Tuesday, June 23, 2015

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் வரிச்சலுகை: மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி,


கரன்சி நோட்டு பயன்பாட்டை குறைப்பதற்காக, கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் பங்கில் பயன்படுத்துவதற்கும், ரெயில் டிக்கெட் எடுப்பதற்கும் பரிவர்த்தனை கட்டணம் கிடையாது.


கிரெடிட் டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும், ரூபாய் நோட்டு பரிவர்த்தனையை குறைக்கவும் மத்திய அரசு விரைவில் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் கூறி இருந்தார்.
அதன்படி, ரூபாய் நோட்டு பயன்பாட்டை குறைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபற்றிய திட்ட வரைவை வெளியிட்டுள்ள மத்திய அரசு, அதுகுறித்து வருகிற 29-ந் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.


இந்த திட்ட வரைவின்படி, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் குறிப்பிட்ட அளவுக்கு பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்கப்படும். பெட்ரோல் பங்க், கியாஸ் ஏஜென்சி ஆகியவற்றில் பணம் செலுத்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்துபவர்களுக்கும், ரெயில் டிக்கெட் எடுக்க இந்த கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கும் பரிவர்த்தனை கட்டணம் கிடையாது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் அனைத்தும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்வது கட்டாயம் ஆக்கப்படும். உள்ளிட்டவைகள் அந்த திட்ட வரைவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024