Wednesday, June 24, 2015

காணாமல் போகும் கிராமங்கள்



நாளுக்கு நாள் வீங்கிப் பெரு(க்)கும் நகரங்களின் தாக்கங்கள் சூழ்ந்து சூறையாடியவற்றுள் கிராமங்கள் தலையானவை.
இந்தியாவின் ஆன்மா எனக் கருதத்தக்க கிராமங்களைத் திரைக்காட்சிகளில் மட்டும்தான் திரும்பக் காண முடியும் என்கிற அளவுக்கு உள்ளீடழிந்த பொக்கைகளாகக் கிராமங்கள் நிற்கின்றன.

வேளாண் பணிகளுக்காக வேண்டி, ஊர் ஓரத்துச் செய்(வயல்)களை ஒட்டியிருந்த ஒன்றிரண்டு களத்து வீடுகளை, குறுங்காடுகளை பக்கத்தில் உள்ள குறுநகர்கள், நகர், நகர் என நகர்த்தி விரிந்ததன் காரணமாய், தனித்தனி நகர்களாகிவிட்டன.
வேம்போ, புளியோ அடையாளமாக ஒற்றை நிறுத்தம் கொண்டிருந்த ஊருக்கு இப்போது குறைந்தது ஆறேழு நிறுத்தங்கள். ஆனால், அந்த மரங்களைத்தான் காணோம்.
கணக்கு வைத்துப் பேருந்துகள் அடுத்தடுத்து வந்துபோய்க் கொண்டிருந்தாலும் வாடகை கார்கள் வரத்தும் அதிகம்.
பெருநகரங்களில் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வந்திறங்கும் முன்பே, ஆங்கிலப் பள்ளிகளின் வாகனங்கள் வந்து பிள்ளைகளை வாரிச் சுருட்டிக் கொண்டுபோய் விடுகின்றன.
நிறுத்தந்தோறும் நான்கைந்து தேநீர்க் கடைகள். தொடக்கத்தில் அதிர்ஷ்டத்தை ஊருக்குள் கொண்டு வந்து சேர்த்த லாட்டரி விற்பனையகங்கள், அவ் விற்பனை தடை செய்யப்பட்டபின், கூண்டுகள் கட்டித் தொலைத் தொடர்பு மையங்களாகின. அவையும் காலாவதியான கவலையில் தவிக்காமல், ரீசார்ஜ் செய்து பிழைக்கின்றன.

ஒருகாலத்தில் ஐம்பது ரூபாய்க்கே சில்லறையின்றி அல்லாடிய அவ்விடத்தில் ஆயிரம் ரூபாய்த் தாள்கள் இப்போது தாராளமாய்ப் புழங்குகின்றன. நீக்கமற எல்லார் கரங்களிலும் செல்லிடப்பேசிகள்.
ஆறெனப் பரந்து, அளைந்து விளையாடப் புழுதி தந்த வீதிகள் சிமென்ட் சாலைகளாய் விறைத்துக் கிடக்கின்றன விளையாடப் பிள்ளைகளின்றி வெறிச்சோடி. திண்ணைகள் விழுங்கி வீடுகள் பருக்க, தெருக்களும் குறுகிச் சந்துகளாகியிருக்கின்றன.

மண்டியிட்டுப் படுத்திருக்கும் கன்றையோ, ஆட்டையோ கட்டிய இடத்தில் இரு சக்கர வாகனங்கள். மாட்டு வண்டியும் கூட்டு வண்டியும் நின்ற கூடங்கள், கார் ஷெட்டுகள், அடைகாக்கும் கோழிகட்குப் போடப்பட்ட கோழிக்கிடப்பு இடம்தான் கான்வென்ட் பிள்ளைகளின் ஷூ வைக்கும் இடம்.

தெருக்களில் இருந்த குழாயடிகளின் சுவடுகள் கூட இல்லை. குழாயடிச் சண்டைக் குரல்கள், வீட்டின் உள்ளோடும் "நான் ஸ்டாப்' கொண்டாட்டங்களில். ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாள்களில் தன் ஊற்றுப்பெருக்கால் ஊரார்க்கு நீர்வார்த்த ஊத்துகள் தூர்ந்து தலைமுறை கடந்தன.

