Wednesday, July 15, 2015

விஸ்வ* நாதம்!



தலைமுறைகளைத் தாண்டி நினைவில் நிற்கும் பாடல்களைத் தந்த மாபெரும் இசைக்கலைஞர் எம்.எஸ்.வி.

தமிழ்த் திரையிசையின் பொற்காலத்தைக் கண்ணதா சனுடன் இணைந்து ஆட்சிசெய்த மாமன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் காலமானார் என்ற தகவல் வந்தததும், சமூக வலைதளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவியத் தொடங்கின. தங்களுக்குப் பிடித்தமான எம்.எஸ்.வி-யின் பாடல்களைப் பலரும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். தலைமுறைகளையும் காலத்தின் வீச்சையும் கடந்து அவரது படைப்புகள் நிலைபெற்றிருப்பதை உணர முடிந்தது. 1950-களின் தொடக்கத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்தியத் திரையிசையில் கோலோச்சியவர் எம்.எஸ்.வி. உண்மையில், பழைய பாடல்கள் என்ற பொதுப் பெயரில் அடங்கியிருப்பவற்றில் பெரும்பாலானவை அவரது ஆயிரக் கணக்கான பாடல்கள்தானே!

தொடக்கத்தில் நாடகங்களின் திரைவடிவமாக இருந்த தமிழ்த் திரைப்படங்களில் நிரம்பித் ததும்பிய பாடல்கள், சாஸ்திரிய இசையின் அடிப்படையில் அமைந்தவையாகவே இருந்தன. 1950-களில்தான் ஜனரஞ்சகமான இசையில் அமைந்த பாடல்களுக்கு தமிழ்த் திரையிசையில் இடம் கிடைக்கத் தொடங்கியது. காலம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள புதுப்புது திறமைசாலிகளைத் தன் பிரதிநிதிகளாக அறிமுகப்படுத்துவது உண்டு. அப்படி, 1950-களில் தமிழ்த் திரையிசையின் போக்கை மாற்றியமைத்த இசைக் கலைஞராகக் காலத்தால் முன்னிறுத்தப்பட்டவர் எம்.எஸ்.வி. 1950-ல் வெளியான ‘மந்திரிகுமாரி’ படத்தின் மூலம் திருப்புமுனையைக் கண்ட எம்.ஜி.ஆர்., 1952-ல் வெளியான பராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசன் ஆகியோர் தமிழ்த் திரையின் வணிக வளர்ச்சிக்கும் தரத்துக்கும் தந்த பங்களிப்பைப் போல், தமிழ்த் திரையிசையின் வளர்ச்சியில் எம்.எஸ்.வி-யின் பங்கு அளவீடுகளுக்கு அப்பாற்பட்டது. அதே காலகட்டத்தில்தான், அவரது ஆஸ்தான பாடகர்களான டி.எம். சவுந்தரராஜன், பி.சுசீலாவின் சகாப்தமும் தொடங்குகிறது.

அறுபதுகளின் அரசன்!

சக இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தியுடன் இணைந்து அவர் வழங்கத் தொடங்கிய பாடல்கள் பல தலைமுறைகளின் வாழ்வுடன் கலந்துவிட்டவை. 1950-களில் ‘பணம்’, ‘ஜெனோவா’, ‘குலேபகாவலி’, ‘மாலையிட்ட மங்கை’ போன்ற படங்களின் மூலம் சாம்ராஜ்ஜியத்தை விரிக்கத் தொடங்கிய ‘விஸ்வநாதன் - ராமமூர்த்தி’ ஜோடியின் இசை, 1960-களில் தனது படைப்பாற்றலின் உச்சத்தை அடைந்தது. பின்னாட்களில் டி.கே. ராமமூர்த்தியைப் பிரியும் சூழல் ஏற்பட்டாலும் அவரது பாடல்களின் வெற்றி பாதிக்கப்படவில்லை. டி.எம்.எஸ். பாடிய ‘யார் அந்த நிலவு’ (சாந்தி-1965), பி. சுசீலா பாடிய ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’(புதிய பறவை) என்று மேற்கத்திய இசையின் அடிப்படையிலான பாடல்கள், ‘ஆறோடும் மண்ணில் எங்கும்’(பழனி-1965) என்று கிராமியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல்கள், ‘கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே’ (கர்ணன்), ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ (தவப்புதல்வன்) போன்ற சாஸ்திரிய இசை அடிப்படையிலான பாடல்கள் என்று அத்தனை வகைப் பாடல்களையும் தந்தவர் எம்.எஸ்.வி. காதல், சோகம், நகைச்சுவை, கிண்டல், சவால் என்று எத்தனையோ வகையான சூழல்களுக்கும் இசையமைக்கும் அளவுக்கு இசை வளமும், படைப்பாற்றலும், வேகமும் அவருக்குள் சுரந்துகொண்டே இருந்தன.

