Sunday, July 19, 2015

போனில் '0' அழுத்தினால் காஸ் மானியம் 'கட்'

காஸ் சிலிண்டர் பெற, தானியங்கி புக்கிங் சேவையை பயன்படுத்தும்போது, '0' அழுத்தினால், காஸ் மானியம் ரத்தாகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மொபைல் போன் அல்லது தரை வழி போன் மூலம், காஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் முறை, பெரும்பாலான நகர பகுதிகளில் அமலில் உள்ளது. காஸ் சிலிண்டர் வேண்டுவோர், காஸ் நிறுவனம் அளித்துள்ள, தானியங்கி காஸ் சிலிண்டர் புக்கிங் சேவை எண்ணை தொடர்பு கொண்டால், காஸ் சிலிண்டர் கோரிக்கையை பதிவு செய்ய, எண், '1'ஐ அழுத்த வேண்டும்.

இதைத் தொடர்ந்து, காஸ் இணைப்பு எண் மற்றும் காஸ் சிலிண்டர் பதிவு எண் சொல்லப்படும். விரைவில் காஸ் சிலிண்டர் வினியோகிக்கப்படும்.தற்போது, தானியங்கி சேவை மூலம், காஸ் சிலிண்டர் கோரிக்கையை பதிவு செய்யும் போது, 'காஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க, '0' அழுத்த வேண்டும்; காஸ் சிலிண்டர் கோரிக்கையை பதிவு செய்ய எண், '1' அழுத்த வேண்டும்' என, கூறப்படுகிறது.

தவறுதலாக, '0' அழுத்திவிட்டால், காஸ் மானியம் ரத்தாகிவிடும். வீட்டில் உள்ள முதியவர்கள் அல்லது போன் பயன்பாட்டை முழுமையாக அறியாதவர்கள், தவறுதலாக, '0' அழுத்தி விட்டால் மானியம்ரத்தாகிவிடும் அபாயம் இருக்கிறது.

பூஜ்ஜியத்தை அழுத்தியபின், தவறுதலாக அழுத்தி விட்டோம் என, திருத்திக் கொள்ள வாய்ப்பு இல்லை. இந்தத் தவறை சுட்டிக்காட்டி, மானியத்தை பெற வேண்டுமானால், காஸ் முகமை மற்றும் எண்ணெய் நிறுவனத்தை அணுக வேண்டும்.

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்க தலைவர் சடகோபன் கூறியதாவது:

'மானியம் வேண்டாம்' என்ற கோரிக்கையை எழுத்து மூலமாகத் தான் பெற வேண்டும். போன் எண் மூலம் பெறுவது, வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல். மொபைல் போன்களில், மிகச் சிறிய எண் அட்டவணை இருக்கும். அதில், தவறுதாலாக, '0' அழுத்த வாய்ப்பு உள்ளது.

எனவே, இதுபோன்ற முறையை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றுவது, மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்யவும், வாடிக்கையாளர்களை ஏமாற்றி ஒப்புதல் பெறுவதற்கு சமமாகும்.

காஸ் சிலிண்டர் கோரிக்கையை பதிவு செய்யும்போது, மானியம் ரத்து குறித்த விவரத்தை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையேல், பெரும்பாலான வாடிக்கையாளர், மானியத்தை இழக்க வேண்டி இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

காஸ் முகமைக்கு வந்து எழுதிக் கொடுத்து,மானியத்தை ரத்து செய்ய, வாடிக்கையாளர் நேரத்தை செலவிட வேண்டும். அதைத் தவிர்க்கவே, இந்தஏற்பாடு. இதில், சிரமங்கள் இருந்தால், அதுபற்றி ஆலோசிக்கப்படும். எண்ணெய் நிறுவன அதிகாரி
- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024