குருப்பெயர்ச்சி ஜூலை 5
நவக்கிரங்களில் ஒருவராக இருந்து ஆட்சி செய்பவர் குரு பகவான். குருப் பெயர்ச்சி என்பது இவரின் சஞ்சாரத்தையே குறிக்கும். ஈசனே நவக்கிரகங்களின் ஆதி நாயகன் என்பதால், சிவ குருவாய் இருக்கும் தட்சிணாமூர்த்தி இக்குருவின் குரு. குருப் பெயர்ச்சியையொட்டி, இந்த இரு குருவையும் சிறப்புப் பூஜை செய்து வணங்கலாம்.
குருவைப் பொறுத்தமட்டில், பெயர்ச்சி ஆவதற்கு முன்னரே பெயர்ச்சி பலன்களைக் காட்டிவிடக் கூடியவர். அதனால் குருப் பெயர்ச்சிக்கு முன்னரும், அன்றும், பின்னரும் வழிபடுவதால் கேட்ட வரம் பெற்று மனமகிழ்ச்சியை அடையலாம்.
குரு சன்னிதியில் நின்று கோரிக்கைகளை மனதார நினைத்தாலே போதும், அவற்றைக் காலாகாலத்தில் நிறைவேற்றி நலம் பல பெற வைப்பார் என்பது ஐதீகம். இத்தகைய குரு தனிச் சன்னிதி கொண்டு அருள்புரிவது தேவாரத் திருப்பெயரான திருத்தென்குடித்திட்டை எனும் திட்டையில்.
குருவுக்குத் தனி சன்னிதி
நவக்கிரகங்களில் சுபகிரகம் என்றழைக்கப்படும் குரு பகவான் திட்டையில் தனி சன்னிதி கொண்டு காட்சி அளிக்கிறார். இதில் விசேஷம் என்னவென்றால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையே இச்சன்னிதி அமைந்துள்ளது அபூர்வம்.
புத்திகாரகர், தனகாரகர் என்று அழைக்கப்படும் குரு, தங்கத்துக்கும், தனத்துக்கும் அதிபதி. இவர் பக்தர்களின் தோஷங்களை நீக்கி உலகியல் இன்பங்களை வழங்குபவர் என்பது ஐதீகம்.
மூலவர், வசிஷ்ட முனிவர் தவம் புரிந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். பிரளய காலத்திலும் மூழ்காமல் இந்த இடம் இருந்ததால் திட்டு அதாவது மேடு எனப் பொருள்படும் வகையில் திட்டை எனப் பெயர் பெற்றது இந்தத் தலம். இறைவி உலகநாயகி என்னும் மங்களாம்பிகை. பெண்கள் துயர் தீர்க்க முதலில் வரும் முதல்வி எனலாம்.
தாவரங்களாக அருள்புரியும் தேவர்கள்
சிவன் கோயில் என்றாலும் மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தால் உருவாக்கப்பட்டது இங்குள்ள சக்கர தீர்த்தம். மற்றுமோர் அற்புதம், இத்தலத்தில் தேவர்கள் மரம், செடி, கொடிகளாகப் பிறந்து இறைவனை வழிபடுகின்றனர் என்றும், ருத்ரன் ஆல மரமாகவும், விஷ்ணு அரசமரமாகவும், பிரம்மன் பூவரசு மரமாகவும் தோன்றியுள்ளனர் என்றும் தல புராணம் தெரிவிக்கிறது. ஆனால் வில்வ மரம்தான் தல விருட்சம்.
இத்திருக்கோயில் கொடி மரம் முதல் விமானக் கலசம் வரை அனைத்தும் கருங்கல்லால் ஆனவை. மூலவர் வசிஷ்டேஸ்வரர் சன்னிதி விமானத்தில் சந்திரகாந்தக் கல் அமைக்கப்பட்டுள்ள விதம் கட்டடக் கணிதக் குறிப்பாக இருக்கிறது.
சரியாக நாழிகை ஒன்றுக்கு அதாவது இருபத்தி நான்கு நிமிடங்கள் ஒரு நாழிகை, ஒரு சொட்டு நீர் நேராக சிவனின் பாண லிங்கத்தின் உச்சியில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அதனால், அபிஷேகப் பிரியனான சிவனுக்கு சதாசர்வ காலமும் அபிஷேகம் இயற்கையாகவே நிகழ்வதோர் அற்புதம்.
சிறப்பு ஹோமம்
குருப் பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு பரிகார ஹோமம் ஆகியவை குரு பரிகாரத் தலம் என்றழைக்கப்படும் தஞ்சை மாவட்டம் திட்டையில் அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற உள்ளது.
ஜூலை 13, 14 ந் தேதிகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் லட்சார்ச்சனை நடைபெறும். ஜூலை 15 முதல் 19 ந் தேதி வரை காலை 8 மணி முதல் 11 மணி வரை சிறப்புப் பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment