Wednesday, July 15, 2015

சொன்னது நீதானா.. என் விசுவே’


மகாபாரத கர்ணன் தொடங்கி, நட்புக்கு பலரை உதாரணம் சொல்வார்கள். தமிழ்த் திரையுலகில் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், கவிஞர் கண்ணதாசனும்.

இவர்களது கூட்டணியில் உரு வான பல பாடல்களின் பின்னணியில் சுவாரஸ்யங்கள் உண்டு. பாடல் கம்போஸிங் செய்யும்போது, யார் முதலில் வருகிறாரோ, அவர் லேட்டாக வருபவர் மீது செல்லமாக கோபப்படுவார். அந்தக் கோபத்தின் விளைவு, அருமையான பாடல் பிறக்கும்.

இப்படித்தான், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கான பாடல் கம்போஸிங் நடந்தபோது, எம்எஸ்வி, இயக்குநர் ஸ்ரீதர், பாடகி சுசீலா எல்லோரும் ஆஜராகி இருக்க, கண்ணதாசன் வரவில்லை. நேரம் ஆக ஆக எம்எஸ்வி-க்கு கோபம். கவிஞரைப் பற்றி கடிந்துகொண்டார். லேட்டாக வந்த கவிஞரிடம் பாடலுக்கான சூழலை ஸ்ரீதர் சொல்ல, நான்கைந்து பல்லவிகளை எழுதிக் கொடுத்தார். இயக்குநருக்கு திருப்தி இல்லை.

அப்போது அங்கிருந்த ஒருவர், கவிஞரை எம்எஸ்வி கடிந்துகொண் டது பற்றி அவரது காதில் போட்டு விட்டார். அதைக் கேட்டு கவிஞர் கோபப்படவில்லை. ‘விசு, நீயா அப்படி பேசினாய்’ என்று சிரித்த படியே கேட்டுவிட்டு, தனக்கே உரிய பாணியில் ‘சொன்னது நீதானா சொல்.. சொல். என் விசுவே..’ என்று ராகமாக பாட, டக்கென்று பிடித் துக் கொண்டார் ஸ்ரீதர். ‘இதுதான் நான் எதிர்பார்த்தது’ என ஸ்ரீதர் சொல்ல, அந்த வரிகளையே பல்லவியாக்கி பாட்டை எழுதினார் கண்ணதாசன்.

‘சொன்னது நீதானா.. சொல்.. சொல்.. என் உயிரே.’

என்ற அந்தப் பாடல் பெண்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

அதேபோல, ‘பெரிய இடத்துப் பெண்’ படத்துக்கான பாடல் கம் போஸிங்.. இந்த முறை கண்ண தாசன் முன்னதாக வந்துவிட, எம்எஸ்வி வீட்டில் அயர்ந்து தூங்கிவிட்டார். லேட்டாக எழுந்த எம்எஸ்வி, அவசரம் அவசரமாக கிளம்பி செட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அங்கே கவிஞர் இல்லை. ஒரு பேப்பரில் 2 வரிகளை மட்டும் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தார்.

‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா’

தன்னை குறித்துதான் கவிஞர் இவ்வாறு எழுதி வைத்துவிட் டுப் போயிருக்கிறார் என்பது எம்எஸ்வி-க்கு புரிந்தது. ஆனாலும், அந்த வரிகளை கொஞ்சமும் மாற்றாமல் அதையே பல்லவியாக போட்டு பாட்டெழுதித் தருமாறு கேட்க, கவிஞரும் கோபத்தை மறந்து பாட்டை எழுதித் தந்தார்.

இப்படி, கண்ணதாசனுக்கும் தனக்குமான நட்பைப் பற்றியும் தங்களது கூட்டணியில் உருவான பாடல்களின் பின்னணி குறித்தும் பல மேடைகளில் எம்எஸ்வி-யே சொல்லி கண்கலங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024