Saturday, June 6, 2015

தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி செலுத்தியதால் கல்லூரி மாணவியின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு பாதிப்பு: ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.2 லட்சம் ஊசிபோட்டு தீவிர சிகிச்சை

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சர்மிளா.

தனியார் கிளினிக்கில் காய்ச் சலுக்கு ஊசி போட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு கல்லூரி மாணவியின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு பாதிக்கப் பட்டுள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அந்த மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சென்னை பரங்கிமலை முத்துரங்க முதலி தெருவை சேர்ந்தவர் கோசலைராமன் (40). துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சர்மிளா (18). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த மாதம் 22-ம் தேதி சர்மிளாவுக்கு காய்ச்சல் ஏற்பட் டதால் பரங்கிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். காய்ச்சல் குறையாததால், மறுநாள் 23-ம் தேதி அதே பகுதியில் உள்ள வேறு கிளினிக்குக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த டாக்டர் சர்மிளாவுக்கு ஊசி போட்டுள்ளார். இதையடுத்து 2 நாட்கள் கழித்து சர்மிளாவுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக உடம்பில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அவரது உடல் முழு வதும் தீக்காயங்கள் ஏற்பட்டது போல தோல் உரிந்துவிட்டது.

ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஊசிகள்

இதையடுத்து கடந்த மாதம் 29-ம் தேதி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சர்மிளா சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பற்றி டாக்டர்கள் கூறியதாவது:

சர்மிளாவுக்கு ஏற்பட்டுள்ள ஒவ்வாமைக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து வருகிறோம். முதல் கட்ட பரிசோதனையில் அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பது தெரிந்தது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊசி போட்டுள்ளோம். தலா ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 ஊசிகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அவருக்கு போடப்பட்டுள்ளன.

சர்மிளா மருத்துவமனைக்கு வரும் போது மிகவும் மோசமான நிலையில் இருந்தார். தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறப்பு வார்டில் தண்ணீர் படுக் கையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் அவரது உடல்நிலை சரியாகிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தந்தை கண்ணீர்

இது தொடர்பாக சர்மிளாவின் தந்தை கோசலைராமன் கூறும்போது, “கடந்த மாதம் 22-ம் தேதி பரங்கிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகளுக்கு போடப்பட்ட ஊசியில் எந்த பிரச்சினையும் இல்லை. 23-ம் தேதி தனியார் கிளினிக்கில் ஊசி போட்ட பிறகுதான் இப்படி ஆகிவிட்டது. ஊசி போட்ட டாக்டரை தொடர்புகொண்டு மகளை வந்து பார்க்கும்படி தெரிவித்தேன். ஆனால், அவர் கடைசி வரை வரவே இல்லை. இந்த நிலையில் மகளை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய மகளைப் போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது. ஊசி போட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

இதற்கிடையில் மகளின் நிலைமைக்கு காரணமான தனியார் கிளினிக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மவுன்ட் காவல் நிலையத்தில் கடந்த 4-ம் தேதி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

எம்சிஐ-யில் புகார் அளிக்கலாம்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவரும், இந்திய மருத்துவக் கவுன்சில் (தமிழக கிளை) உறுப்பினருமான டாக்டர் கே.செந்தில் கூறியதாவது:

சில நேரங்களில் ஒரு சில மருந்துகளால் ஒவ்வாமை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற ஆபத்தான சம்பவங் கள் எப்போதாவது ஒன்று நடக்கிறது. பெண்ணின் தந்தை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் புகார் கொடுக்கலாம்.

அந்த புகாரின்படி விசாரணை நடத்தி டாக்டரின் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப் படும். டாக்டர்களிடம் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் தங்க ளுக்கு போடப்படும் ஊசி மற்றும் எழுதிக் கொடுக்கப்படும் மாத்திரை, மருந்துகளின் தன்மை மற்றும் பக்க விளைவு பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். நோயாளிகளின் கேள்விகளுக்கு டாக்டர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024