யாளர்கள் நிலை திண்டாட்டம்தான்.
இதனால் வாடகை வீடு கேட்டு வருபவர்கள், வீட்டு உரிமையாளரிடம் நிபந்தனையின்றி வீடு வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது.
No comments:
Post a Comment