Thursday, June 25, 2015

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்த கனரா வங்கி: 'டோல் ஃப்ரி' புகாருக்குப் பின் பணிந்தது நிர்வாகம்



கோவையில் பழைய ரூபாய் நோட்டுகளைச் செலுத்தச் சென்ற ஓய்வு பெற்ற தபால் அலுவலரை, பெட்டிக் கடைக்குச் சென்று மாற்றிக் கொள்ளுமாறு, வங்கிக் கிளை மேலாளர் கூறியது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை மீறிய செயல் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பணப் புழக்கத்தை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கடந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதில், 'கடந்த, 2005-க்கு முன் அச்சிடப்பட்ட, ரூ.1000, 500 உட்பட, அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகாது.

எனவே, இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, கடந்த டிசம்பர் வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

பின்னர், ஜூன், 30-ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிவடைய, இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால், 'பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் தங்கள் கணக்கில் அவற்றை, டெப்பாசிட் செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கோவைப்புதூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் ஊழியரான ஹரிகரன் என்பவர், அதேபகுதியில் உள்ள கனரா வங்கிக் கிளைக்கு ரூ. 16,400 அளவுக்கு (10 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள்) நேற்று எடுத்துச் சென்றுள்ளார்.

அந்த நோட்டுக்களை காசாளரிடம் செலுத்த முயன்றபோது, அதை வாங்க மறுத்த காசாளர், 10 ரூபாய் நோட்டுக்களை பெற முடியாது. வேறு எங்காவது மாற்றிக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வங்கிக் கிளை மேலாளரை சந்தித்து ஹரிகரன், நோட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால், ‘நோட்டுக்களை வாங்க முடியாது. இவ்வளவு நாள் உங்களை யார் இதை வைத்திருக்கச் சொன்னது. பெட்டிக் கடைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள்’ என சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால், அதிருப்தி அடைந்த ஹரிகரன், கனரா வங்கியின் டோல்ஃப்ரி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் மண்டல அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தல் வந்தததைத் தொடர்ந்து, அந்த நோட்டுகளை வங்கி நிர்வாகம் அவரிடம் இருந்து வாங்கியுள்ளது.

இது குறித்து வாடிக்கையாளர் ஹரிகரன் கூறும்போது, ‘பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் ஜூன் கடைசிக்குள் மாற்றுமாறு ரிசர்வ்வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இதற்கு மாறாக வங்கி நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கும், மத்திய நிதி அமைச்சகத்துக்கும் புகார் தெரிவிப்பேன்.

சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ரூபாய் நோட்டுக்களை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு 3 மணி நேரம் செலவிட வேண்டி இருந்தது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறி வங்கி நிர்வாகம் நடந்துள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எனக்கு இந்த நிலைமை என்றால் படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் என்றால் என்ன செய்வார்கள். இது கண்டனத்துக்குரியது’ என்றார்.

'அறிவுறுத்தப்படும்'

இது குறித்து கனரா வங்கியின் முதன்மை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, 'பழைய ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்ற வந்தால் அவர்களிடம் இருந்து கட்டாயம் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வாங்க முடியாது என மறுக்கக் கூடாது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு மீண்டும் அறிவுறுத்தப்படும்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024