Friday, July 17, 2015

எம்.எஸ்.வி.- தமிழர்களின் கிலுகிலுப்பை!



இலங்கை வானொலியில் மயில்வாகனன் சர்வானந்தாவோ, ராஜேஸ்வரி சண்முகமோ ‘பொங்கும் பூம்புனல்’ என்று சொல்லும்போது கடிகாரம் எட்டு மணியைக் காட்டும். அப்படியொரு சர்க்கரைப் பொழுதில்தான் எம்.எஸ். விஸ்வநாதன் என் செவியில் நுழைந்து மனசுக்குள் ரங்கராட்டினம் சுழற்றினார்.

‘பூ மாலையில் ஓர் மல்லிகை/ இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் காதுகளுக்கு தந்த தித்திப்பைப் போன்று எந்தப் பழங்களும் என் வாய்க்குத் தரவே இல்லை.

நின்று நிதானித்துப் பார்க்கும்போது - இன்று நாற்பதைத் தாண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பொழுதுகளில் ஒரு சென்டி மீட்டர் இசை மழையையாவது பொழிந்திருப்பார் எம்.எஸ்.வி.

இரவு ஏழரை மணிக்கு திருச்சி வானொலியில் ஒலிப்பரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில்

‘தாய் வரம் தந்த வரம்… தாவரம்’ என்கிற பாடல் கசியும். விவசாயப் பின்னணியைச் சேர்ந்த எங்களுக்கெல்லாம் விஸ்வநாதன் இவ்வாறாகத்தான் அறிமுகமாகியிருந்தார்.

காதல், ஊடல், திருமணம், தாம்பத்யம், பிறப்பு, வறுமை, உயர்வு, நட்பு... என வாழ்வின் எல்லா சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டிருக்கிறது அவருடைய இசை. தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன அறிவியல் சாதனங்களின் புழக்கமற்ற அப்போது ரேடியோதான் சந்தோஷ வாசல். அந்த வாசல் வழி வழிந்தோடிய விஸ்வநாதனின் விரல் வித்தை தமிழர்களின் 50 ஆண்டு கால மகிழ்ச்சியின் நீளம்.

எம்.எஸ்.வியின் சாதனை என்பது தமிழ்த் திரையிசையின் பாதி வரலாறு. படத்தின் பெயர் தெரியாது; அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், இது ‘எம்ஜிஆர் பாட்டு; இது சிவாஜி பாட்டு’ என்று சொல்லிவிட முடிகிற அளவுக்கு டி.எம்.எஸ்.ஸின் பக்கபலத்தோடு வித்தியாசம் காட்டியது எம்.எஸ்.வியின் இசை நுணுக்கம்.

ஒரு காலத்தில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை வரை பாய்ந்தோடியதைப் போல எல்லோருக்குமான இசையைத் தந்ததுதான் எம்.எஸ்.வி.யின் முதல் சாதனை.

அடுத்தது - அவர் போட்ட மெட்டுக்கள். சுயம்புவாக அவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் வரலாற்றில் ‘கிளாஸிகல்’ ரகத்தில் சேர்ந்துவிடும். மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சுகம் எங்கே’ என்று ஒரு படம் தயாரித்தது. இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமான விஸ்வநாதன் - ராமமூர்த்தியிடம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் “இந்தி டியூன் கொடுத்தா பாட்டு போடுவீங்களா?” என்று கேட்டுள்ளார்.

“நாங்க சொந்தமாதான் டியூன் போடுவோம். விருப்பமிருந்தா எங்களை புக் பண்ணுங்க. இல்லேன்னா எங்களை விட்டுடுங்க” என்று கம்பீரமாகச் சொன்னவர் எம்எஸ்வி.

எங்கள் கிராமத்தில் தங்கராசு என்கிற ஒரு சிகைதிருத்துநர் இருந்தார். அவருடைய ‘சார்மினார்’ சலூன்தான் எங்களின் விடுமுறை விருப்பம். எம்.எஸ்.வி.யின் தீவிர ரசிகர். ஒரு பாடலில் அதன் வரிகளை மட்டும் பாட மாட்டார். பாடலின் ஆரம்பத்திலோ இடையிலோ கடைசியிலோ வரும் இசைக் கருவிகளின் ஜாலங்களையெல்லாம் அவர் உருட்டிவிடும்போது, நாங்கள் திக்குமுக்காடிப்போவோம்.

‘ஊட்டி வரை உறவு' படத்தில் பி.சுசீலா பாடியது 'தேடினேன் வந்தது' என்கிற பாடல். அதனை தங்கராசு,

'தேடினேன் வந்தது...

டின்டக்கு டின்டக்கு...

நாடினேன் தந்தது

டின்டக்கு டின்டக்கு'

என்று பாடியதை நினைத்துப்பார்க்கும்போது எம்.எஸ்.வியின் இசை சாம்ராஜ்யம் தங்கராசு வரை விரிந்திருந்தது தெரிகிறது.

‘அவளுக்கென்ன அழகிய முகம்' என்ற ‘சர்வர் சுந்தரம்' படப் பாடலை பாடும்போது பாடல் வரிகளுக்கு இடையே டிரிபிள் பாங்கோஸும், கிளாரிநெட்டும் சேர்ந்திசைக்கும்

‘பாபப்பப்பம் பாபபப பாபப்பப்பம்...

