Friday, July 24, 2015

அரசியல் - சாக்கடையா? By கோமல் அன்பரசன்..தினமனி

அரசியலா... அது ஒரு சாக்கடையில்ல... - நம்மிடம் மிகச் சரளமாக புழக்கத்தில் இருக்கும் சொல்லாடல் இது. அதிலும் நடுத்தர வர்க்கத்தவரிடம் இந்த எண்ணம் ஆழ வேரூன்றி கிடக்கிறது. ஆனால், அரசியல் இல்லாமல் இங்கே என்ன நடக்கிறது அல்லது நடந்துவிட முடியும்?
காலையில் தூங்கி எழுந்திருப்பதில் இருந்து இரவு மீண்டும் தூங்கப்போகும் வரை எதிர்கொள்கிற எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வகையில் அரசியல் இருக்கிறது. பொழுதுபோக்குக்காக பார்க்கிற திரைப்படம், தொலைக்காட்சி, படிக்கிற இதழ்கள் எல்லாவற்றின் பின்னணியிலும் அரசியல்தான்.
இப்படி நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொன்றிலும் அரசியல் ஒளிந்து கிடக்கிறது. சில இடங்களில்
பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. மொத்தத்தில் நம் உணவை, உடையை, செயல்பாடுகளை முடிவு செய்வது அரசியலே. நிறுத்தி, நிதானமாக யோசித்தால் இதிலுள்ள உண்மை உங்களுக்குப் புரியும்.
÷நம்முடைய வாழ்வை, நாம் விட்டுச் செல்லவிருக்கும் அடுத்த தலைமுறையின் வாழ்வியலை, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற அரசியலை, அது ஒரு சாக்கடை என வெகு எளிதாகக் கடந்து செல்கிறோம். இது எப்படிச் சரியாக இருக்க முடியும்? அட, அதற்காக என்ன செய்ய? எல்லாரும் வேலையை விட்டுவிட்டு, கட்சிகளில் ஐக்கியமாகி, கரை வேட்டி கட்டிக்கொண்டு கிளம்பிடவா முடியும், கொடி ஏற்றி முழங்கிடவா முடியும் என்று நீங்கள் கேட்பது காதுகளில் விழுகிறது. அங்கேதான் பிரச்னை.
÷அரசியலைப் பற்றிய நம் சிந்தனை அப்படித்தான் இருக்கிறது. ஒன்று ஒதுங்கிப் போக வேண்டும். இல்லையென்றால் அதில் மூழ்கி முத்து எடுக்க வேண்டும். நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அரசியலைப் பற்றி பேசவே பயப்படும் மனநிலைக்கு நாம் வந்த இடம்தான், அரசியல் அவலமானதன் ஆரம்பம். நமக்கேன் அரசியல் என்று நாம் ஒதுங்கியதே நிலைமை இத்தனை மோசமானதன் தொடக்கம்.
÷அதைப் பற்றி பேசவும் அதில் இயங்கவும் யாரோ சிலர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. முதலில் ஒதுங்கியதால், அரசியல்வாதிகள் சகல அதிகாரம் கொண்ட தனி சமூகமானார்கள்.
பிறகு அவர்களைப் பார்ப்பதற்கே தயங்குவதற்கும், எண்ணி பயப்படும் அளவுக்கும் சூழல் மாறியது. கடைசியாக அரசியல்வாதி நம்மில் ஒருவர், நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர் என்று சிந்திப்பதற்கே அஞ்சி, அவர்களைத் தாழ்ந்து, பணிந்து தொழும் நிலைக்கு வந்து நிற்கிறோம்.
÷மேலை நாடுகள் பலவற்றில் வேலை அல்லது தொழில் செய்து கொண்டே அரசியலிலும் இருக்கிறார்கள். அங்கே யாருக்கும் இது முழு நேர தொழில் இல்லை. அதனால், பணத்தைக் குவிப்பதற்கான வழிமுறையாகவும் அரசியலைப் பார்ப்பதில்லை.
உலகத்தின் உச்சாணிக்கொம்பில் இருக்கிற அமெரிக்காவில் இரண்டாவது முறை அதிபரான ஒபாமா, அடுத்த ஆண்டு பதவிக் காலம் முடிந்ததும் பார்ப்பதற்கான வேலையை இப்போதே தேடிக் கொண்டிருக்கிறார்.
சரியான பணி அமையாவிட்டால், அதிபராவதற்கு முன்பு பார்த்த தன்னார்வத் தொண்டு நிறுவன ஆலோசகர் பணியை மீண்டும் தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாக ஒபாமா கூறியிருக்கிறார். இது அங்கே புதிதல்ல. ஏனெனில், அமெரிக்க சட்டப்படி இரு முறைக்கு மேல் ஒரே நபர் அதிபராக முடியாது.
