Wednesday, July 15, 2015

உம் இசை என்றும் எம்மோடு இருக்கும்!



தமிழில் திரை இசை தொடக்கத்தில் மிகுதியும் செவ்வியல் இசையாகவே இருந்துவந்தது. பிறகு, அதன் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாக மாறியது. எனினும் அது முழுமையாக மக்கள் இசையாக மாறி விடவில்லை. பள்ளிக் கல்வியைத் தொடர முடியாத, திரைத் துறையில் எடுபிடி வேலைகளைச் செய்துவந்த விசு என்கிற எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்கத் தொடங்கிய பிறகே அது சாத்தியமாயிற்று. மெல்லிசை மன்னர் என்று பொருத்தமாகவே பெயர்பெற்ற, எம்.எஸ்.வி. என அன்போடு அழைக்கப்பட்ட இந்தச் சாதனையாளர், தமிழில் மெல்லிசை என்பதற்கான இலக்கணத்தை வகுத்து, அதைத் தவிர்க்க முடியாத இசை வகையாக மாற்றிக்காட்டினார்.

தமிழ் வணிகத் திரையுலகம்குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், தமிழ்த் திரையில் எந்தக் காலத்திலும் அதன் பெருமைக்குரிய மிகச் சில அம்சங்களில் ஒன்றாக இருந்துவருவது அதன் இசை. இந்த வளமான மரபின் மிக முக்கியமான கண்ணி எம்.எஸ்.வி. இந்திய மரபிசையையும் மேற்கத்திய இசையையும் வசீகரமாகக் கலந்து தந்த இவரது மெட்டுக்கள் மிக எளிமையானவை. கேட்பவர்களைச் சட்டென்று கவரக் கூடியவை. கேட்கக் கேட்க மன அரங்கின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவி அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடக்கூடியவை.

அன்றைய பாடலுக்கான காட்சிகளில் இயக்குநர்களும் நட்சத்திர நடிகர்களும் எப்போதும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அறுபதுகள், எழுபதுகளில் உச்சத்தில் இருந்த இந்தப் போக்கினை முழுமையாகப் பயன் படுத்திக்கொண்டவர் எம்.எஸ்.வி. இன்னொரு மகத்தான சாதனையா ளரான கண்ணதாசனுடன் இணைந்து, அவர் பாடல் காட்சிகளைச் சாகாவரம் கொண்ட தருணங்களாக மாற்றினார். மனித உணர்ச்சிகளின் அத்தனை சாயைகளையும் பிரதிபலிக்கும் மெட்டுக்களைச் சரளமாக உருவாக்கித் தந்தார். வாழ்வின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் பொருத்தமான, அற்புதமான மெட்டுக்களை உருவாக்கித்தந்த எம்.எஸ்.வி., தமிழர்களின் உளவியலில் ஆழ்ந்த இசைச் சலனங்களை ஏற்படுத்தி யவர்களில் முதன்மையானவர்.

பல்லவி என்பது ஒரு பாடலுக்கு முக்கியமானது. மறதி என்னும் இயற்கை நியதியை மறுக்கும் பல பல்லவிகளைத் தந்த எம்.எஸ்.வி-யின் மெட்டுக் களில் இடையில் வரும் வரிகளின் அசைவுகூட ரம்யமாக இருக்கும். ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்னும் பல்லவிக்கு இணையாக, ‘வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான்’ என்னும் வரியின் இசையும் மனதில் தங்கியிருக்கும். அந்த மெட்டில் ‘நீரில்’ என்னும் சொல்லுக்குக் கிடைக்கும் கவுரவம் மெல்லிசை மன்னரின் சிறப்பு முத்திரை. ஆயிரக் கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த ஒரு மாபெரும் கலைஞனின் ஓரிரு பாடல்களை நினைவுகூர்வதன் மூலம் அவரது மேதைமையையும் பங்களிப்பையும் உணர்ந்துவிட முடியாது. பல விதமான உணர்ச்சிகளுக்கான இலக்கணம்போல அமைந்த எம்.எஸ்.வி-யின் மெட்டுக்கள் தலைமுறைகள் தாண்டித் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. பல்வேறு இசைப் போட்டிகளில் அவரது பாடல்கள் இளையவர்களால் பாடப்படும்போது பெரியவர்கள் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். காலமும் அவர்களுடன் உறைந்து நிற்கிறது.

அற்புதமான தன் மெல்லிசையால் மனங்களைப் பண்படுத்திய அந்த மன்னர் மறைந்துவிட்டார். பெரிய அங்கீகாரமோ விருதுகளோ பெறாமல் மறைந்த அந்த மேதை மக்களின் ஆராதனையே தனக்குப் பெரிய விருது எனத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். யாருடைய தயவும் இன்றிக் கிடைத்த அந்த மகத்தான விருதுடனும் இசையில் ஊறிய இவ்வுலக வாழ்வை வாழ்ந்து முடித்துவிட்டார் எம்.எஸ்.வி!

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024