ஹெல்மெட் அணியாமல் பிடிபடும் வாகன ஓட்டிகள், பின்னர், ஹெல்மெட் வாங்கிய ‘பில்’ சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் திரும்பத் தரப்படும் என்ற உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வருகிற 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் பிடிபடும் நபர்களிடம் ஓட்டுநர் உரிமம் உட்பட அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும். பின்னர் அந்த நபர் புது ஹெல்மெட் வாங்கி, அதற்கான பில்லை சமர்ப்பித்த பின்னரே ஆவணங்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கூறுகையில், "ஹெல்மெட் போட வேண்டியது அவசியமானதுதான். ஆனால் அதற்கான பில்லையும் வைத்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஹெல்மெட் வாங்கி 3 ஆண்டுகள் ஆகிறது. அதற்கான பில்லை நான் இன்னுமா வைத்திருக்க முடியும். ஒரு அவசர சூழ்நிலையில் நான் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி பிடிபட்டால், என்னிடம் ஏற்கெனவே ஹெல்மெட் இருக்கும் நிலையில், நான் எப்படி புது ஹெல்மெட் வாங்க முடியும். மோசமான சாலைகளால் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் தினமும் பள்ளி செல்லும் எனது குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்கிறேன். அவர்களுக்கும் ஹெல்மெட் அணிய வேண்டுமா? இது போன்ற சிக்கலான சில கேள்விகள் பல உள்ளன. இவற்றையும் ஆராய்ந்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்து போலீஸார் வைத்ததே சட்டமாகி விடும்" என்றனர்.
இது குறித்து போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டபோது, "ஹெல்மெட் அணியாதவர்களின் ஆவணங்களை பறிமுதல் செய்வது இயலாத காரியம். பெரும்பாலான வர்கள் ஆர்.சி.புக், இன்ஸ்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றின் நகல்களை மட்டுமே வைத்திருப் பார்கள். ஒரிஜினல் இருக்காது. நகல்களை பறிமுதல் செய்து என்ன பயன்? பள்ளி செல்லும் குழந்தை களுக்கும் ஹெல்மெட் அணிவித்து அழைத்து செல்வது நல்லது.
பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும்போது அவர்களுக்கு ஏன் ஹெல்மெட் அணிவிக்கவில்லை என்று இதுவரை அபராதம் விதித்த தில்லை. ஆனால் வாகனத்தை ஓட்டுபவர் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்" என்றனர்.
No comments:
Post a Comment