Friday, July 17, 2015

படித்தவன் பாவம் செய்தால்...

பிகாரில் அண்மையில் நிகழ்ந்த சம்பவம் அந்த மாநிலத்தை மட்டுமன்றி இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. அதாவது, போலிச் சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த 1,400 பேர் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பயந்து ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்திருப்பதுதான் அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம்.
கல்வியில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாநிலம் பிகார். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பிளஸ் 2 தேர்வின்போது, தேர்வு மையத்துக்குள் இருந்த மாணவர்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர்களும், உறவினர்களுமே "பிட்' கொடுத்து உதவிய சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நடவடிக்கைக்குப் பயந்து ராஜிநாமா செய்திருப்பதும் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
நடந்தது இதுதான்... பிகார் மாநிலத்தில் 2006 - 2011 காலகட்டத்தில் நிதீஷ் குமார் முதல்வராக இருந்தபோது, தொகுப்பூதிய அடிப்படையில் (அதாவது ரூ.3,000 சம்பளத்தில்) 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் தொடர்பான விவரங்களைச் சேகரித்து அவர்களைப் பணிநீக்கம் செய்யும்படி கல்வித் துறை அதிகாரிகளுக்கு 2014 ஜூலை 7-ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக 2014 ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அந்த மாநிலக் கல்வி அமைச்சர் பிரிஷன் படேல், போலிச் சான்றிதழ்கள் கொடுத்துப் பணியில் சேர்ந்ததாக 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், இதேபோல ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களும் விரைவில் கண்டறியப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைக் கண்டறிந்து பணிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் பணிபுரியும் 4.50 லட்சம் ஆசிரியர்களின் பட்டப் படிப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்து ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாங்களாகவே முன்வந்து ராஜிநாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுவதுடன், இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத் தொகையும் அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதன் தொடர்ச்சியாக, போலிச் சான்றிதழ்கள் கொடுத்துப் பணியில் சேர்ந்த 1,400 ஆசிரியர்கள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி ராஜிநாமா செய்தனர். எனினும், இன்னும் 20,000 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், மேலும் பலர் ராஜிநாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லலித் மோடி, வியாபம் மர்ம மரணங்கள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிய விஷயமாக விவாதிக்கப்படவில்லை.
இது ஒருபுறமிருக்க, இந்தியா முழுவதிலும் 21 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அண்மையில் ஒரு பட்டியலை வெளியிட்டு அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது.
இந்தப் பட்டியலில், தலைநகர் தில்லி தொடங்கி கேரளம், தமிழகம் வரை பல்வேறு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், பிகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே போலிச் சான்றிதழ் கொடுத்து பல்வேறு துறைகளிலும் ஏராளமானோர் பணியில் சேர்ந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மற்றொருபுறம், போலிச் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் அண்மையில் தனது பதவியை இழந்தார். அவர் பிகாரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்ததாகத் தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தார்.
போலி மருத்துவர்கள், போலி வழக்குரைஞர்கள் என பல்வேறு துறைகளில் போலிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கல்வித் துறையிலும் போலிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், பிற துறைகளில் உள்ள போலிகளால் குறிப்பட்ட அந்தத் துறைகளுக்கு மட்டுமே இழப்பு. ஆனால், ஆசிரியர் பணி என்பது அப்படியல்ல. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள்.
இளைஞர்களை நல்வழிப்படுத்தி, திறமைசாலிகளாக உருவாக்கி, நாளைய சமுதாயத்தை வலுவான சமுதாயமாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. அதனால்தான், மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய், தந்தைக்கு அடுத்தபடியாக குருவை வைத்துள்ளனர்.
அப்படிப்பட்ட ஆசிரியர் பணியில் போலியான தகுதிச் சான்றிதழ்களைக் கொடுத்து பணிபுரியும் கொடுமையை என்னவென்று சொல்வது...

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024