Thursday, June 25, 2015

எம்.பி.பி.எஸ்.: இன்று கலந்தாய்வு நிறைவு: 2,173 மாணவர்கள் தேர்வு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது.
2,173 பேர் தேர்வு: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த ஜூன் 19-ஆம் தேதி தொடங்கி கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வருகிறது. சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, இதுவரை மொத்தம் 2,173 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 84 அரசு எம்.பி.பி.எஸ். காலியிடங்களை நிரப்ப கடைசி நாள் கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
483 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்: கலந்தாய்வில் 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில், இதுவரை மொத்தம் 483 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 114 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் வியாழக்கிழமை நிரப்பப்படும்.
69 அரசு பி.டி.எஸ். இடங்கள்: சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்களில், கலந்தாய்வில் இதுவரை மொத்தம் 69 அரசு பி.டி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 16 அரசு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து வியாழக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.
962 மாணவர்கள் பங்கேற்பு: சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் புதன்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற கலந்தாய்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 196.50-இல் தொடங்கி கட்-ஆஃப் மதிப்பெண் 192.00 வரை எடுத்திருந்த
மொத்தம் 1,037 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வில் 961 மாணவர்கள் பங்கேற்றனர்; 76 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
காத்திருப்போர் பட்டியலில் 614 பேர்: கலந்தாய்வில் புதன்கிழமை பங்கேற்ற மாணவர்களில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 501 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர 139 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 301 பேர் காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டனர்.
காத்திருப்போர் பட்டியலில் இதுவரை மொத்தம் 614 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இன்று 359 மாணவர்களுக்கு அழைப்பு: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு கடைசி நாளான வியாழக்கிழமை (ஜூன் 25), தாழ்த்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட (அருந்ததி வகுப்பினர்), பழங்குடி வகுப்பைச் சேர்ந்த 359 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கட்-ஆஃப் மதிப்பெண் 192.00-இல் தொடங்கி கட்-ஆஃப் மதிப்பெண் 180.25 வரை எடுத்துள்ள மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு கட்-ஆஃப் என்ன?
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவடைய உள்ள நிலையில் முற்பட்ட வகுப்பினர் உள்பட நான்கு சமுதாயப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் வரையறுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வரும் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முற்பட்ட வகுப்பினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.) ஆகியோருக்கு உரிய அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களைப் பொருத்தவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே 7 இடங்கள் உள்ளன.
இந்த நிலையில் முற்பட்ட வகுப்பினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.) உள்பட நான்கு பிரிவினருக்கு வரையறுக்கப்பட்ட முதல் கட்ட கலந்தாய்வு கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: ஓ.சி.-198; பி.சி.-197.25; பி.சி. (எம்)-195.75; எம்.பி.சி.-196.
தாழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட (அருந்ததியினர்), பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு வியாழக்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளதால், அது நிறைவடைந்த பிறகு கட்-ஆஃப் மதிப்பெண் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
520 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மொத்தம் 520 மாணவர்கள் தேர்வாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ்.
கலந்தாய்வில் பங்கேற்கும் பழைய பிளஸ் 2 மாணவர்கள் குறித்து தினமும் கணக்கிடப்படுகிறது.
சேர்க்கை கடிதம் எப்போது? உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர இதுவரை தேர்வு செய்யப்பட்ட எந்த மாணவருக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை. எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி சேர்க்கைக் கடிதம் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024