Thursday, July 23, 2015

சாதனை தருகிற வேதனை

அன்று தொலைக்காட்சியைப் பார்த்தவர்கள் துடித்துப் போனார்கள். "இது என்ன கொடுமை?' என்று சொல்லாதவர்களே இல்லை. அப்படி ஒரு காட்சியை இதற்கு முன் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். "இப்படியும் நடக்குமா?' என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். வேறு என்ன செய்வது?
4 வயதுக் குழந்தைக்கு மதுவை ஊற்றி அருந்தச் செய்யும் காட்சி மனிதநேயம் கொண்டோரைப் மனம் பதறச் செய்யாதா? இளைஞர்கள் சிலர் சேர்ந்து சிறுவனை வலுக்கட்டாயமாக மது அருந்த வற்புறுத்துவதும், அருந்தி முடித்ததும் சிறுவன் குவளையை வீசி எறிவதும் அக்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
மதுவை ஊற்றிக் கொடுக்கும் காட்சி கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), முகநூலில் (ஃபேஸ்புக்) வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பார்த்தவர்களைப் பதை பதைக்க வைத்தது.
குடி குடும்பத்தை அழிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். தெரிந்துதான் குடிக்கிறார்கள். "மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடம்புக்குக் கேடு' என்று அச்சடித்து ஒட்டி வைத்துக் கொண்டுதான் அரசு விற்பனை செய்கிறது. அப்பாவி மக்களும் படிக்காமல் குடித்து அழிகிறார்கள்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்ததுபோல முதியவர்களிடமிருந்து இளைஞர்களுக்குத் தாவி, இப்போது மாணவர்களையும், குழந்தைகளையும் சீரழிக்கும் அளவுக்குச் சமுதாயம் செயல் இழந்து போய்விட்டது. இதனைப் பார்த்துக் கொண்டு எதுவும் செய்யாமல் "சும்மா இருப்பதே சுகம்' என்று இருப்பதைவிட, வேறு தேசத் துரோகம் ஏதும் இருக்க முடியாது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள மேல் சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் பெற்றோர் கட்டுமானத் தொழிலாளர்கள்; சென்னையில் தங்கி வேலை செய்கிறார்கள். பாட்டியின் பராமரிப்பில் சிறுவன் இருந்து வருகிறான். அங்கன்வாடிக்குச் சென்று படித்து வருகிறான்.
23.6.2015 அன்று ஆடு மேய்க்கச் தனது பேரனையும் பாட்டி அழைத்துச் சென்றுள்ளார். மேல் சோழங்குப்பம் ஏரி அருகே உள்ள மைதானத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவனை அவனது தாய்மாமன் அழைத்துச் சென்றுள்ளார்.
அவனை மரத்தடியில் உட்கார வைத்து, வாங்கி வைத்திருந்த மதுவைக் குவளையில் ஊற்றி அருந்தச் செய்து உள்ளனர். இளைஞர்களின் இந்தக் கேளிக்கை நிகழ்வை செல்லிடப்பேசியில் படம் பிடித்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
மதுவின் போதையில் அந்த இளைஞர்கள் தாம் செய்வது எவ்வளவு பெரிய பாதகம் என்பதுகூடத் தெரியாமல் குதூகலமாகக் கொண்டாடியிருக்கிறார்கள். என்னே கொடுமை!
இது கட்செவி அஞ்சலில் பகிரப்பட்டு பரவியதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸôர், இளைஞர்களைக் கைது செய்தனர். குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்புச் சட்டம், கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி வெளிச்சத்துக்கு வந்த பிறகு, இதே போன்ற பல நிகழ்வுகள் பல இடங்களில் நடந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. இதனை வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக மட்டும் பார்க்கக் கூடாது. அழுகிப் போன சமுதாயத்தின் முடைநாற்றம் இது; வார்த்தைகளில் எழுத முடியாத வக்கிரம்; ஆறறிவு கொண்ட மனிதனுக்கு அவமானம்.
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பது நம் பாரம்பரிய பழமொழி. அந்த வணக்கத்துக்குரிய குழந்தைகளை இப்படித்தான் கொண்டாடுவதா? மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகளைக் குறைத்துக் கொண்டே போனால் எதிர்காலம் என்னாகும்?
2015 ஜூலை 8. கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி தன் தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு போதை தலைக்கேறி போக்குவரத்து நிறைந்த நடுசாலையில் கூச்சல் போட்டு ரகளை செய்துள்ளார். தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் விரைந்து சென்று மாணவியை மீட்டு காவல் நிலையத்துக்குக் கொண்டு போயுள்ளனர்.
அங்கு மாணவியின் போதையைத் தெளிய வைத்த மகளிர் காவலர்கள், மாணவியின் முகவரி, பெற்றோரின் செல்லிடப்பேசி எண்ணைப் பெற்று அவர்களைக் காவல் நிலையத்துக்கு வரவழைத்துள்ளனர்.
போதையிலிருந்த மகளின் நிலை கண்டு பெற்றோர் கதறி அழுதுள்ளனர். காவல் துறையினர் அறிவுரை கூறி, மாணவியின் நலனைக் கருதி வழக்குப் பதிவு செய்யாமல் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை முன்பு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஒரு பெண் மது வாங்கி அருந்தியிருக்கிறார். போதை ஏறியதும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு புறப்பட்டு விட்டார். குழந்தையைத் தூக்கிச் செல்லுமாறு சிலர் வலியுறுத்தியபோது அவர்களைக் கடுஞ்சொற்களால் ஏசியுள்ளார்.
