Wednesday, July 1, 2015

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் இல்லை; லைசென்ஸ் போன்ற ஆவணங்கள் மட்டும் பறிமுதல் இன்று முதல் போலீஸ் நடவடிக்கை தீவிரமாக பாயும்



சென்னை,

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது இன்று (ஜூலை 1–ந்தேதி) முதல் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதத்தொகை வசூலிக்க மாட்டார்கள்.

லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் அல்லது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் வேண்டுகோள்

இதுதொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீசார் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:–

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையின்படியும், 1988–ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின்படியும் இருசக்கர வாகன ஓட்டுனரோ, அல்லது அவரது பின்னால் அமர்ந்து செல்பவரோ ஹெல்மெட் அணியாமல் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், 1–7–2015 (இன்று) முதல் போலீஸ் நடவடிக்கை கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் அபராதத்தொகை வசூலிக்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக வாகன ஓட்டுனரின் லைசென்ஸ் மற்றும் இருசக்கர வாகனத்தின் அனைத்து உண்மையான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும். இதில் ஜெராக்ஸ் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ஆவணங்கள் எதையும் வாகன ஓட்டுனர் கொண்டுவராதபட்சத்தில், குறிப்பிட்ட இருசக்கர வாகனம் போலீசாரால் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனம் போலீஸ் நிலையங்களில் உரிய பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்படும். அதன்பிறகு உரிய அசல் ஆவணங்களை குறிப்பிட்ட போலீஸ் நிலையங்களில் காட்டினால், இருசக்கர வாகனம் திருப்பி ஒப்படைக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனம் தொடர்பான ஆவணங்கள் உரிய கோர்ட்டில் ஒப்படைக்கப்படும்.

ஹெல்மெட் ரசீது

வாகன ஓட்டுனர்கள் தாங்கள் வாங்கிய ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மட்டையும், அதை வாங்கியதற்கான ரசீதையும் கோர்ட்டில் நேரடியாக காட்டி, தங்களது லைசென்ஸ் அசல் நகல் மற்றும் இருசக்கர வாகனத்தின் ஆவணங்களையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

இருசக்கர வாகன ஓட்டுனர்கள், ஹெல்மெட் அணிந்து தங்களது விலை மதிப்புள்ள உயிரை பாதுகாத்து கொள்வதோடு, தங்களது டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதை தவிர்த்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து சிக்னல்களிலும்...

சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024