Tuesday, July 14, 2015

பயமுறுத்தும் மக்கள் தொகை உயர்வு

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சீனாவைவிட அதிகமாக இருக்கிறது. இதேநிலையில், அடுத்த ஆண்டு சீனாவைவிட, இந்தியா வளர்ச்சி மிகுந்த நாடாகிவிடும் என்று உலக வங்கி, சர்வதேச நிதியமெல்லாம் அறிவிக்கும்போது, இந்திய மக்களின் மனம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. உள்நாட்டின் நிதி நிலைமை சீராகும் வகையில் கடந்த 2 மாதங்களாக சேவை வரி, தூய்மை எரிசக்தி வரி போன்ற மறைமுக வரி வசூல் அபரிமிதமாக உயர்ந்து இருக்கிறது. கைவினைப்பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்ந்து இருக்கிறது என்பதுபோல தகவல்களும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இந்த முன்னேற்றங்களின் பலனை அடையமுடியாமல் தடுக்கும், காலை கீழே இழுக்கும் மற்றொரு அதிர்ச்சித்தரக்கூடிய தகவலும் வெளிவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, இந்தியாவின் மக்கள் தொகை 127 கோடியே 42 லட்சத்து 39 ஆயிரத்து 769 ஆகும். அதாவது, உலக மக்கள் தொகையில் 17.25 சதவீதம் இந்தியாவில்தான் இருக்கிறது. மக்கள் தொகை ஆண்டுக்கு 1.6 சதவீதம் உயர்ந்துகொண்டே போகிறது. தற்போது மக்கள் தொகையில் 2–வது இடத்தில் இந்தியா இருக்கிறது. முதல் இடத்தில் இருக்கும் சீனாவின் மக்கள் தொகை 139 கோடியாகும். ஆனால், இந்தியாவில் இப்போது மக்கள் தொகை உயர்ந்துகொண்டு இருக்கும் வேகத்தில் போய்க்கொண்டிருந்தால், 2050–ம் ஆண்டு 163 கோடி மக்கள் தொகையோடு சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்தை பிடித்துவிடும். 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இந்தியாவில் 121 கோடி மக்கள் தொகை இருந்தது. அப்போது அமெரிக்கா, பிரேசில், பாகிஸ்தான், வங்காளதேசம், ஜப்பான் ஆகிய நாடுகளின் மக்கள் தொகையை கூட்டினால் வரும் மொத்த ஜனத்தொகையோடு இந்தியாவின் ஜனத்தொகை சரிசமமாக இருந்தது. அந்தநேரத்தில், தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சமாகும்.

மக்கள் தொகை பெருக்கத்தால் சீனாவில் மாவோ காலத்தில் பஞ்சம், பசி தலைவிரித்தாடியது. 1980 ஜனவரியில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் அமலுக்கு வந்தபிறகு இன்றுவரை 40 கோடி மக்கள் தொகை உயர்வு தடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் கூறப்படுகிறது. ஒரு குழந்தைக்குமேல் பெற்றால் அரசின் எந்த சலுகையும் கிடைக்காது. இப்போது சில நிபந்தனைகள் அடிப்படையில் 2 குழந்தைகள்வரை தளர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை துணிச்சலுடன் எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. இங்கு சிறு வயதில் திருமணம், குடும்பக்கட்டுப்பாடு என்றால் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்ற எண்ணம் கிராமப்புறங்களில் நிலவுகிறது என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதிக குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது என்பது மிகப்பெரிய பொறுப்பு, அந்த சுமையை நம்மால் தாங்கமுடியுமா? என்ற பயம் ஏழை பெற்றோர்களுக்குக்கூட இல்லாமல் இருப்பதற்கு, ஓட்டுக்காக அரசுகள் அறிவித்த இலவசங்கள்தான் காரணம். கருவுற்றதில் இருந்து ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து ஆளாகி, சுடுகாட்டுக்கு போகிறவரை எல்லாமே ஓசியாக கிடைத்துவிடுவதால், அதிக குழந்தைகள் பெறுவது ஒரு பாரமாக யாருக்கும் தெரியவில்லை. தேசிய நலன்கருதி, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் நின்று மக்கள் தொகையை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமோ? அவற்றையெல்லாம் உடனடியாக செய்யவேண்டும். குடும்பநலத்துறையின் வேகம் போதாது. குடும்பநல திட்டங்களை கடைக்கோடி மக்களிடமும் கொண்டுசெல்லவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024