வான் மழையைத் தேக்கி வைத்து, தனித்த சுவைகளுடன் தண்ணீர் கொடுத்த ஊருணிகள் வறண்டு கிடக்க, வேன்களில் வந்திறக்கும் கேன்களை வாங்கி வைத்துத் தாகம் தணிகிறார்கள் மக்கள். ஊருக்குப் பொதுவான கிணறுகளும் மரணமெய்திவிட்டன. சில இடங்களில், அவையே ஊர்ப் பொதுக் குப்பைக் குழிகள்.
பெரும்பாலான கண்மாய்ப் புறம்போக்குகளில் அரசு அலுவலகக் கட்டடங்கள். குளங்களும் குறுகி, குழிந்த வயிற்றுக் குண்டோதரன்களாய் வானம் பார்த்து மல்லாந்து கிடக்கின்றன.
ஒருகாலத்தில் வீடுகளுக்கு விலாசங்களாய்ச் சொல்லப்பட்ட விதவிதமான மரங்களில் ஒன்றைக்கூடக் காணோம். புழக்கமில்லாத இடங்களில் தழைத்தெழுகின்றன, இளைதாகக் கொல்லாது விடப்பட்ட முள்மரங்கள். மற்றாங்கே பசும்புல் காண்பதும் அரிது.

கொடுமை பொறுக்காத உள்ளங்களில் இருந்து வெளிப்படும் கிராமியச் சாப மொழிகளுள் முக்கியமானவை பொட்டலாய்ப் போக, நாசமாய்ப் போக. அவையெல்லாம் கூடி விளைந்து வருகின்றன வயல்களில், விற்பனைக்கு வீட்டுமனைகளாக.
பிழைப்புத் தேடி வெளியிடங்களுக்குப் போன பிள்ளைகளின் வருமானத்தில் கொஞ்சமாய்த் தம்மையிருத்திக் கொண்டிருக்கும் கிராமங்களில் பெரிதும் இல்லவேயில்லை அவற்றுக்கான தண்மை.

வாங்க, வாங்க எங்கப் பனையில மு(நு)ங்கு வெட்டியிருக்கோம் என்று அக்கம் பக்கத்தாரையெல்லாம் கூவியழைத்துக் காசு வாங்காமல் சீவிக் கொடுத்த நுங்கின் பனிநீர்போல் பாசமிகு தூய நெஞ்சுடையோர் பேசவும் ஆளற்றுச் சுருங்கிக் கிடக்கிறார்கள்.
ஊர்ப் பொது மன்றுகளில் இருந்துபேச இருப்போர் குறைவு.
காய்ந்ததுபோகக் காய்க்கும் தாவர வர்க்கத்து நுங்கோ, இளநீரோ, தேங்காயோ, காய்கறியோ, கீரையோ, யாதாயினும் உள்ளூரில் விளைந்தாலும், வெளியூர்ச் சந்தைக்குப் போய்த்தான் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.

ஆனால், வெளிநாட்டு மென்பானங்கள் அனைத்தும் குளிரூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்களில் வைத்திருந்து உள்ளூர்களிலேயே விற்கப்படுகின்றன.

உற்பத்தி மூலங்கள்தான் ஒடுங்கி வருகின்றன. காரணமான பொதுப் பகை யாதென உணராமல் தமக்குள்ளேயே பகைத்துக் கொண்டும் அடித்துக் கொண்டும் வீழ்கிற மக்களுக்கு வேண்டிய வாழ்வியல் ஞானம் என்று வரும் என்று ஊர்க்காவல் தெய்வங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

உள்ளூரில் விளையும் நெல்லியும், சீதாவும், வாழையும், மாவும் அருகி வருகின்றன. ஆனால், ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள்களை, திராட்சைகளை ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் நிரப்பி வந்து கூவி விற்கிறார்கள்.

வாங்கக் குடம் நிறைத்த வள்ளற் பெரும் பசுக்கள் இப்போது இல்லை. பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால் தரும் பக்குவம் மறந்து பல காலமாயிற்று. தீவனம் விழுங்கி, பால் கொடுக்கும் உயிருள்ள இயந்திரமாகிப் போயின இப்போதிருக்கும் கறவைகள்.
பசுவோ, எருமையோ, ஊருக்குச் சில இருந்தாலும், பாலுக்குப் பக்கத்துள்ள நகரங்களுக்குத்தான் போக வேண்டியிருக்கிறது. பச்சைப் பிள்ளைக்கு என்றாலும், பாக்கெட்தான் பால் தருகிறது. உழவு மாடுகள் இல்லாத ஊர்களிலும் பெருமைக்கு வைத்திருந்த காளைகளை விற்க வைத்துவிட்டது ஜல்லிக்கட்டுத் தடைச் சட்டம்.

வீட்டின் புறத்தே இப்போது துவைக்கிற கல் இல்லை, புழக்கடைக்கேணி தூர்த்த இடத்தில்தான் போர் (ஆழ்துளைக்குழாய்ப் பதிப்பு).

