Sunday, June 28, 2015

"மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்குத் தடையில்லை' By சென்னை First Published : 28 June 2015 03:06 AM IST

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைக்க எந்தத் தடையும் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வரும் திங்கள்கிழமை தொடக்கிவைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை ஜூன 30-இல் நடைபெறவுள்ள நிலையில், புதிய திட்டத்தை முதல்வராகவும், தொகுதியின் வேட்பாளராகவும் உள்ள ஜெயலலிதா தொடங்கி வைக்கலாமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, சனிக்கிழமை விளக்கமளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, "மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரப்பட்டது. அந்தச் சேவையை தொடங்கி வைப்பதில் எந்தத் தடையும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

இதனிடையே, மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தமிழக அரசிடமிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024