அவரது சமகாலத்தில் ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், வி. குமார் என்று புகழ்பெற்ற இசையமைப் பாளர்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் பெருவாரியான படங்கள் எம்.எஸ்.வி-யிடமே குவிந்தன. ‘மன்னாதி மன்னன்’, ‘பாசமலர்’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ராமு’, ‘தெய்வ மகன்’ என்று அந்தக் காலகட்டத்தில் அவர் இசையமைத்த வெற்றிப்படங் களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. தனது வாழ்நாளில் 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் அவர். சிவாஜி படங்களுக்கு உணர்ச்சிகரமான இசை, எம்.ஜி.ஆர். படங்களுக்கு உற்சாகமான சவால் இசை, பீம்சிங், தர், பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் படங்களுக்குப் பரீட்சார்த்த மான இசை என்று அவர் தொடாத இசை வகைமையே இல்லை. பாலியல் பலாத்காரக் காட்சிக்குக் கூடத் தன்னிடம் பாடல் கேட்ட கே. பாலசந்தரின் சவாலையும் ஏற்றுப் பாடல் தந்தவர் அவர்.

தாக்கம் தந்த இசை

எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் திருமணம் முதலான சுபகாரியங்கள் நடக்கும் இடங்கள், திருவிழாக்கள் முதல் துக்க வீடுகள் வரை என்று பல்வேறு இடங்களிலும் ஒலிக்கும் பாடல்கள் எம்.எஸ்.வி-யினுடையவைதான். அந்த அளவுக்கு அவரது பாடல்களின் தாக்கம், தலைமுறைகளையும் தாண்டி இன்றும் வியாபித்திருக்கிறது. அதேபோல், இசையமைப்பின்போது தனக்கு யோசனை சொல்பவர் யாராக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அபூர்வ குணம் அவரிடம் இருந்தது. திரையிசையில் ஜனரஞ்சக ரசனையைப் புரிந்துகொள்ளவும் அதை வளர்த்தெடுக்கவும் அது அவருக்கு உதவியது. அவரது இசையால் தாக்கம் பெற்ற கலைஞர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவரது ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடல் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இளையராஜா பல முறை குறிப்பிட்டிருக்கிறார். ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ என்ற பாடலின் தாக்கத்திலேயே ‘புது மாப்பிள்ளைக்கு’ பாடலை உருவாக்கியதாகவும் இளையராஜா குறிப்பிட்டிருக்கிறார். பாடகர் வாய்ப்புக்கான குரல் தேர்வின்போது எஸ்.பி.பி. பாடிக்காட்டியது எம்.எஸ்.வி-யின் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலைத்தான். எம்.எஸ்.வி-யின் ‘யார் அந்த நிலவு’ பாடல், இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் ‘யாத் ஆ ரஹி ஹை’ பாடலின் மூலம். இன்றும் பாடகர் களுக்கான போட்டிகளில் அதிகம் பாடப் படுபவை அவருடைய பாடல்கள்தான்.

1970-களின் மத்தியில் காலமாற்றத்தின் தாக்கத்தில் அவரது இசையும் வேறு பரிமாணம் எடுத்தது. 1960-களில் டி.எம்.எஸ்., பி. சுசீலா போன்ற கலைஞர் களின் கூட்டணியுடன் பாடல்களைத் தந்துவந்த எம்.எஸ்.வி., 70-களில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து அளித்த பாடல்கள் தனிரகம். ‘அவர்கள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘பட்டினப் பிரவேசம்’ போன்ற படங்களில் இந்த ஜோடியின் பாடல்கள் ரசிகர்களின் சேமிப்புகளில் உயர்ந்த இடத்தை வகிப்பவை. ‘முத்தான முத்தல்லவோ’(1976) படத்தில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து எம்.எஸ்.வி. பாடும் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ பாடல் இசை மீதான அவரது காதலைச் சொல்லிவிடும். ‘தேன் சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள்’ எனும் வரியில் எம்.எஸ்.வி. குறிப்பிடும் ‘அவள்’ யாருமல்ல, இசை தேவதை தான்!

தனது ஆன்மாவை இசையின் மூலமாகக் காற்றில் கலக்கவிட்டிருக்கும் எம்.எஸ்.வி-க்கு மரணம் என்பது உடல்ரீதியான ஒன்றுதான். அவரது இசைக்கு வயதும் இல்லை, மரணமும் இல்லை!

வெ.சந்திரமோகன்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...