Tuesday, June 30, 2015

மொட்டையம்மாள் சைக்கிள் கடை!



வீட்டில் நிம்மதியாக உட்கார்ந்து ஓய்வெடுக்க வேண்டிய வயதில் சைக்கிள் கடை நடத்திவருகிறார் 85 வயது மொட்டையம்மாள். திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இவர், தள்ளாத வயதிலும் தளராத நிர்வாகத்தால் தலைநிமிர்ந்து நிற்கிறார்.

உடல் தளர்ந்துபோனாலும் உள்ளத்தில் உறுதி இருந்தால் எந்த வயதிலும் எந்த வேலையையும் திறம்படச் செய்ய முடியும் என்பதை மொட்டையம்மாள் நிரூபித்துவருகிறார். தடி ஊன்றி நடந்தாலும், அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல் சுயமாகச் சம்பாதித்துத் தன் சொந்தக் காலில் வைராக்கியத்துடன் வாழ்கிறார். வேலை வேலை எனத் தேடி வெறுப்படைந்து மூலையில் உட்காரும் இளைஞர்கள், மொட்டையம்மாள் பாட்டியிடம் வாழ்க்கைப் பாடம் படிக்கலாம்.

மொட்டையம்மாளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் வேலம்மாள். ஆனால் மொட்டையம்மாள் என்றால்தான் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிகிறது. பொழுது புலர்ந்ததும் காகம் கரைகிறதோ இல்லையோ, மொட்டையம்மாள் கண்விழித்துவிடுகிறார். சுறுசுறுப்பாகச் சைக்கிள் கடையைத் திறந்து உட்கார்கிறார். கால் வண்டி, அரை வண்டி, முக்கால் வண்டி, முழு வண்டி சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார். கூலிக்கு ஆள் வைத்து சைக்கிள்களைப் பழுது பார்க்கிறார். பஞ்சர் பார்க்கிறார். இதன் மூலம் கிடைத்த வருவாயில் இந்தக் காலத்துக் குழந்தைகளை மகிழ்விப்பதற்காகக் குட்டி சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்கிறார். பேரக்குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.

எதிர்பாராத திருப்பம்

“எனக்கு 17 வயசுல கல்யாணம் நடந்தது. கல்யாணமாகி 35 வருஷமா குழந்தையில்லை. நாங்க வேண்டாத தெய்வமில்லை. எங்க மனக்குறை ஒரு பக்கம்னா கேள்வி கேட்குறவங்களுக்குப் பதில் சொல்லி மாளாது. கடைசில என் மனக்குமுறலைத் தீர்த்துவைக்கிற மாதிரி என் மகன் பிறந்தான்” என்று கடந்த காலத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். மொட்டையம்மாளின் மகனுக்கு 15 வயதாகும்போது அவருடைய கணவன் இறந்துவிட, நட்டாற்றில் நிற்பதுபோலத் தவித்திருக்கிறார். வருமானம் இல்லாத நிலையில் மகனை வளர்த்து ஆளாக்கத் தனியாளாகப் போராடியிருக்கிறார்.

கரை சேர்த்த கடை

என்ன செய்வது என்று தலையில் கைவத்து அழுவதைவிட எதைச் செய்தால் வண்டியோடும் என்று மொட்டையம்மாள் யோசித்தார். நேர்மையாகச் செய்யும் எந்தத் தொழிலும் தாழ்ந்ததில்லை என்று நினைத்த அவர், ஆரம்பத்தில் விறகுக் கடை வைத்து நடத்தினார். சமையல் எரிவாயு வந்த பிறகு, விறகுக் கடையில் வியாபாரம் முடங்கியது. அப்போதும் மொட்டையம்மாள் சோர்ந்துபோகவில்லை. வைக்கோல் கடை வைத்து நடத்தினார். அதில் வந்த வருமானம் கைக்கும் வாய்க்குமே சரியாக இருந்தது.

“என் குடும்ப நிலையைப் பார்த்துட்டு சொந்தக்காரர் ஒருத்தர் அவர் நடத்துன சைக்கிள் கடையை என்கிட்டே கொடுத்தார். அப்போ கடையில நாலு சைக்கிள் மட்டும் இருந்துச்சு. அதை வாடகைக்கு விட்டு, வந்த வருமானத்துல குடும்பம் ஓரளவு கஷ்டமில்லாம நகர்ந்துச்சு. சாப்பாட்டுக்குப் போக மிச்சமான பணத்துல சின்ன சைக்கிளை வாங்கி வாடகைக்கு விட்டேன். கொஞ்ச நாள்ல பஞ்சர் ஒட்டவும் கத்துக்கிட்டேன். சைக்கிள் ரிப்பேர் பார்ப்பேன்” என்கிறார் மொட்டையம்மாள்.

