Friday, July 17, 2015

15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் சென்னை மாநகரம்: மக்களின் தேவையை எப்படி சமாளிக்கப் போகிறது குடிநீர் வாரியம்?



கடந்த 15 ஆண்டுகளில் இல் லாத கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை நோக்கி சென்னை நகரம் சென்றுகொண்டிருக்கிறது. ராயப்பேட்டை, குரோம்பேட்டை, காசிமேடு என பல பகுதிகளில் மக்கள் குடங்களுடன் தண்ணீர் லாரிக்காக தெருக்களில் காத்துக் கிடக்கிறார்கள்.

2003-04ல் கடும் வறட்சி

சென்னை மாநகரம் கடந்த 2003, 2004-ம் ஆண்டுகளில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்தது. சென்னையின் நீர்த்தேக்கங்கள் கிட்டத்தட்ட வறண்டுவிட்டன. சென் னையை சுற்றியுள்ள பூந்தமல்லி, திருப்போரூர், பஞ்செட்டி ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அதுவும் போதாததால், சுமார் 150 கி.மீ. தொலைவில் இருந்து தினமும் 100 மில்லியன் லிட்டர் நீர் வரை பெறப்பட்டது. மீண்டும் அதேபோன்ற நிலைமையை நோக்கி சென்னை மாநகரம் சென்றுகொண்டிருக்கிறது. 2003-ல் இருந்ததுபோல, ஆரணியாறு, கொசஸ்தலையாறு ஆற்றுப் படுகையில் விவசாய கிsணறுகள் தற்போது பெருமளவில் வாட கைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

குடிநீர் வாரியம் வழங்கும் நீர்

சுமார் 70 லட்சம் மக்கள்தொகை கொண்ட சென்னை மாநகரின் குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 900 முதல் 1000 மில்லியன் லிட்டர். ஆனால், சென்னை குடிநீர் வாரியம் இதுவரை அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 580 மில்லியன் லிட்டர், அதாவது தேவையில் சுமார் பாதி அளவு மட்டுமே வழங்கி வந்துள்ளது.

நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளில் இருந்து தலா 100 மில்லியன் லிட்டர், வீராணம் திட்டத்தில் இருந்து 180 மில்லியன் லிட்டர், திருவள்ளூர் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள சுமார் 200 விவசாய கிணறுகளில் இருந்து 70 மில்லியன் லிட்டர் பெறப்படுகிறது. மற்ற நீர், சென்னையின் நீர்த்தேக்கங்களில் இருந்து பெறப்படுகிறது.

ஏரிகளில் 9% நீர் இருப்பு

சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்குபவை பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள். ஜூலை 16-ம் தேதி நிலவரப்படி இவற்றில் மொத்தம் 1.02 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. இது அவற்றின் மொத்த கொள்ளளவான 11.05 டிஎம்சியில் வெறும் 9.25 சதவீத நீர் இருப்பாகும்.

பற்றாக்குறை மழை

ஓராண்டில் சராசரியாக 140 செ.மீ. மழை பெய்யும் சென்னையில் இந்த ஆண்டு இதுவரை 8 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது. கடந்த ஒன் றரை மாதங்களில் சராசரி மழையை விட 54 சதவீதம் குறைவாக பெய் துள்ளது. இதனால் நகரில் நிலத்தடி நீரும் விரைவாக குறைந்து வரு கிறது. மழை பெய்தால் மட்டுமே சென்னையின் குடிநீர் தட்டுப் பாட்டை சமாளிக்க முடியும் என்று, வருண பகவானுக்கு யாகங்களும் பூஜைகளும் செய்கின்றனர் குடிநீர் வாரிய அதிகாரிகள்.

இப்பிரச்சினையை குடிநீர் வாரியம் எப்படி சமாளிக்கப் போகிறது என்று கேட்டதற்கு, சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் (இயக் கம் மற்றும் பராமரிப்பு) லட்சுமணன் கூறியதாவது:

ஏரிகளில் உள்ள நீர் இருப்பை தவிர பிற நீர் ஆதாரங்கள் உள்ளன. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், வீராணம் திட்டம், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கூடுத லாக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றைக் கொண்டு குழாய்கள் மூலம் குடிநீர் தொடர்ந்து வழங்கப்படும்.

சென்னையின் குடிநீர் தேவைக் காக போர்க் கால திட்டம் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள விவசாய கிணறுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. குழாய்கள் மூலம் ஏரிகளில் இருந்து நீர் எடுக்கமுடியாத பட்சத்தில் அவற்றில் இருந்து பம்ப் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படும் இடங்களில் புதிதாக அடி பம்ப்கள் அமைக்க உள்ளோம். நகரில் ஏற்கெனவே உள்ள நீர் தொட்டிகள் சீரமைக்கப்படும். தேவைப்படும் இடங்களில் புதிய தொட்டிகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024