அந்தப் பெண், குழந்தையைக் கடத்தி வந்திருப்பாளோ என்று சந்தேகப்பட்டு சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அந்தப் பெண் சேலம் ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அந்தக் குழந்தை அவளுடையதுதான் என்றும் தெரிய வந்துள்ளது. இதுவும் ஜூலை 8 அன்று நடந்ததுதான்.
இந்த நிகழ்வுகள் எல்லாம் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான். தமிழ்நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் எடுத்துக்காட்டுகள். சமுதாயத்தின் முக்கிய அங்கங்களான பெண்களும், குழந்தைகளும் வழிமாறிப் போய் விடுவார்களானால், அந்தச் சமுதாயத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
திசைகாட்டும் கருவிகளே திசைமாறிப் போய் விடுமானால் கப்பலும், அதில் பயணம் செய்யும் பயணிகளும் என்ன ஆவது? அலைகடலில் அவர்களைச் சூழ்ந்து கொண்டுள்ள சூறாவளியிடமிருந்து அவர்கள் தப்பிக்க வழி என்ன?
சிறுவர்களை இழிவுபடுத்தும் விடியோ, புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
18 வயது நிறைவடையாத சிறார்களைப் பற்றிய அடையாளம் தெரியக் கூடிய படங்கள், விடியோக்களை வெளியிடுவது குற்றம். அப்படி வெளியிடுவோருக்கு இளைஞர் நீதிச் சட்டம் 2000 (திருத்தப்பட்டது 2006) பிரிவு 21-ன்படி ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதை உணராமல் பலர் இந்தக் குற்றச் செயலைச் செய்கின்றனர்.
இதுபோன்ற தகவல்கள் தெரிய வந்தால் அதை சமூக ஊடகங்களில் உலவ விடாமல் சைல்டு லைன் அல்லது காவல் துறையினருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும். அப்படிச் செய்யாமல் சமூக ஊடகங்களில் காட்சிகளைப் பரப்பும் நபர்கள் குற்றவாளியாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுவர் என்றும் சென்னை மத்திய குற்றப் பிரிவுக் காவல் துறையும் கூறியுள்ளது.
நாட்டில் ஆங்காங்கு நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிப்படுத்துவதன் காரணமாகவே சமூக அவலங்கள் வெளியில் தெரிகின்றன. சமூக ஆர்வலர்கள் இதனைக் கண்டித்துப் போராடுவதன் மூலமாகவே மக்களுக்கும், அரசுக்கும் காவல் துறைக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது. ஊடகங்களின் ஒலிபரப்புகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் யாருக்கு நன்மை செய்கிறார்கள்?
குடும்பத்தில் யார் மது அருந்தினாலும், சமுதாயத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தெருவில் இறங்கிப் போராடுவதற்குக் காரணமும் அதுதான்.
பீர், விஸ்கி, பிராந்தி, ரம் உள்ளிட்ட மது பானங்கள் தமிழக அரசுக்குச் சொந்தமான தடய அறிவியல் ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, இந்த மது பானங்கள் அருந்துவதற்குத் தகுதியானவை என்று சான்றிதழ் பெற்ற பிறகே விற்பனை செய்யப்படுகின்றன என்று டாஸ்மாக் நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால், தமிழக தடய அறிவியல் துறையும், மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய ஆய்வுக் கூடமும், "மது பானங்களிலுள்ள நச்சுத் தன்மையை ஆய்வு செய்யத் தங்களிடம் எந்த ஒரு வசதியும் இல்லை' என்று கூறியுள்ளன. இதுபற்றி உயர்நீதிமன்றமும் தமிழக அரசிடம் பதில் அளிக்குமாறு கேள்வி எழுப்பியுள்ளது.
மக்களைச் சீர்திருத்தும் கல்வியைத் தனியாருக்கு விட்டுவிட்டு, மக்களைச் சீரழிக்கும் மதுவை அரசே விற்பனை செய்வது மக்கள் நலம் நாடும் அரசுக்கு அழகில்லை; இது தீராத பழியாகும். கேரளத்தைப் போல் தமிழக அரசும் மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
"ஒரு மணி நேரத்துக்கு இந்தியா முழுமைக்கும் என்னைச் சர்வாதிகாரியாக நியமித்தால், முதல் காரியமாக நான் என்ன செய்வேன் தெரியுமா? இழப்பீடு கொடுக்காமல் எல்லா மதுக் கடைகளையும் மூடி விடுவேன்...' என்று உரத்தக் குரலில் பேசினார் காந்தியடிகள். (யங் இந்தியா: 25-6-1931)
இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி மட்டுமே. தமிழ்நாட்டிலோ ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி. இது சாதனையா? வேதனையா?
"ஒரு மணி நேரத்துக்கு இந்தியா முழுமைக்கும்
என்னைச் சர்வாதிகாரியாக நியமித்தால், முதல் காரியமாக நான் என்ன செய்வேன் தெரியுமா? இழப்பீடு கொடுக்காமல் எல்லா மதுக் கடைகளையும் மூடி விடுவேன்...'
என்று உரத்தக் குரலில் பேசினார் காந்தியடிகள்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...