1966-ம் ஆண்டு முதல் முதலாக ஏவிஎம் நிறுவனத்தில் படம் நடித்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர். அந்த பேனரில் அவர் நடித்தது ஒரே படம்தான். அந்தப் படமும் ப்ளாக்பஸ்டர். வெள்ளிவிழாவைத் தாண்டி ஓடியது. இந்தப் படத்துக்காக 5 நாட்கள் மட்டும் சிம்லாவில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
அப்போது எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்தது. போரில் காயம் பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இந்திய ஜவான்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் போயிருந்தார் எம்ஜிஆர். எம்ஜிஆரைப் பார்த்ததுமே அங்கிருந்த தென்னக வீரர்கள் அடையாளம் கண்டு, நெகிழ்ந்து போனார்கள்
. நமது ராணுவ வீரர்களுக்காக அப்போது சிம்லாவில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசியிருக்கிறார்கள் எம்ஜிஆரும் சரோஜாதேவியும். அப்போது எம்ஜிஆர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்: "நண்பர்களே, இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நீங்கள் எவ்வளவு பணம் திரட்டுகிறீர்களோ, அதற்குச் சமமான தொகையை நான் எனது தனிப்பட்ட நிதியாகத் தர விரும்புகிறேன்," என்றார். இப்படி ஒரு அறிவிப்பை யாருமே அங்கு எதிர்ப்பார்க்காததால் திகைத்துப் போய்விட்டார்கள். கைத்தட்டல்களால் அந்தப் பகுதி அதிர்ந்தது.
அன்றே, அங்கு திரண்ட நிதி எவ்வளவு என்று கேட்டுத் தெரிந்து கொண்ட எம்ஜிஆர், தன் சம்பளத்தில் கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, அங்கேயே பணத்தை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று நிதிக்குக் கொடுத்துவிட்டார். அந்த ஒரே இரவில், வட இந்தியா முழுவதும் எம்ஜிஆரின் வள்ளல்தன்மை பரவி பெரிய செய்தியாகிவிட்டது. மக்களின் ஹீரோவாகிவிட்டார் மக்கள் திலகம். அதற்கடுத்த தினங்களில் சிம்லா பகுதியில் எம்ஜிஆர் எங்கே போனாலும் மக்கள் வெள்ளம்.. அந்த வெள்ளம் அவர் விமானமேறும் வரை தொடர்ந்து கொண்டே இருந்ததாம்!
No comments:
Post a Comment