திருமலைக்கு நடைபயணமாக வரும் தமிழக பக்தர்களின் வசதிக்காக தமிழக-ஆந்திர எல்லையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை-திருப்பதி தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் ‘தி இந்து’ வுக்கு நேற்று அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்குமா?
நாடு முழுவதிலும் இருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். தினமும் சராசரியாக 65 ஆயிரம் பேர் தரிசனம் செய்கின்றனர். தரிசனத்துக்காக வரிசையில் நிற்கும்போது தள்ளு முள்ளு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக 3 வரிசை திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பலன் கிடைத்துள்ளது.
மேலும் விஐபி-களுக்கு இரண்டு வேளையும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் இப்போது காலை வேளையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனால் சாதாரண பக்தர்களின் தரிசன நேரம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சாமானிய பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர் என்பதே இதற்கு சான்று.
திருமலையில் தங்கும் அறை கிடைக்காமல் பக்தர்கள் மிகவும் அல்லல்படுகின்றனர். இதற்கு மாற்று திட்டம் ஏதாவது நடைமுறைபடுத்தப்படுமா?
திருமலையில் தேவஸ் தானத்துக்கு சொந்தமாகஉள்ள தங்கும் விடுதிகளில் 7,000 அறைகள் உள்ளன. இதற்கு நாள் வாடகை ரூ.100 முதல் ரூ.8,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விஐபி-களுக்கென 550 அறைகள் மட்டுமே உள்ளன. திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அறைகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அறைகள் கிடைப்பதில் சிரமம் இருப்பது உண்மை. படிப்படியாக திருமலையில் கூடுதல் அறைகள் கட்டப்படும். மேலும் பக்தர்கள் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
லட்டு பிரசாதத்தின் விலையை அதிகரிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதே?
ஏழுமலையானின் லட்டு பிரசாதம் தடையின்றி பக்தர் களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் லட்டு பிரசாதத்துக்கான தேவையும் அதிகரித்துள்ளது. லட்டு விலையை உயர்த்தும் திட்டம் உள்ளது. இதுகுறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் நடைபெற்று வந்த சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் இப்போது நிறுத்தப்பட்டிருப்பது ஏன்?
தமிழகத்தில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளது. எனவே அங்கு திருக்கல்யாணத்தை நிரந்தரமாக நிறுத்தவில்லை. விரைவில் மீண்டும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடத்தப்படும்.
தமிழகத்திலிருந்து நேர்த்திக் கடன் செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வருகின்றனர். இவர்களுக்கு வழியில் ஓய்வெடுப்பதற்காக விடுதி கட்டப்படுமா?
ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக தங்களது சொந்த ஊர்களிலிருந்து நடைபயணமாக வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றனர். விரதமிருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே வந்து ஏழுமலையானை பக்தியுடன் தரிசிக்கின்றனர்.
இவர்களின் வசதிக்காக முதல் கட்டமாக சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் ஆந்திர எல்லையில் நகரி அருகே விடுதி கட்டப்படும். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப் படும். இந்த விடுதிகளில் நடைபயணமாக வரும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
இவ்வாறு சாம்ப சிவ ராவ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment