Tuesday, June 30, 2015

இதை பொதுமக்கள் வரவேற்பார்கள்

கடந்தவாரம் வெள்ளிக்கிழமையன்று, இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள், 40 ஆண்டுகளுக்கு முன்பு அதேநாளில் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையின் சோக நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தின. 1975–ம் ஆண்டு ஜூன் 12–ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு, இந்திரா காந்திக்கு எதிராக, அவர் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று வழங்கிய ஒரு தீர்ப்புதான், இந்த நெருக்கடிநிலை பிரகடனத்துக்கு மூலகாரணமாக அமைந்தது. அனைத்து அரசியல் தலைவர்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் திருமணம் முடிந்து புதுமாப்பிள்ளை என்ற பெயர் மாறுவதற்கு முன்பே கைது செய்யப்பட்டு சொல்லொணாத் துயரங்களை சிறையில் பட்டார். அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டன. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்பட அனைத்து அடிப்படை உரிமைகளுக்கும் இடமில்லாத நிலை. ‘இம்’ என்றால் சிறைவாசம்தான், ‘ஏனென்றால்’ வனவாசம்தான். பத்திரிகைகளுக்கு கடுமையான ‘சென்சார்’. ஜனநாயகத்தின் இருண்டகாலமாக கருதப்பட்டது.

இவ்வளவு கொடுமைகள் இழைக்கப்பட்டாலும், சாதாரண பொதுமக்களின் வாழ்வில் சில நன்மைகளும் இருந்தன. விலைவாசிகளெல்லாம் கட்டுக்குள் இருந்தன. கலப்படம், கள்ளக்கடத்தல், பதுக்கல் எல்லாம் போயே போயிற்று. ஓட்டல்களில் ஜனதா சாப்பாடு என்ற அருமையான சாப்பாடு ஒரு ரூபாய்க்கு எங்கும் கிடைத்தது. அரசு ஊழியர்களிடம் லஞ்சம் என்பதே இல்லை. அனைத்து அரசு ஊழியர்களும் ‘டாண்’ என்று 10 மணிக்கு இருக்கையில் அமர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளையெல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றினர். ரெயில்களெல்லாம் சரியான நேரத்தில் புறப்பட்டன, போய் சேர்ந்தன. போலீஸ்காரர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் வேலைசெய்தனர். இந்தநாளில் அதையும் நினைத்துப்பார்த்த பொதுமக்கள், அந்த வகையில் மட்டும் அந்த நாட்கள் மீண்டும் வராதா என்று ஏங்குகிறார்கள்.

ஆனால், அதுபோன்ற ஒரு நிலையை மத்திய அரசாங்க அலுவலகங்களில் உருவாக்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்கள் தாமதமாக வருவதைத்தடுக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஒவ்வொரு அரசு ஊழியரும் கண்டிப்பாக வாரத்துக்கு 40 மணி நேரம் அதாவது, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை பார்க்கவேண்டும், ஒரு மாதத்துக்கு இருமுறை மட்டும் 30 நிமிடங்கள்வரை தாமதமாக வரலாம், அதற்குமேல் தாமதமாக வரும் அரசு ஊழியர்களுக்கு ½ நாள் லீவு எடுத்ததாக பதிவு செய்யவேண்டும், அவர்கள் பணி பதிவேட்டில் அதிகாரிகள் எதிர்மறை குறிப்புகளை எழுதலாம். அவர்கள் பணியாற்றும் நேரம் உள்பட அனைத்து விவரங்களையும் அதிகாரிகள் இணையதளம் மூலமாக கண்காணிக்கவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. இந்த ஊதியக்குழு, அவர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகை உயர்வுகளை பரிந்துரை செய்யும். 7–வது ஊதியக்குழு தன் பரிந்துரையை வருகிற ஆகஸ்டு மாதம் 28–ந்தேதி அளிக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசிலும் சம்பள உயர்வு அளிக்கப்படும். அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் அதேநேரத்தில், அவர்கள் பொதுமக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளையும் மத்திய–மாநில அரசுகள் உறுதிப்படுத்தவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நெருக்கடி நிலைபோல, லஞ்சத்துக்கு அரசு அலுவலகங்களில் இடமே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும். தெலுங்கானா போல, பொதுமக்களின் கோரிக்கைகள் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் நிறைவேற்றப்படவேண்டும் என்பது அவர்களுக்குள்ள உரிமை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024