Monday, June 29, 2015

இருக்கு, ஆனாலும் இல்லை...!

வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருந்த காலம் போய், வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் தனித்தனியே செல்லிடப்பேசி (செல்போன்) என்ற சூழல்.
மேலும், அது கைக்கு ஒரு செல்லிடப்பேசி என ஆகிவிட்டது. நிறையப் பேர் ஒரு ஸ்மார்ட் போனும், ஒரு சாதா போனும் வைத்திருப்பது இயல்பாகி வருகிறது.
கொரியன் தயாரிப்பு, சீனத் தயாரிப்பு என பல நாடுகளின் செல்லிடப்பேசிகள் விலை மலிவாகக் கிடைத்துவந்த நிலையில், முன்னணி நிறுவனங்களும் நிறைய புதிய மாடல் செல்லிடப்பேசிகளை அனைவரும் வாங்கியே தீர வேண்டும் என சந்தையில் கொட்டி வருகின்றன. இன்று செல்லிடப்பேசி இல்லாதவர்கள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம்.
பயணங்களின் போது நம் கண்ணில் படுவோரில் பலரும், இசை, விளையாட்டு, விடியோ என ஏதேனும் ஒன்றில் லயித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. செல்லிடப்பேசியிலேயே பத்திரிகை, புத்தகம் படிப்பதையும் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் மேய்வோரையும் காண்கிறோம்.
இந்த "ஸ்மார்ட் போன்' உலகில் எத்தனையோ பொக்கிஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இரண்டு சிப், ஆடியோ, விடியோ, ரெக்கார்டிங், கால்குலேட்டர், அலாரம் என ஒரு குட்டி கணினியாகவே இன்றைய ஸ்மார்ட் போன் திகழ்கிறது.
"நமக்கு எதுவுமே புரியலப்பா, ஆனா இந்த சின்னப் பசங்க செல்லிடப்பேசியில் பூந்து விளையாடுறாங்கப்பா' என்னும் பேச்சை அடிக்கடி கேட்கிறோம். இளைஞர்கள் செல்லிடப்பேசியில் வேகமாக "டைப்' செய்யும் நேர்த்தியே அலாதிதான்.
கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (பேஸ்புக்), இத்யாதி இத்யாதி என அதற்குள்ளேயே தன்னைச் சிக்கவைத்துக்கொண்டு ஏறக்குறைய செல்லிடப்பேசி அடிமைகளாகத் திகழ்வோரையும் காண்கிறோம்.
இவற்றுக்கு மத்தியில் செல்லிடப்பேசியை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு, அதை அடுத்தவருடன் பேசும் வெறும் கருவியாக மட்டுமே பயன்படுத்துவோரையும் காண்கிறோம். அவர்கள் தங்களுக்குத் தெரிந்த சில விஷயங்களுக்கு மேல் செல்லிடப்பேசியில் வேறு எதையும் பயன்படுத்துவது இல்லை.
இங்கேதான் ஒரு கேள்வி எழுகிறது. செல்லிடப்பேசிகளை முழுமையாக நாம் பயன்படுத்துகிறோமா? பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
பெரும்பாலோர் அதில் குறைந்தபட்ச செயல்பாடுகளையே பயன்படுத்துகிறோம். நாம் வைத்திருக்கும் செல்லிடப்பேசியில் என்னென்ன வசதி இருக்கிறது என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை என்பதே மிக முக்கியமான காரணமாகப்படுகிறது.
ஒரு பொருளை வாங்கும்போது, அதனுடன் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று ஒரு விளக்கப் புத்தகம் கொடுக்கப்படும். இன்று நாம் வாங்கும் செல்லிடப்பேசிகளுடன் ஒப்புக்கு ஒரு வழிகாட்டி (மேனுவல்) புத்தகம் அளிக்கப்படுகிறது. அதில் உலக மொழிகள் பலவற்றுடன் ஆங்கிலமும் இருக்கும். அதனைப் படித்துப் புரிந்துகொண்டால் ஏதோ கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழிலும் சில செல்லிடப்பேசித் தயாரிப்பு நிறுவனங்கள் இப்படிப்பட்ட புத்தகத்தைக் கொடுக்கின்றன. அதிலுள்ள எழுத்துகள் பூதக்கண்ணாடி கொண்டு படிக்கும்படி இருக்கும்.
சரி, அந்த நிறுவனங்களின் இணையதள முகவரியிலாவது சென்று தமிழில் அறிந்து கொள்ளலாம் என்றால், அப்படி தமிழில் தகவல் இருப்பதாகத் தெரியவில்லை.
பெரும்பாலானோர் சுய பரிசோதனையின் அடிப்படையிலேயே செல்லிடப்பேசியை நோண்டி, நோண்டிக் கற்றுக் கொள்கின்றனர். எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சுற்றத்தாரிடம் கேட்டே பலரும் பயன்படுத்துகிறார்கள்.
செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிவதற்கே இவ்வளவு பிரச்னை. அதிலும் அவரவர் தாய்மொழியைப் பயன்படுத்துவதில் மேலும் பிரச்னை உள்ளது.
உதாரணமாக, தமிழ் மொழிப் பயன்பாடும் பல்வேறு சிக்கல்களில் உள்ளது. தமிழ் மொழி செல்லிடப்பேசியிலேயே இணைக்கப்பட்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை; தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த முடிகிறது. சில செல்லிடப்பேசிகளில் அதற்கான "ஆப்ஸ்' எனப்படும் செயலிகளை நிறுவிப் பயன்படுத்தலாம். மேலும் சில செல்லிடப்பேசியில் தமிழில் படிக்க மட்டும் முடியும்; எழுத முடியாது.
செல்லிடப்பேசி மூலம், வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், பயணச் சீட்டு பெறலாம் என எத்தனையோ வசதிகள் உள்ளன.
ஆனால், செல்லிடப்பேசியின் சாதாரணப் பயன்பாடுகளையே முழுமையாக அறியாதவர்கள், இப்படிப்பட்ட சேவைகளைப் பயன்படுத்துவதில் தயங்கவே செய்வர். தயக்கம், அச்சம் இல்லாமல் அனைவரும் தைரியமாக செல்லிடப்பேசியைப் பயன்படுத்த, அதில் என்னென்ன வசதிகள் உள்ளன. அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்திருப்பது அத்தியாவசியமாகும்.
சில யோசனைகள்: செல்லிடப்பேசியை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை விளக்கும் கையேடு எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படியும், தமிழில் பயன்படும் வகையில் அனைத்து செல்லிடப்பேசிகளும் அமைந்திருக்க வேண்டும்.
செல்லிடப்பேசியை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் செல்லிடப்பேசி பயன்படுத்துவதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வும், விளக்கமும் அளிக்கும் வகையில் தமிழில் ஒரு பகுதியை அமைத்திருக்க வேண்டும். சந்தேகங்களுக்கு தமிழில் தகவல் தரும் இலவச சேவை மைய (கால் சென்டர்) ஏற்பாடும் இருக்க வேண்டும்.
தொழில்நுட்பத் துறையில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் இதுகுறித்து மேலும் சிந்தித்துச் செயல்பட்டு, கைக்குக் கிடைத்த செல்லிடப்பேசியை அறைகுறையாக அல்லாமல் முழுதாக அனைவரும் பயன்படுத்த வழிவகை காண வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024