கோவை: ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக தகவல் கேட்ட விண்ணப்பதாரரை, 92 ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டச் சொல்லி, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர், மிரள வைத்துள்ளார். 'ஒரு பதிலுக்கு, ஒரு லட்சம் ரூபாயா' என, விண்ணப்பதாரர், தலை கிறுகிறுத்து, அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்.
கோவையைச் சேர்ந்தவர் லோகநாதன்; வழக்கறிஞர். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான இவர், தமிழக ஆறுகளில் மணல் அள்ளுவது தொடர்பாக, பல்வேறு தகவல்களை வழங்குமாறு, பொதுப்பணித்துறை, அரசு சார்பு செயலரிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த விவரங்களை, மனுதாரருக்கு வழங்குமாறு, நீர் வள ஆதாரத்துறை முதன்மை தலைமைப் பொறியாளருக்கு அறிவுறுத்தி, அந்த மனுவை அனுப்பி விட்டார் சார்பு செயலர். முதன்மை தலைமைப் பொறியாளர், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மண்டல அலுவலகங்களின் பொதுத் தகவல் அலுவலர்களுக்கு, மனுவின் நகல்களை அனுப்பி, விவரங்களை அனுப்புமாறு உத்தரவிட்டிருந்தார்.
அங்குள்ள பொதுத் தகவல் அலுவலர்கள், தங்களுக்குக் கீழுள்ள பல்வேறு அலுவலகங்களுக்கும், மனுவின் விவரங்களைக் கேட்டு, கடிதம் அனுப்பினர். சுறுசுறுப்பா இருக்காங்களே
பல்வேறு அலுவலகங்களிலிருந்தும், சேகரித்த விவரங்களைத் தொகுத்து, மனுதாரருக்கு அனுப்பி வருகின்றனர். வழக்கறிஞரும், 'ஆஹா... அதிகாரிங்க, இவ்வளவு சுறுசுறுப்பா இருக்காங்களே' என, வியப்படைந்தார்.
ஆனால், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த, ஆரணியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் செந்தில்குமார், மேலிட அலுவலர்களுக்கு தகவல் அனுப்புவதற்குப் பதிலாக, 'தகவல்' என்ற பெயரில், மனுதாரருக்கு, நேரடியாக பதிலை அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார். மனுதாரர் கோரியுள்ள விவரங்கள், மாத வாரியாகவும், குவாரி வாரியாகவும் இருப்பதால், மொத்தம், 45,839 பக்கங்கள் வழங்க வேண்டி உள்ளன. எனவே, பக்கத்திற்கு, இரண்டு ரூபாய் வீதம், 91,678 ரூபாய்க்கு, 'செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஆரணியாறு வடிநில கோட்டம், சேப்பாக்கம், சென்னை - 5' என்ற முகவரிக்கு, 'டிடி' அனுப்புமாறு, பதில் அனுப்பியிருந்தார்.
வழக்கறிஞர் அதிர்ச்சி:
'டிடி' அனுப்பினால், போதிய கால இடைவெளியில் நகல்கள் எடுத்து வழங்கப்படும் என்றும் 'பெருந்தன்மையோடு' உறுதி அளித்துள்ளார். இதைப் பார்த்ததும், வழக்கறிஞருக்கு, தலை கிறுகிறுத்து, அதிர்ச்சி அடைந்துள்ளார்.மற்ற அலுவலகங்களில், விவரங்களைத் தொகுத்து, இரண்டு அல்லது மூன்று பக்கங்களில், பதில் அனுப்பிய நிலையில், இவர் மட்டும், 46 ஆயிரம் பக்கங்கள் என்றும், 92 ஆயிரம் ரூபாய் பணம் கட்டுங்கள் என்றும் கேட்டிருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே கேலிக் கூத்தாக்குவதாக அமைந்துஉள்ளது.
இது தொடர்பாக, மனுதாரர் லோகநாதன், துறையின் தலைமைப் பொறியாளருக்கு, மேல் முறையீட்டு மனுவை அனுப்பியுள்ளார்.
இது, மனுதாரரை, மறைமுகமாக மிரட்டும் செயல்; இவ்வளவு பணம் கேட்டால், தகவல் கேட்டவர் அடங்கிப் போய் விடுவார் என்ற எதிர்பார்ப்பில் அனுப்பப்பட்ட பதில். மேல் முறையீட்டு மனுவுக்கு, பதில் வராவிட்டால், மாநில தகவல் ஆணையத்திடம் முறையிடுவேன்.
லோகநாதன்,
மனுதாரர்,
கோவை
No comments:
Post a Comment