மெட்ரோ ரெயிலில் டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும். இந்த ஏ.சி. ரெயிலில் ஓசி பயணம் முடியாது.
படியில் பயணம் இனி இல்லை
மின்சார ரெயில்களில் பயணம் செய்து பழக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு இன்று அறிமுகப்படுத்தப்படும் மெட்ரோ ரெயில் பயணம் புதிய அனுபவத்தை ஏற்படுத்தப்போகிறது. முதல் மெட்ரோ ரெயில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி தனது பயணத்தை இன்று தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில், ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையம் (சி.எம்.பி.டி.) ஆகிய ரெயில் நிலையங்கள் வருகின்றன.
மின்சார ரெயில்களில் இஷ்டம்போல் ஏறி, இறங்கி படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது போல் மெட்ரோ ரெயில்களில் பயணிக்க முடியாது. மெட்ரோ ரெயில்களில் பயணிக்க வேண்டும் என்றால், 3 நிலைகளை கடந்து செல்ல வேண்டும்.
அதாவது, ரெயில் நிலைய தரைத்தளத்திற்கு யார் வேண்டுமானாலும் சாதாரணமாக செல்ல முடியும். அடுத்ததாக உள்ள முதல் தளத்தில் டிக்கெட் கவுண்டர் உள்ளது. அங்கு சென்று எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதை கூறி, அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும். விசிட்டிங் கார்டு அளவிலான அட்டையில் டிக்கெட் வழங்கப்படும்.
தானியங்கி கதவு
இந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ரெயில் ஏறும் பிளாட்பாரத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வாயிலில் உள்ள எந்திரத்தின் முன்பு டிக்கெட்டை காண்பித்தால் தானியங்கி கதவு திறக்கும். அதன் பிறகு பிளாட்பாரத்திற்கு செல்ல முடியும்.
ரெயில் வந்து நின்றதும் 4 பெட்டிகளில் உள்ள கதவுகள் ஒரே நேரத்தில் திறக்கும். அதன் பிறகுதான் பயணிகள் இறங்கவோ, ஏறவோ முடியும். ரெயில் புறப்படும் தறுவாயில் அதில் உள்ள கதவுகள் தானாக மூடிக்கொள்ளும். இதனால், ரெயிலில் தொங்கியபடி யாரும் பயணம் செய்ய முடியாது. கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் காத்திருந்து அடுத்த ரெயிலில் தான் செல்ல முடியும்.
ஓசி பயணம் முடியாது
ரெயில் பயணத்தின்போது டிக்கெட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், இறங்க வேண்டிய இடத்தில் ரெயிலை விட்டு இறங்கியதும், வெளியேறும் வாயில் அருகே உள்ள பெட்டியில் பயணம் செய்த டிக்கெட்டை போட்டால் தான் தானியங்கி கதவு திறக்கும். அதன் பிறகுதான் வெளியேற முடியும். அதனால், டிக்கெட் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் ஓசி பயணம் செய்ய முடியாது.
அதேபோல், டிக்கெட் எடுத்த இடத்தை தாண்டியும் பயணம் செய்ய முடியாது. அவ்வாறு பயணம் மேற்கொண்டால் இறங்கும் ரெயில் நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது மாட்டிக்கொள்வோம். அங்குள்ள ரெயில்வே அதிகாரியிடம் அபராதம் கட்டிய பிறகுதான் ரசீது வாங்கிக்கொண்டு வெளியே செல்ல முடியும்.
ரீ சார்ஜ் செய்யும் வசதி
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய 3 விதமான டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதாவது, தினசரி பயணம் செய்வதற்கு தனியாக டிக்கெட் வழங்கப்படும். இதேபோல், நிரந்தர டிக்கெட் அட்டை முறையும் உள்ளது. ரூ.50 முதல் ரூ.300 வரை பணம் செலுத்தி நிரந்தர டிக்கெட்டை பெற முடியும்.
ஒவ்வொரு முறையும் இந்த நிரந்தர டிக்கெட்டை நுழைவு வாயிலில் காண்பித்து ரெயிலில் பயணம் செய்ய முடியும். அதற்கான கட்டணம் கழிக்கப்படும். நிரந்தர டிக்கெட் அட்டையில் உள்ள பணம் தீர்ந்ததும், மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். அதற்கான ரீசார்ஜ் எந்திரங்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. பணம் அல்லது ஏ.டி.எம். கார்ட்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்ய முடியும்.
10 நிமிடத்திற்கு ஒன்று..
மேலும், சுற்றுலா குரூப் டிக்கெட் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த டிக்கெட்டில் 20 பேர் வரை பயணம் செய்ய முடியும். ஏறும் இடத்தில் டிக்கெட்டை காட்டியவுடன் கதவுகள் திறக்கும். அங்குள்ள ரெயில்வே ஊழியர் டிக்கெட்டில் உள்ள எண்ணிக்கையின்படி பயணிகளை உள்ளே அனுமதிப்பார். இறங்கும் இடத்திலும் இதே முறை பின்பற்றப்படும்.
மெட்ரோ ரெயிலுக்கான பயண கட்டணம் விவரம் இன்று தான் அதிகாரபூர்வமாக தெரியவரும். தினமும் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். முதலில், 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரெயில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment