நெஸ்லே சந்தைப்படுத்தியுள்ள ஒன்பது வகை மேகி உணவுப் பொருள்கள் "பாதுகாப்பற்றவை, உடலுக்கு ஊறு விளைவிப்பவை' என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனது ஆய்வுகளுக்குப் பிறகு ஜூன் 5-இல் அறிவித்திருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் "மேகி ஓட்ஸ் மசாலா நூடுல்ஸ்' என்ற புதிய உணவுப் பொருளின் விற்பனைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நெஸ்லே, அனுமதி கிடைக்கும் முன்பாகவே அதைச் சந்தைப்படுத்தியிருப்பது சட்டத்தை மீறிய, தண்டனைக்குரிய செயல் என்றும் தெரிவித்திருக்கிறது.
1982 முதலாகவே சுமார் 32 ஆண்டுகளாக நெஸ்லே நிறுவனத்தின் "2 நிமிட நூடுல்ஸ்' இந்தியாவில் சந்தையில் இருந்தும்கூட, இதுநாள் வரை இந்த உணவுப் பொருளின் பாதுகாப்புத் தன்மை குறித்து மாதிரி ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று தோன்றவே இல்லை என்பது ஆச்சரியமும், வேதனையும் தருவதாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாகவே, பதப்படுத்தப்பட்ட உணவின் கேடுகள் குறித்த விழிப்புணர்வுக்கு ஒரு சில பத்திரிகைகளும், ஊடகங்களும் மேலதிகமான கவனம் தந்து வருவதோடு, இந்தப் பொருள்களின் பாதுகாப்பு குறித்துத் தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டு, எச்சரிக்கவும் செய்தன.
இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதி செய்யப்படும் பழ வகைகள் என பலவற்றைக் குறித்தும் எச்சரிக்கை செய்யும் கட்டுரைகள், ஊடக நிகழ்வுகள் இடம்பெறவும் செய்தன.
அடுமனைகளில் கோதுமை ரொட்டி தயாரிப்பின்போது அவை வெண்ணிறமாகவும், கூடுதலாகப் பூரித்தெழவும் சேர்க்கப்படும் வேதிப் பொருள் குறித்த விழிப்புணர்வும், அஜினோமோட்டோ உப்பு உடலுக்கு ஏற்படுத்தும் தீமைகள் குறித்தும் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகின. ஆனால், இப்போதுதான், நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீதான ஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பற்றது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியா முழுவதிலும் இதற்குத் தடை விதிக்கப்படும் என்பது நிச்சயம். இதிலும் தமிழகம் தனித்துவத்துடன், சந்தையில் உள்ள நான்கு நிறுவனங்களின் நூடுல்ஸýக்கும் தடை விதித்துள்ளது. வாய்வாய் எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ஸ்மித் அன்டு ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மற்ற நிறுவன நூடுல்ஸ் குறித்து மாதிரி ஆய்வுகள் நடத்தும் முயற்சிகளில்கூட மற்ற மாநிலங்கள் இறங்கவில்லை. அனைத்து நிறுவனங்களின் நூடுல்ஸ் மசாலாக்கள் அனைத்தும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும்.
எத்தனை கோடி ரூபாய் செலவழித்தாலும் ஏற்படுத்த முடியாத உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை இரண்டே நாளில் ஏற்படுத்திவிட்டது நெஸ்லே தயாரிப்பான 2 நிமிட நூடுல்ஸ். ஒவ்வொரு வீட்டிலும் இது குறித்த பேச்சும், அச்சம் கலந்த விவாதமும் கடந்த இரண்டு நாள்களாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தத் தருணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள ஆயத்த உணவுப் பொருள்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உள்படுத்தவும், அதன் வேதிப் பொருள்களை மறுஆய்வுக்கும், தர நிர்ணயத்துக்கும் உள்படுத்தவும் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் இனி அமையாது.
நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் நூடுல்ஸýடன் மசாலாவை தனி பொட்டலங்களில் வழங்குவதைப் போல, நாடு முழுவதிலும் ஹோட்டல்களிலும், தள்ளுவண்டிக் கடைகளிலும் பயன்படுத்தப்படும் காலிபிளவர் மசாலா, சில்லிசிக்கன் மசாலா பொட்டலங்கள் உள்ளூர் நிறுவனங்களால் இலச்சினையோடும், வணிக இலச்சினை இல்லாமலும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன என்பதையும், அவற்றிலும் காரீயம், அஜினோமோட்டோ அளவுக்கு அதிகமாக இருப்பதையும் மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.
இத்தகைய மசாலா பொட்டலங்களையும் ஆய்வுக்கு உள்படுத்தி தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய மசாலாவைப் பயன்படுத்தும் இந்தியர் எண்ணிக்கை, நூடுல்ஸ் பயன்படுத்தும் இந்தியர்களைவிட அதிகம் என்பதையும் மறக்கலாகாது.
அஜினோமோட்டோ உப்பு விற்பனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒருபுறம் இருக்க, இந்திய உணவு தானியங்களில் காரீயம் அளவு என்ன என்பது குறித்த ஆய்வும் இன்றியமையாதது. ரசாயன உரங்கள் மட்டுமன்றி, தானியங்களில் காரீயம் சேர நிலத்தின் தன்மையும் காரணமாகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம்! ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலங்களில் விளையும் உணவு தானியங்களில் காரீயத்தின் அளவைத் தற்சோதனை நடத்துவதும் அவசியம்.
இந்தியா முழுவதும் பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த வேளையில், பாரம்பரிய உணவுப் பழக்கங்களுக்குத் திருப்புவது மிக எளிது. மேற்கத்திய உணவு முறைகள் கேடு விளைவிப்பவை என்று சொல்வதைக் கொஞ்சம் நிறுத்திவைத்து, அவற்றுக்கு இணையான நல்ல, ருசியான இந்திய உணவுகளை, குறிப்பாகக் குழந்தைகளுக்கு, அறிமுகம் செய்ய வேண்டிய தருணம் இதுவே. குழந்தைகளுக்கு உள்ளூர் காய்கறிகள், உள்ளூர் பழ வகைகளின் சுவையை அறிமுகம் செய்யவும், சிறுதானிய உணவுகள், பயறு வகை உணவுகளைக் கொடுத்துப் பழக்குவதும், இந்தியத் தின்பண்டங்களை விதவிதமாகச் செய்து கொடுப்பதும் இன்றைய பெற்றோர்களின் கடமை.
32 ஆண்டுகளாக நெஸ்லே பழக்கப்படுத்திய பாதுகாப்பற்ற சுவை, இரண்டே நாளில் காணாமல் போனபோதிலும், கேட்டிலும் ஓர் நன்மை விளைந்திருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் நமது புத்திசாலித்தனம் இருக்கிறது.