Monday, July 20, 2015

சாலை விபத்துகளும், தற்கொலைகளும்!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், அதில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2012–ம் ஆண்டிலேயே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு முதல்இடத்திற்கு வந்துவிட்டது. அந்த ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் 16,175 பேர் உயிரிழந்தனர். தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சாலை விபத்து உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் கணக்கீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 2014–ம் ஆண்டு நாடு முழுவதும் சாலை விபத்துகளில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 107 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில், தமிழ்நாட்டில் மட்டும் 17 ஆயிரத்து 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை தந்துள்ளது. சென்னையில் நடந்த விபத்துகளில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளின் எண்ணிக்கையை பொருத்தமட்டில், நாட்டிலேயே அதிகமாக தமிழ்நாட்டில், அதாவது 69,095 விபத்துகள் நடந்து இருக்கின்றன. இருசக்கர வாகன விபத்து உயிரிழப்புகளில் தமிழ்நாடுதான் முதல் இடம்.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்ட வேதனையான தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 666 பேர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்றும், இதில் மராட்டியத்தில் 16,307 பேர்களும், தமிழ்நாட்டில் 16,122 பேர்களும் தற்கொலை செய்து முதல் இரு இடங்களில் இருக்கிறார்கள். ஆக, சாலை விபத்துகளை தடுப்பதிலும், தற்கொலைகளை தடுப்பதிலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

சாலை விபத்துகளை தடுக்கவேண்டும் என்றால், நிச்சயமாக போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. சாலைகளை இன்னும் சீராக்கவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் செலவை பொருட்படுத்தாமல், ஆங்காங்கு சி.சி. டி.வி. கேமராக்கள் பொருத்தப்படவேண்டும். ஒரு வாகனம் விதியை மீறினாலோ, அல்லது அதிவேகத்தில் சென்றாலோ, அந்த சி.சி. டி.வி. கேமராவில் பதிவான தகவல்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், கண்காணிக்கும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படவேண்டும். அனைத்து சாலைகளிலும் எது ஒருவழிப்பாதை?, எந்தெந்த வழி எந்தெந்த வாகனங்களுக்கானது?, எந்தெந்த இடங்களில் குறுக்கு சாலை சந்திக்கிறது?, எந்தெந்த இடங்களில் எவ்வளவு வேகத்தில் செல்லலாம்? என்பதை விளக்கும் போர்டுகள் வைக்கப்படவேண்டும். ஏதாவது விபத்துகள் ஏற்பட்டால், அந்த இடத்திலிருந்து சில நிமிடங்களில் அவர்களுக்கு முதல் உதவியோ, தொடர் மருத்துவ சிகிச்சையோ அளிக்கும் வகையிலான சிகிச்சை நிலையங்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருக்கவேண்டும்.

ஏற்கனவே, வருகிற அக்டோபர் 1–ந்தேதி முதல் அனைத்து புதுவாகனங்களிலும் ‘ஸ்பீடு கவர்னர்கள்’ என்று அழைக்கப்படும், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவேண்டும் என்ற அறிவிப்பை அமல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், படிப்படியாக அனைத்து வாகனங்களிலும் பொருத்தவேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நல்ல மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும். இந்த அறிக்கை வெளியான அதேநாளில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர், அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் விபத்து சிகிச்சை தொடர்பான முதுகலை பட்டப்படிப்புகள் தொடங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த அறிக்கை ஒரு எச்சரிக்கை மணியை அடித்துவிட்டது. உடனடியாக, சம்பந்தப்பட்ட துறையினர் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிப்பதை உறுதிசெய்து, விபத்தில்லா தமிழ்நாடாக மாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து, அவைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024