Tuesday, June 30, 2015

கணவரின் பெற்றோர் இறந்ததாகக் கூறி வாரிசுச் சான்று பெற்ற மருமகள்!

உயிரோடு இருக்கும் தங்களை இறந்துவிட்டதாகக் கூறி மருமகள் பெற்ற வாரிசுச் சான்றிதழை மாற்றித் தரக்கோரி மாமனார், மாமியார் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அவர்களுக்கு உடனடியாக வாரிசுச் சான்றிதழ் மாற்றித்தரப்பட்டது.
மதுரை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான்(57). இவரது மனைவி சாரா பானு(51). இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் கடைசி மகனான அப்துல் ரஹ்மான்(26) கடந்தாண்டு டிசம்பர் 13-இல் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
இதையடுத்து வாரிசுச் சான்றிதழ் கோரி அப்துல் ரஹ்மானின் தந்தை ஷாஜகான் மதுரை வடக்கு வட்டாட்சியரை அணுகியுள்ளார். ஆனால், அதற்கு முன்பே அப்துல் ரஹ்மானின் மனைவி மும்தாஜ் பேகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசுச் சான்றிதழ் பெற்றுவிட்டதாகவும், அதில் தனது மாமனார் ஷாஜகான், மாமியார் சாரா பானு இறந்துவிட்டதாகத் தவறான தகவல்களையும் அவர் தெரிவித்து இருப்பதும் தெரியவந்தது.
இதையறிந்த ஷாஜகான், சாரா பானு ஆகியோர் சான்றிதழை மாற்றித்தரக் கோரி கடந்த 15 நாள்களாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அலைந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க திங்கள்கிழமை வந்தனர்.
இந்நிலையில் உயிரோடு இருப்பவர்கள், இறந்துவிட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் பரவியது.
தகவலறிந்த வடக்கு வட்டாட்சியர் ராமன், இருவரையும் அழைத்து விசாரித்தார். பின்னர், உடனடியாக திருத்தம் செய்யப்பட்ட வாரிசுச் சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து மதுரை வடக்கு வட்டாட்சியர் ராமன் கூறியது: வாரிசுச் சான்றிதழ் வழங்கும் பிரிவு ஊழியரின் கவனக்குறைவு காரணமாக சான்றிதழ் பதியும்போது மாமனார், மாமியார் இறந்துவிட்டதாக வாரிசுச் சான்றிதழில் எழுதப்பட்டுவிட்டது. அதை திருத்தி உடனடியாகப் புதிய வாரிசு சான்றிதழ் அளிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024