பிழிந்த துணிகளை நிழலிலும், வெயிலிலும் உலர்த்த ஏதுவாய்த் தன் வீட்டையும் பக்கத்து வீட்டையும் இணைத்துக் கட்டிய கொடி(க்கயிறு)களைக் காணோம். அவற்றுக்கான இடத்தை, கேபிள் தொலைக்காட்சி ஒயர்கள் கைப்பற்றியிருக்கின்றன. இணைப்பு (connection) எனச் சொல்லப்பட்டாலும் வீட்டொடு வீட்டை இணைப்பதற்குப் பதிலாய், தனித்தனித் தீவுகளாக்கியிருக்கின்றன அவை.

அம்மியும், குழவியும் ஆட்டுக் கல்லும், நெல்லின் உமி நீக்கும் கல் உரலும், மாவாக்கும் மர உரலும், திரிகைக் கல்லும் கண்படவேயில்லை. பருவத்துக்கேற்ப உருவாகும் பனை, தென்னை ஓலை விசிறிகளையே பலர் கண்டிராதபோது, வெட்டி வேர் விசிறிகளை யாரே அறிவார்?

அவ்விசிறிகளின் மீது நன்னாரி வேர் ஊறும் பானை நீரைச் சன்னமாய்த் தெளித்து விசிற வரும் கோடைக்காலத்துக் குளிர்காற்றைப் போலச் செய்யும் ஏர்கூலர்களோடு, ஏ.சி.க்களும் பொருத்தப்பட்ட மாளிகைகள் வளாóகின்றன. ஊரே ஒருகாலத்தில் ஏ.சி. போட்டதுபோல் இருந்தது என்றால் யார்தான் நம்புவார்?
மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், மின்விசிறி, மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து மின் சாதனங்களும் நிலைகொண்ட ஊர்களில் மின்சாரம்தான் ஒழிந்துபோய்விடுகிறது.
புண்ணியவான்கள் நட்ட புங்க மரத்தையும், புளியொடு வேம்பையும் வேரொடு தோண்டி விட்டபின், தானே முளைக்க எச்சமிடும் பறவைகளும் இப்போது வருவதில்லை.
முட்டையிடவும், அடைகாத்துக் குஞ்சு பொரிக்கவும் கோழிகளுக்காக வைத்திருந்த பஞ்சாரங்களும், நீரளவு குன்றிச் சேறு மிகுந்த காலங்களில், அழிகண்மாய் மீன் பிடிக்க வைத்திருந்த பறிகளும், கண்மாய்க்குள் நிழல் கொடுத்து நீராதாரம் கீழ்போய்விடாமல் காத்த கருவேல மரங்களில் காய்த்த காய்களைக் கால்நடைகளுக்கு உணவாக அலப்பி விடுகிற அலக்கைகளும், நெல்லோ, கம்போ, கேழ்வரகோ, பருவத்துக்குத் தக்கவாறு நிரம்பித் திமிர்ந்த குதிர்களும் கொள்ளை போனதுபோல் இல்லாது போயினவே.

உற்பத்திக்கான வாய்ப்புகள் மிகுதியும் சுருங்கி, அடையாளமாய் அக்கம்பக்கத்திருக்கும் மலைகளையும் மண்மேடுகளையும் வெட்டி, விளைநிலங்களையும் கூறு போட்டு விற்றபின் எப்படியிருக்கும் கிராமங்கள்?

வேராதாரங்களையும், நீராதாரங்களையும் சூறையாடிய இடங்களை ஊர்கள் என்று எப்படிச் சொல்வது?

பொருள் தேடிப் புலம் பெயர்ந்த கிராமத்து மக்களுக்கு இனிப் பெயரளவில்தான் ஊர்கள்.

காணாமல்கூட அல்ல களவுபோய்க் கொண்டிருக்கும் கிராமங்களைக் காக்கவும், முன்போல் ஆக்கவும் - தன்னிறைவு பெற்ற முன்னணிக் கிராம வளர்ச்சிக்கு, குன்றக்குடி அடிகளார் வகுத்துக் கொடுத்த குன்றக்குடித் திட்டமும், ஜே.ஸி. குமரப்பா போன்ற மேதைகளின் செயலாக்க வரைவுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டால்தான் நல்லது.

சுதேசிப் பொருளாதாரம் குறித்துப் பேசிப் பயனில்லை. செயல் வடிவாக்கமே தாமதமின்றிச் செய்ய வேண்டிய பெருங்கடமை.
பணத்தாள்களில் படமாகும் காந்தி, பண்பாட்டுக் கூறுகளோடு கிராமங்கள் மீட்சியுற நடமாடுபவராக வந்தால்தான் நலவாழ்வு, இல்லையெனில் யாவர்க்கும் வீழ்வே!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024