Thursday, July 23, 2015

இடார்சி பணிமனை தீ விபத்தால் ரயில்வேக்கு பெரும் இழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இடார்சியில் உள்ள பணிமனையில் ரயில்வே சிக்னல்களை ஒருங்கிணைக்கும் மையத்தில் (Indian Railways route relay interlocking cabin) கடந்த மாதம் 17-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள ரயில்கள் வட இந்தியாவுக்குச் செல்ல முடியாமல் ரத்து செய்யப்பட்டன.
தீ விபத்து நடந்து 35 நாள்கள் (ஜூலை 22) வரை இந்தியா முழுவதும் 3200 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் பயணச் சீட்டுகளும் ரத்து செய்யப்பட்டன. தெற்கு ரயில்வேயை பொருத்தவரை 150-க்கும் மேற்பட்ட ரயில்களும், நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேசம் மாநிலம், இடார்சியில் வடக்கு, மத்திய, மேற்கு ரயில்வே மண்டலங்களின் 275 ரயில் நிலையங்களின் சமிக்ஞைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இங்கு தீ விபத்து ஏற்பட்டதால் இந்த மண்டலங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வடக்கு, மேற்கு, மத்தியப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அதிலும் சென்னை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வட இந்திய தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்கள், விடுமுறைக்குக்கூட சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியவில்லை.
மேலும், நாட்டின் தலைநகரான தில்லிக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல, மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தா, ஹெளரா ஆகிய இடங்களுக்கும் செல்ல முடியாமல் தவித்தனர். இந்திய ரயில்வே துறையே இந்த இடார்சி தீ விபத்தால் ஸ்தம்பித்தது.
தெற்கு ரயில்வேயில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சமாக 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பயணச் சீட்டு பெறும் கவுன்ட்டர்களில் சில நேரங்களில் புதிய பயணச் சீட்டை பெறுபவர்களைக் காட்டிலும், ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளை ரத்து செய்பவர்களின் கூட்டமே அதிகம் காணப்பட்டது. இந்த நிலை செவ்வாய்க்கிழமை வரை தொடர்கிறது.
நிலைமை சீரானது: இடார்சியில் உள்ள சிக்னல்களை ஒருங்கிணைக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 50 சதவீதம் சரி செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்து.
இடார்சி ரயில் நிலையம் நான்கு முனை ரயில்வே மையம். நாள் ஒன்றுக்கு 145 விரைவு ரயில்களும், 60 சரக்கு ரயில்களும் வந்து போகக் கூடிய முக்கிய மையமாகும். தீ விபத்தத்தால் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்து, குறிக்கப்பட்ட நாளுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகவே பழைய நிலைக்கு ரயில்வே ஊழியர்கள் கொண்டு வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையைச் சரி செய்ய 600 கிலோ மீட்டருக்கு புதிய கேபிள்கள் அமைக்கப்பட்டன. மேலும் 420 கிலோ மீட்டர் தூரத்துக்கான சமிக்ஞை கேபிள்களும் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எப்போது சீராகும்?: இடார்சி ரயில்வே பணிமனை செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் பழைய நிலையில் செயல்படத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நிலைமை சீராக குறைந்தபட்சம் இன்னும் 10 நாள்கள் ஆகும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப, ஜூலை 23-ஆம் தேதி தில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் இந்திய ரயில்வேக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீள இன்னும் ஓராண்டு ஆகும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024