Wednesday, July 22, 2015

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்!

பண்டைய காலத்தில் இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி என்பது உச்சத்தில் இருந்திருக்கிறது. இதற்கு நாளந்தா பல்கலைக்கழகம் ஒன்றே சான்றாகும். இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு வெளிநாட்டில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து கல்வி கற்று சென்றிருக்கிறார்கள். ஆனால், இப்போது ஆண்டுதோறும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேடி 2 லட்சம் மாணவர்கள் செல்வது அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா நாடுகளின் அரசாங்கங்கள் எல்லாம் இந்தியாவில் பல இடங்களில் கல்வி கண்காட்சிகளை நடத்தி, தங்கள் நாடுகளில் உள்ள எந்தெந்த பல்கலைக்கழகங்களில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன?, என்னென்ன வகையான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன? என்றெல்லாம் விளக்கி காந்தம்போல மாணவர்களை இழுத்து செல்கின்றன.

இந்தியாவில் அதே படிப்புகள் இருந்தாலும், வெளிநாடுகளில் படிக்கச்சென்றால், அங்கு படித்து முடித்துவிட்டு, அந்த பட்டத்தோடு ஒன்று வெளிநாட்டிலேயே அதிகச்சம்பளத்தில் வேலைபார்க்கலாம். இல்லையென்றால், இந்தியாவில் அந்தப்பட்டங்களுக்கு அதிக மதிப்பு இருப்பதால் நிறைய சம்பளம் பெறலாம் என்ற ஆசையோடு செல்கிறார்கள். ‘வாழ்க்கையில் நீங்கள் நாளை அடையப்போகும் வெற்றியின் அளவு, இன்று நீங்கள் வாங்கும் பட்டங்களை பொருத்துத்தான் இருக்கிறது’ என்று வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கூறுவது, அவர்களை பெரும்பாலும் அங்கு செல்ல ஈர்த்துவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு வெளிநாடுகளுக்கு படிக்கச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. உயர்படிப்புகளுக்கு செல்லும் மாணவர்கள், ‘‘எங்களுக்கு அங்கேயே உதவித்தொகைகள் கிடைக்கிறது. இல்லையென்றால், வேலைபார்த்துக்கொண்டே படிக்கவும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று கூறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேசதரத்தில் கல்வி இருக்கிறது என்றும் ஒரு காரணத்தை கூறுகிறார்கள். இவ்வாறு வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்வதால் அன்னியச் செலாவணி அதிகமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்கிறது. இதைத் தடுப்பதற்கு மத்திய அரசாங்கம் ஒரு நல்ல முடிவை இப்போது எடுத்துள்ளது.

எந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு நம் மாணவர்கள் செல்கிறார்களோ, அந்த வெளிநாட்டு பல்கலைக் கழகங்களே இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அரசாங்கமும் முடிவுசெய்துள்ளது. இவ்வளவு நாளும் இது நடைமுறைக்கு வராமல் இருந்ததற்கு காரணம், இங்கு பல்கலைக்கழகங்களை அமைத்து, அதில் கிடைக்கும் லாபத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டுசெல்ல அனுமதிக்காத காரணம்தான். இப்போது மத்திய அரசாங்கம் வகுத்துக்கொண்டிருக்கும் திட்டத்தின்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் பல்கலைக் கழகங்களை தொடங்கலாம். தங்களின் பாடத்திட்டத்தையே அறிமுகப்படுத்தலாம். அங்கிருந்தே ஆசிரியர்களை கொண்டுவரலாம். இந்ததிட்டம் குறித்து ஆராய செயலாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு எடுக்கும் முடிவுகள், அமைச்சர்கள் குழுவில் பரிசீலிக்கப்பட்டு, அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, தேவையான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமைக்கப்படுவதால், இந்தியாவில் இருந்து மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களைத்தேடி செல்லாத நிலையையும் உருவாக்க முடியும். அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை, பூடான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் பலவற்றில் இருந்து மாணவர்கள் இந்தியாவில் உள்ள அந்த பல்கலைக்கழகங்களுக்கு வந்து படிக்க வருவதற்கான வாய்ப்பை உருவாக்கி, அன்னியச் செலாவணியை பெருக்கவும் வழிவகுக்கலாம். ‘‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும், கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’’ என்ற பாரதியாரின் வாக்குப்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இங்கு வரட்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளும், இந்த பல்கலைக்கழகங்களோடு இணைப்புகள் ஏற்படுத்தி, கல்வித்தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024