÷ஏற்கெனவே அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர், தம்முடைய பூர்வீக வேர்க்கடலை விவசாயத்துக்குத் திரும்பி, அதில் கிடைக்கும் வருவாய் மூலம் மக்களுக்கும் சேவை செய்கிறார். சில நிறுவனங்களுக்கு ஆலோசகராக வேலை பார்க்கும் கிளிண்டன் அறக்கட்டளையும் நடத்துகிறார். நம் தலைவர்களைப் பற்றி நம்மால் இப்படி கற்பனை செய்து பார்க்க முடியுமா? தலைவர்களை விடுங்கள். முன்னாள் கவுன்சிலர்கள் குறித்தாவது நினைக்க இயலுமா?
எனவே, வளம் கொழிக்கும் தொழில் என்ற நிலையிலிருந்து நம்ம ஊர் அரசியலை மீட்டெடுக்க வேண்டிய அவசிய, அவசரம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
÷ஒன்றிரண்டு ஆண்டுகளில் பதவி, அதன் பிறகு கார், பங்களா, சொத்து,
சுகம், ஊரே மிரளும் அதிகாரம் - இவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இளைஞர்களும் இன்ன பிறரும் அரசியலுக்கு வருகிறார்கள்.
இதனால், அரசியலுக்கு வருவதற்குத் தேவையான தகுதிகளும் அடியோடு மாறிவிட்டன. சித்தாந்த அரசியல் செத்து போய், தனி நபர் துதி பாடலும், தறுதலைச் செயல்களும் தூக்கலானதே அரசியலைப் பற்றிய அருவெறுப்புக்கு முக்கிய காரணிகளாகிவிட்டன. தவறானவர்களின் புகலிடம் என்பதோடன்றி, சரியானவர்கள் நுழைந்தாலும் கெட்டுப் போகாமல் அரசியலில் குப்பை கொட்ட முடியாது என்ற எண்ணமும் அழுத்தத்திருத்தமாகப் பதிந்திருக்கிறது.
÷காமராஜர், கக்கன், சத்தியமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பலரும் இளைஞர்களாக அரசியலுக்கு வந்தவர்கள்தான். அவர்களின் சிந்தனை நாட்டின் மீதும், மக்களின் மீதும் அக்கறை கொண்டதாக இருந்தது.
÷காமராஜர் ஆட்சியிலும் குற்றச்சாட்டுகள் இருந்தன. அதையெல்லாம் தாண்டி குறைந்தபட்ச தவறு, அதிகபட்ச அக்கறை, தார்மிக உணர்வு இருந்தது. மக்கள் தவறாக நினைப்பார்களே என்ற பயம் இருந்தது. அரசியலில் பணம் குவித்து, பகட்டாக இருப்பவர்களை அன்றைக்கு மக்கள் வெறுத்தார்கள். பெரும்பாலானோர் மனசாட்சிக்குப் பயந்து நடந்தார்கள்.
அடுத்தவனைக் கெடுத்தால், அநியாயம் செய்தால், அன்றே இல்லாவிட்டாலும் அடுத்த நாள் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என்று அதிகம் பேர் அஞ்சினார்கள். தலைவர்கள், தங்களைவிட மேலானவர்களாக, உதாரண புருஷர்களாக, நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினார்கள். அதனால், தலைவர்களும் மக்களைக் கண்டு பயந்தார்கள்.
அன்றைய கனவு ஊர்தியான அம்பாசிடர் கார் வாங்குவதற்கும் சொந்த வீடு கட்டுவதற்கும் பயந்த அரசியல்வாதிகள் ஊருக்கு ஊர் இருந்தார்கள். ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் கடைசிவரை இரு சக்கர வாகனத்தில்தான் தொகுதியைச் சுற்றி வந்தார்கள்.
÷சிறு வயதில் பார்த்த காட்சிகள் இன்னும் அப்படியே மனக்கண்ணில் நிற்கின்றன. மதுக் கடைக்குச் செல்பவர்கள் பயந்து, அக்கம்பக்கம் பார்த்து, யாராவது தம்மைப் பார்த்து விடுவார்களோ என்று அஞ்சி செல்வார்கள்.
