இரண்டு பேரின் மரணத்துக்கு காரணமான
ஒரு சாலை விபத்தில் வாகனத்தை ஓட்டிய நபருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த
ஓராண்டு சிறைத் தண்டனையை, பஞ்சாப் நீதிமன்றம் 24 நாள்களாக குறைத்ததை
உச்சநீதிமன்றம் இரு நாள்களுக்கு முன்பு ரத்து செய்தது.
இந்திய குற்றவியல் சட்டம் 304ஏ-இன் கீழ் தண்டனை
வழங்கும் நடைமுறைகள் மீள்பார்வை செய்யப்பட வேண்டும், இந்த சட்டப் பிரிவு
மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றோம் என
நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304ஏ-இன் படி, ஒரு
நபர் தனது கவனக்குறைவினால் ஏற்படுத்தும் மரணத்துக்காக அதிகபட்சம் 2
ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் என்பது மட்டுமே தண்டனையாக
இருக்கின்றது. இந்த சட்டப் பிரிவை அனைத்து வகையான சாலை விபத்துகளுக்கும்
பொருத்துவது முறையல்ல என்பதைத்தான் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
வாகன விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும்
பணக்காரர்களும் வலியோரும் குறைந்த தண்டனையுடன் தப்பித்துவிடுகிறார்கள்;
கடுமையான தண்டனை கிடைக்கச் செய்வதற்கான சட்ட நடைமுறைகளை மத்திய அரசு
மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
2007-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நடிகர் சல்மான் கான்
அதிவேகமாக காரை ஓட்டி, சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றியதில்
இரண்டு பேர் இறந்த விவகாரம், இன்னும்கூட முடிவுக்கு வராமல் நீதிமன்றத்தில்
வழக்கு நடைபெற்றுவரும் சூழலில், பணக்காரர்களும் வலுத்தவர்களும் குறைந்த
தண்டனை பெற்று தப்பிவிடுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறியிருப்பதை
எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் கருத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த
களம் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. சாலைப் போக்குவரத்து மற்றும்
பாதுகாப்பான பயண மசோதாவை, மக்கள் கருத்துக்கேட்பு முடிந்த நிலையில்,
அனைத்து மாநிலங்களுக்கும் கருத்துக் கேட்புக்காக அனுப்பியிருக்கிறது மத்திய
சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்.
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்குக்
காரணம் மது அருந்தி வாகனம் ஓட்டுதல்தான். ஆகவே, இந்த மசோதாவில் மதுபோதையில்
வாகனம் ஓட்டுபவருக்கு அபராதம், தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. மோட்டார்
வாகனச் சட்டம் 1988-இல் விதிக்கப்பட்டுள்ள அபராதம், தண்டனையைக் கடுமையாக
மாற்றியுள்ளனர்.
தற்போதைய நடைமுறைப்படி, ஒருவர் மது அருந்தியிருந்தார்
என்பதற்கு, அவரது 100 மில்லி கிராம் ரத்தத்தில் 30 மில்லி கிராம் மது
இருக்க வேண்டும். புதிய மசோதா இந்த அளவை, 100 மில்லி கிராம் ரத்தத்தில் 20
மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தாலும் அவர் மீது மது அருந்தி வாகனம்
ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்ய வகை செய்கிறது. தண்டனையும்
கடுமையாக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டுநர் என்றால், முதல்முறை
குற்றத்துக்கு ரூ.5,000 அபராதம், 50 மணி நேர சமூக சேவை (கம்யூனிட்டி
சர்வீஸ்) அல்லது 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும், தொடர்ந்து
அதே குற்றத்தைச் செய்தால் ரூ.10,000 அபராதம், ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு
ரத்து என்றும் மாற்றப்பட்டிருக்கிறது.
இதுவே கார், பேருந்து போன்ற நான்கு சக்கர வாகன
ஓட்டுநர்கள் முதல் முறையாகப் பிடிபட்டால், ரூ.10,000 அபராதம், 6
மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும், தொடர்ந்து அதே தவறைச் செய்து
பிடிபட்டால் ரூ.20,000 அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை, ஓராண்டுக்கு
ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும் மாற்றப்பட்டிருக்கிறது.
எந்த மாநிலமும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்காது என
நம்பலாம். இதனை இன்னும் கடுமையாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாலும்
ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆனால், காவல் துறையினர் இந்தக் கடும் சட்டத்தை வெறும்
லஞ்சம் பெறுவதற்கான மற்றொரு "சலுகைச் சட்டமாக' மாற்றிக்கொண்டால் குடிமகன்
தப்பிப்பதும், இந்தியக் குடிமகன் இறப்பதும் தொடர் கதையாகவே இருக்கும்.
ஓட்டுநர்கள் மது அருந்தி வாகனம் ஓட்டும் வழக்கத்தை கடுமையான நடவடிக்கையால்
தடுத்து நிறுத்த முடிந்தால் மட்டுமே, அதன் தொடர் நிகழ்வாகிய விபத்து
மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். ஆகவே, இந்தச் சட்டம்
உயிர்ப்புடன் இருப்பதும் இல்லாததும் காவல் துறையின் அணுகுமுறையில்தான்
உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளில் வாகன
ஓட்டுநர் மது போதையில் இருந்தார் என்பது மறைக்கப்படுகிறது. இதற்காகப்
பெருந்தொகை லஞ்சமாகத் தரப்படுகிறது. இதில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு
கிடையாது. ஏழை என்றால் லஞ்சத்தின் அளவு குறையும். பணக்காரர் என்றால்
லஞ்சத்தின் அளவு கூடும் என்பதாகத்தான் நிலைமை இருக்குமென்றால், இந்தச்
சட்டத்தைக் கடுமையாக்கினாலும் பயன் விளையாது.
குறைந்தபட்சமாக, மரணம் ஏற்படுத்திய விபத்துகளிலாகிலும்
ஓட்டுநரின் ரத்த மாதிரிகளை எடுப்பதை காவல் துறை மட்டுமன்றி, வேறு
அதிகாரிகளின் மேற்பார்வையிலும் நடத்தலாம். வேறு தடயங்கள், விடியோ பதிவுகள்
மூலம் அந்த ஓட்டுநர் மது அருந்தியிருந்ததை காவல் துறையும் அதிகாரிகளும்
மறைத்தார்கள் என்பது உறுதிப்படும்போது அவர்களைத் தண்டிக்கும்
வெளிப்படைத்தன்மையும் உருவாக வேண்டும்.
நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் மது விற்பனை, மதுக்கூடம்
இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தும்கூட இதுநாள்வரை அது
நடைமுறைக்கு வரவில்லை. நிலைமை இதுவென்றால், பணக்காரர்களும் வலுத்தவர்களும்
சட்டத்தின் பிடியிருந்து தப்பிக்கத்தான் செய்வார்கள்!
No comments:
Post a Comment