Sunday, June 28, 2015

சென்னை மெட்ரோ ரெயில் நாளை முதல் ஓடும் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் நாளை முதல் ஓடுகிறது. ரெயில் போக்குவரத்தை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

நெரிசல் அதிகரிப்பு

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இதனால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை அறிந்து, மெட்ரோ ரெயில் சேவையை சென்னையில் அறிமுகம் செய்ய 2007-ம் ஆண்டில் திட்டம் தீட்டப்பட்டது. மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டுமானப் பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.14 ஆயிரத்து 600 கோடியாகும்.

இரண்டு வழித்தடங்களில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையேயும் (23.1 கி.மீ. நீளம்), சென்டிரல் - பரங்கிமலை இடையேயும் (22 கி.மீ. நீளம்) மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கியது.

சாலைக்கு மேலும் கீழும்

இரண்டு வழித்தடங்களிலும் மொத்தம் 32 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் 14 ரெயில் நிலையங்கள் மேல்மட்ட பாதையிலும் (சாலைக்கு மேலே), 18 ரெயில் நிலையங்கள் சுரங்கப் பாதையிலும் (சாலைக்கு கீழே) அமைக்கப்பட்டு வருகின்றன.

வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே உள்ள பாதையில் 11 மெட்ரோ ரெயில் நிலையங்கள் சுரங்கப் பாதையிலும், 6 ரெயில் நிலையங்கள் மேல்மட்ட பாதையிலும் வருகின்றன. அதுபோல் சென்டிரல் - பரங்கிமலை இடையே 8 மேல்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும், 7 சுரங்கப் பாதை ரெயில் நிலையங்களும் வருகின்றன.

ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

தற்போது சென்டிரல் - பரங்கிமலை வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு-ஆலந்தூர் இடையேயான (10 கி.மீ. நீளம்) மேல்மட்ட ரெயில் பாதையில் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்தப் பாதையில் கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், பரங்கிமலை ஆகிய 8 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன.

அவற்றில் பரங்கிமலை தவிர மற்ற 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து நாளை (29-ந்தேதி, திங்கட்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கிவைக்கிறார். தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் (வீடியோ கான்பரன்சிங்) அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

நாளை தொடக்க விழாவில் மத்திய நகர்புற வளர்ச்சிதுறை செயலாளர் மதுசூதனன் பிரசாத் பங்கேற்பார் என்று மத்திய அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

விழாக்கோலம்

சென்னைக்கு முற்றிலும் புதிதான இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக கொண்டாட சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்.) முடிவு செய்துள்ளது. தொடக்க நாளன்று இரண்டு வழித்தடத்திலும் ஓடும் ரெயில்களை அழகாக அலங்கரிக்க சி.எம்.ஆர்.எல். அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் முதலில் 9 ரெயில்கள் ஓடும் என்று கூறப்படுகிறது.

அதுபோல் மெட்ரோ ரெயில் நிலையங்களும் அலங்கரிக்கப்படவுள்ளன. அலங்காரப் பணிகள் அனைத்தும் இன்று (28-ந்தேதி) நிறைவடையும் என்று சி.எம்.ஆர்.எல். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வழித்தடத்தில் மெட்ரோ சேவை தொடங்கிய சில வாரங்களுக்கு பயணிகளுக்கு இலவசமாக பயணத்தை வழங்குவது பற்றி சி.எம்.ஆர்.எல். அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதன் மூலம் பலர் தங்கள் தற்போதைய பயண முறையை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரெயிலுக்கு மாறக்கூடும் என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...