இன்னும் ஒருபடி மேலாக, தலையில்
முக்காடு போட்டு முகத்தை மூடிக்கொண்டு சாராயக் கடைக்குப் போனவர்களை எங்கள் கிராமத்தில் பார்த்திருக்கிறேன். உறவையோ, நட்பையோ மதுக் கடையில் பார்ப்பதைக் கேவலமாக
பார்த்த சமூகம், குடும்பம், மனிதர்கள் அன்றைக்கு இருந்தார்கள். இப்போது நிலைமை என்ன என்பதை மனதில் ஓட்டி பாருங்கள். மதுவும் மனிதனும் என்பது ஒரு குறியீடுதான். ஏறத்தாழ எல்லா மதிப்பீடுகளும் இதே கதிக்குதான் ஆளாகியிருக்கின்றன. ÷தவறுகள் எல்லாமே தவறுகள் இல்லை என்ற புதிய வாழ்வியல் சூத்திரத்தை நமக்கு வசதியாக உருவாக்கி வைத்திருக்கிறோம். நம்முடைய தலைவர்களும் அப்படியே இருக்கிறார்கள். மக்கள் எப்படியோ? அப்படித்தான் தலைவர்கள் உருவாகி வருவார்கள் என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள். தேர்தல் நடக்கிறது.
ஏதோவொரு அளவீட்டில், மதிப்பீட்டில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம். அவரால் நன்மைகள் நடக்க வேண்டும் என்று நினைப்பதுதானே இயற்கையான எண்ணம். அத்தகைய எதிர்பார்ப்புதானே சரியாகவும் இருக்க முடியும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இடைத்தேர்தலுக்காக நம் மனசு ஏங்குகிறதே!
÷அதனால்தான், தேன் எடுக்கிறவன் கொஞ்சமாக நக்கத்தான் செய்வான் என்று நம் தலைவர்கள் நியாயம் கற்பிக்கிறார்கள். மக்களுக்கு கொடுத்ததை நாங்கள் திரும்ப எடுக்க வேண்டாமா என்கிறார்கள். அடுத்த முறை கொடுப்பதற்காகவே எடுத்து வைக்கிறோம் என்றும் சொல்கிறார்கள். நாமும் அதனைச் சரியென்று வழிமொழிபவர்களாக இருக்கிறோம்.
மொத்த குறையும் மக்கள் மீதுதானா? நம்மைக் கெடுத்ததில் தலைவர்களுக்குப் பங்கில்லையா என்றால், இருக்கலாம். ஆனால், அவர்கள் துணிந்து கெடுப்பதற்கும், தொடர்ந்து கெடுப்பதற்கும் இடம் கொடுத்தது நம் தவறுதானே?
எல்லாம் சரி - இதற்கு என்னதான் தீர்வு? யாராவது வானத்திலிருந்து குதித்து வருவார்கள். அவர்கள் ஏதாவது ஆச்சரியங்களை நிகழ்த்துவார்கள். அதை வாய் பிளந்து பார்த்து, கை தட்டி மகிழ்வோம் என்ற எண்ணத்திலிருந்து முதலில் நாம் ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும். அணு,அணுவாக நம்மை இயக்குவது அரசியலே என்பதிலும் அதனைத் தீர்மானிப்பதும் வழிநடத்துவதும் நாமே என்பதிலும் நமக்குத் தெளிவு பிறக்க வேண்டும்.
ஆரோக்கியமான அரசியலைப் பற்றி சிந்திக்காத, ஆர்வம் காட்டாத மக்களோ, தேசமோ உருப்பட்டதில்லை என்று வரலாறு நமக்குச் சொல்லித் தரும் பாடத்தை மனதில் இருத்த வேண்டும்.
÷நல்ல சிந்தனை, நல்ல எண்ணங்களுக்கு வலிமை உண்டு. யாரோ ஒரு தனி மனிதனின் நல்ல எண்ணமே செயல் வடிவம் பெறுகிறபோது, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம் பேர் என ஒரு சமூகமே நல்லனவற்றைச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் அதற்கு எவ்வளவு ஆற்றல் இருக்கும்.
நல்ல அரசியல் அல்லது அரசியலில் நல்லவர்கள் என்ற அந்த எண்ணம் செயலாக, நடைமுறையாக மாறிவிடுமல்லவா? ஊருக்கு சாக்கடை அவசியம். அதற்காக ஒட்டுமொத்த ஊரும் சாக்கடையாவதற்கு விடப்போகிறோமா என்பது நம் சிந்தனையில், செயலில்தான் இருக்கிறது.

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்
இதற்கு என்னதான் தீர்வு? யாராவது வானத்திலிருந்து குதித்து வருவார்கள். அவர்கள் ஏதாவது ஆச்சரியங்களை நிகழ்த்துவார்கள். அதை வாய் பிளந்து பார்த்து, கை தட்டி மகிழ்வோம் என்ற எண்ணத்திலிருந்து முதலில் நாம் ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும்.


No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024