Friday, June 26, 2015

மருத்துவ படிப்பு: சேர்க்கைக் கடிதம் எப்போது கிடைக்கும்?

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைப் பெற்ற மாணவர்கள், தங்களுக்கான சேர்க்கைக் கடிதத்தை இன்று 11 மணி முதல் கலந்தாய்வு நடைபெற்ற ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கலந்தாய்வு குறித்து இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், கலந்தாய்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என்று இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

இதையடுத்து, இதுவரை கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், தீர்ப்பு வெளியானதை அடுத்து, இன்று முற்பகல் 11 மணி முதல், சேர்க்கைக் கடிதம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதேபோன்று 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி தொடங்கிய எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 25) முடிவுக்கு வந்தது.

இதில் பங்கேற்று சேர்க்கை பெற்றவர்கள், அவர்களுக்கான சேர்க்கைக் கடிதங்களை நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் வந்தாலும் சேர்க்கைக் கடிதம் எந்த வித இடைநிறுத்தமும் இல்லாமல் எந்த நேரமும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024