Saturday, June 27, 2015

சட்டத்துக்கு அப்பால் எட்டிப்பார்க்கும் மனிதாபிமானம்!

சென்னை ஐகோர்ட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நீதிபதி பி.தேவதாஸ், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.மோகன் மீது, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை அளிக்கவேண்டுமா, அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குழந்தைக்கும் மறுவாழ்வு காட்ட வேண்டுமா என்ற கேள்விக்கு விடைகாணத்தான் இந்த தீர்ப்பு வழிவகுத்துள்ளது.

திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்ற கல்லூரி மாணவர், பக்கத்து வீட்டில் இருந்த 15 வயது பெண்ணை கற்பழித்ததன் விளைவாக அவள் கர்ப்பமாகி, ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துவிட்டாள். மோகனுக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப்பிறகு ஜாமீன் கேட்டவழக்கில், அந்த பெண்ணின் 22–வது பிறந்தநாளன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முன்பும், எந்த பாவமும் அறியாத அவள் குழந்தைக்கு முன்பும் ஒரு பெரிய கேள்விக்குறி நிற்கிறது. இதுபோன்ற வழக்கில் அந்த குழந்தையும் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவள்தான். எந்த தவறும் செய்யாத அந்த குழந்தை, சமுதாயத்தில் அவமானத்தை சுமக்க பிறந்து இருக்கிறது. இது பெரிய துயரமாகும். இந்த குறிப்பிட்ட வழக்கை பொருத்தமட்டில், இருவருக்கும் இடையே ஒரு சமரசதீர்வு காணுவதுதான் சாலச்சிறந்ததாகும் என்று கூறி, சமரச நடைமுறை முடியும் மட்டும் மோகனை ஜாமீனில்விட உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு எதிர்ப்புகளையும், ஆதரவையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, கொடூரமானது, சட்டத்தின் வரம்பை மீறியது, கற்பழிப்பு என்பது மன்னிக்கமுடியாத ஒரு கொடுங்குற்றம், அதிலும் மைனர் பெண்ணை கற்பழித்த ஒருவனை சட்டப்படி தண்டித்து சிறையில் அடைக்க வேண்டுமேதவிர, சமரசதீர்வு எதற்கு என்று பலத்த கண்டனக்குரல் கிளம்பி யுள்ளது. ஆனால், மற்றொருசாராரோ, சரி அவரை தண்டித்து சிறையில் போட்டுவிடலாம். ஏற்கனவே 3 ஆண்டுகள் சிறையில் இருந்த அவரை இன்னும்
4 ஆண்டுகள் சிறையில் அடைத்துவிடலாம். ஆனால், அதற்குப்பிறகு அந்த பெண்ணின் கதி என்ன?, அப்பாவியான அந்த பிஞ்சு குழந்தையின் கதி என்ன?,
22 வயதேயான தாய்–தந்தை இல்லாத அந்த பெண்ணுக்கு இனிதானே வாழ்க்கை இருக்கிறது?, அந்த வாழ்க்கையை கொடுக்க இந்த சமுதாயம் என்ன செய்யப்போகிறது?, எந்த பாவமும் அறியாத அந்த குழந்தையின் தகப்பனார் மோகன்தான் என்பது டி.என்.ஏ. பரிசோதனையிலேயே உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கோர்ட்டே தெரிவித்திருக்கிறது. தந்தை யார்? என்று தெரிந்தபிறகும், அதை சட்டபூர்வமாக அங்கீகரிக்காவிட்டால், எதிர்காலத்தில் அந்த குழந்தைக்கு தந்தை கிடையாது, முறை தவறி பிறந்தவள் என்று சமூகம் அவதூறாக பேசுவதை சகித்துக்கொண்டே வாழ வேண்டுமா?, சமரசதீர்வுதானே சிறந்தவழி என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட அந்த பெண், தந்தி டி.வி.யின் ஆயுத எழுத்து விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது, மோகனை நம்பத்தயாராக இல்லை என்றும், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்துக்கு இடமே இல்லை என்றும் உறுதிபட தெரிவித்துள்ளது, பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. தவறு செய்வது மனிதனின் இயற்கை. இந்த சம்பவத்துக்கு தண்டனை மட்டும் பரிகாரம் இல்லை. தண்டனை தேவைதான். ஆனால், சீர்திருத்துவதுதான் முதல்கடமை என்ற வகையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு புதுவாழ்வும், சிறுமலருக்கு நல்ல எதிர்காலமும் கிடைக்க ஒருவழியை நீதிபதி காட்டியதும் சிந்திக்க வைத்துவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024