தற்போது மூப்பின் காரணமாக இவரால் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அதனால் ஆள் வைத்து சைக்கிள் ரிப்பேர் பார்க்கிறார்.

இவரது சைக்கிள் கடைக்குப் பக்கத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் தண்டபானி, “நாமளே கடை திறக்கக் காலையில லேட்டா வருவோம். ஆனா இந்தம்மா காலைல ஆறு மணிக்கெல்லாம் கடை திறந்துடுவாங்க. ராத்திரி ஒன்பது மணிக்குத்தான் கடையை அடைப்பாங்க. வரவு, செலவுல கறாரா இருப்பாங்க. ஒரு பைசாகூட விட்டுக் கொடுக்க மாட்டாங்க. ஆனா கஷ்டம்னு யாராவது வந்துட்டா உதவி செய்வாங்க. இந்த வயசுலயும் பாட்டிக்கு நல்ல ஞாபகச் சக்தி, கண் பார்வை தெளிவாக இருக்கு” என்று மொட்டையம்மாள் பாட்டியின் புகழ் பாடுகிறார்.

நினைவுச் சின்னம்

ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் அவரை பஞ்சம், துவரை பஞ்சம் ஏற்பட்டபோதும் மொட்டையம்மாளின் குடும்பம் வசதியாக இருந்திருக்கிறது. ஆனால் இடையில் எதிர்பாராதவிதமாக வறுமைக்கு ஆட்பட்டபோது இந்த சைக்கிள் கடைதான் மொட்டையம்மாளுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. அந்த நினைவால்தான் இன்றும் இந்தக் கடையை விடாமல் நடத்தி வருகிறார்.

“வீட்ல சும்மா இருக்கப் பிடிக்கலை. அதுவும் இல்லாம கையில நாலு காசு சம்பாதிக்க இந்த வயசுல வேறு பொழப்பும் தெரியலை. அதான் பழக்கப்பட்ட இந்தச் சைக்கிள் கடையை நடத்துறேன். முன்னால, ஒரு நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம்னு வருமானம் வரும். அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சு. இன்னைக்கு, கூலி ஆளுக்குப் போக ஒரு நாளைக்கு 300 ரூபாய் கையில நிக்கறதே பெருசு. சில நாள் ஒண்ணுமே கிடைக்காது. அந்தக் காலத்துல பழநிக்கு சைக்கிள்லதான் யாத்திரை வருவாங்க. அப்பல்லாம் நிறைய பேர் பஞ்சர் ஒட்ட, ரிப்பேர் பார்க்க வருவாங்க.

நிறைய காசு கிடைக்கும். இன்னைக்கு யாரு சைக்கிள்ல வர்றாங்க? கார், பஸ்ஸுல வந்துட்டு போறாங்க. முன்னாடிலாம் ஒரு சைக்கிள்கூட கடையில சும்மா நிக்காது. இன்னைக்கு, வாடகைக்குப் போவாம சும்மாவே எல்லா சைக்கிளும் நிக்குது. வருமானமே இல்லை” என்று தற்போது தான் சந்திக்கும் சவால்களை அடுக்குகிறார் மொட்டையம்மாள். இருந்தாலும் இந்தக் கடையைத் தன் அடையாளமாகவே கருதுகிறார்.

“நானும் தினமும் ஆபீஸ் போறா மாதிரி வெள்ளென கிளம்பிடுவேன். சில நேரம் மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போவேன். முடியலைன்னா கையில சாப்பாட்டை எடுத்துக்கிட்டு வந்துடுவேன். சொல்லிக்கிற மாதிரி வருமானம் இல்லாட்டியும் கடை நடத்துறது சந்தோசமா இருக்கு. இந்தக் கடை மூலமா பெரிய அளவுல வருமானம் இல்லைன்னாலும், என் நிம்மதிக்காக என் மகன் ஒண்ணும் சொல்ல மாட்டான். எனக்கு ஒரே ஒரு ஆசைதான். ஆயுசு முழுக்க இந்த சைக்கிள் கடை நடத்தணும்” என்று சொல்கிறார் மொட்டையம்மாள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024