ன்ட்டாகு... ன்ட்டாகு... ன்ட்டாகு’ என்று தங்கராசுக்குள் எம்.எஸ்.வி. புகுந்து புறப்படுவார்.

‘பாகப் பிரிவினை' படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு' பாடலின் இடையே ஒலிக்கும்

‘தந்தானே தானனன்னே... தானன்னே தானனன்னே... தானன்ன தானானே...'

என்கிற ஹம்மிங்கை தங்கராசு மூலம் எங்கள் கிராமத்துக் கீர்த்தனையாக்கியவர் எம்எஸ்வி.

‘சிவந்த மண்' படத்தில் ‘ஒரு ராஜா ராணியிடம்' என்கிற பாடலை தங்கராசு பாடிக்கொண்டே வருவார். இடையில்

‘டண்டரரானே டண்டரரானே... டண்டர டண்டர டண்டர டண்டரரா...' என்று முழங்கிவிட்டு

‘வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்

புதுவிதமான சடுகுடு விளையாட்டு

விட்டுவிடாமல் கட்டியணைத்து

தொட்டது பாதி பட்டது பாதி

விதவிதமான ஜோடிகள் விளையாட்டு

இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ’ என்று சரணத்துக்குள் பாய்ந்துவிடுவார்.

ராகம், ஆலாபனை, அவரோகணம், தாளக்கட்டு, நோட்ஸ் எதுவுமே தெரியாது தங்கராசு என்கிற எங்கள் ஊர் எம்.எஸ்.வி.க்கு. தமிழகத்தில் எத்தனையோ தங்கராசுக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். இந்தச் சாதனையை எந்தத் திரையிசைக் கலைஞனும் இதுவரை நிகழ்த்தவே இல்லை.

சாஸ்திரிய இசை அரங்குகளில் பாடிக்கொண்டிருந்த பாலமுரளி கிருஷ்ணாவை ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கலைக்கோயில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே…’ பாடலைப் பாட வைத்து, இன்னொரு உலகில் புகழ்பெற்ற மேதமையைத் தமிழ் திரையிசைக்குள் கொண்டுவந்தார் எம்.எஸ்.வி.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு பாடலில் உண்மையிலேயே ஓர் அபூர்வ ராகத்தைப் பயன்படுத்த நினைத்தார் எம்.எஸ்.வி. அந்த நேரத்தில் பாலமுரளி கிருஷ்ணா ‘மஹதி’ என்கிற பெயரில் ஒரு ராகத்தை உருவாக்கியிருந்தார். அந்த ராகத்தையும் வேறு சில ராகங்களையும் குழைத்து ஒரு ராகமாலிகையாக எம்.எஸ்.வி. கம்போஸ் செய்ததுதான் ‘அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்’ பாடல்.

பந்துலு, பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்று பல இயக்குநர்கள் தங்களின் பல்லக்கை வெற்றிகரமாக நகர்த்த சக்கரமாக இருந்தவர் எம்.எஸ்.வி. திரைப்படப் பாடல்களை இசையை உரித்துவிட்டுப் பார்த்தால் அதில் உள்ள தமிழ் சட்டென்று நம்மைக் கவர்ந்திருக்காது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்ற கவிஞர்களை நாம் கொண்டாட விஸ்வநாதன் ஒரு மூல காரணம்.

தமிழ்த் திரையிசையில் பல வடிவங்களில் இசையை வாரி வழங்கியவர் எம்.எஸ்.வி.

‘அன்புள்ள மான்விழியே/ஆசையில் ஓர் கடிதம்/ நான் எழுதுவதென்னவென்றால்/ உயிர்க்காதலில் ஓர் கவிதை’ என்று அஞ்சல் அட்டைக்கு இசைச் சிறகு முளைக்க வைப்பார்.

‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி/ புது சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி’ என்று கல்யாணப் பத்திரிகை வடிவில் அட்சதை தூவும் ஒரு பாடல். இந்தப் பாடலில் வரும் ‘தங்கள் நல்வரவை விரும்பும்/ ரகுராமன் ரகுராமன் ரகுரா…மன்’ என்கிற வரிகளின்போது யாருக்கும் தெரியாமல் கண்களைத் துடைத்துக்கொண்ட பல அண்ணன்களை நான் பார்த்திருக்கிறேன்.

‘வாராயோ தோழி வாராயோ’ என்று பல தமிழ் வீடுகளின் வாசலுக்கு மருமகள்களை வலது காலை எடுத்து வைத்து அழைத்து வந்திருக்கிறது எம்.எஸ்.வி-யின் இசை.

‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

மலரும் விழிவண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விடிந்த கலையன்னமே

நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி

நடந்த இளம் தென்றலே’ என்று ‘பாசமலர்’ படத்தில் கண்ணதாசனுடன் இணைந்து எம்.எஸ்.வி தந்த இசை தாலாட்டும் தாலாட்டு பாடியவர்களும் காணாமல் போன இந்நாட்களில் தமிழர்களின் கிலுகிலுப்பையாகும்.

தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024