Friday, July 24, 2015

ஹீரோயிசம் காட்டாத எம்.ஜி.ஆர்!



கலங்கரை விளக்கம் 50 ஆண்டுகள் நிறைவு

‘கலங்கரை விளக்கம்’ என்ற இந்த கறுப்பு வெள்ளை திரைப்படம் 1965-ல் வெளிவந்து அமோக வெற்றி பெற்றிருக்கிறது. சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு. இயக்கம் கே. சங்கர். கதை மா. லட்சுமணன். இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்.

கல்லூரியில் வரலாறு படிக்கும் நீலா (சரோஜா தேவி) சிறு விபத்தில் சித்தம் கலங்குகிறாள். தன்னை ஆடலரசி சிவகாமியாகக் கற்பனை செய்துகொண்டு நரசிம்ம பல்லவ சக்ரவர்த்தியைத் தேடி அடிக்கடி கலங்கரை விளக்கு இருக்குமிடத்துக்கு நள்ளிரவில் செல்கிறார். பெரிய பணக்காரரான அவளுடைய தந்தை, டாக்டர் கோபால் (வி. கோபாலகிருஷ்ணன்) மூலம் சிகிச்சை அளிக்கிறார்.

கோபாலுக்கு உதவியாக அவருடைய சென்னை வழக்கறிஞர் நண்பர் ரவி (எம்.ஜி.ஆர்.) மகாபலிபுரத்துக்குக் காரில் வருகிறார். (நம்பியாரின் உச்சரிப்பில் றெவி) நள்ளிரவில் கலங்கரை விளக்கை நோக்கி ஓடும் நீலாவை, தான்தான் நரசிம்ம பல்லவன் என்று சொல்லி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

நீலா இறந்த பிறகு அண்ணனின் சொத்து முழுவதையும் கைப்பற்ற தம்பி நாகராஜன் (நம்பியார்) திட்டமிடுகிறார். அவருக்கு ஒரு காதலி, அந்தக் காதலிக்கு ஒரு தங்கை மல்லிகா (இன்னொரு சரோஜா தேவி). இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடமா என்றால் ‘ஆம்’, ‘இல்லை’ என்று சொல்ல முடியவில்லை, கதாசிரியரும் இயக்குநரும் ரொம்பவும் சாமர்த்தியசாலிகள்!

உருவ ஒற்றுமை உள்ள மல்லிகாவை நீலாவாக நடிக்க வைத்து, நீலாவைக் கொன்றுவிட்டு சொத்தை அடையச் செயல்படுகிறார் நம்பியார். இரட்டை வேடப் படங்களில் ஒரு கதாபாத்திரத்தை இரக்கமில்லாமல் கொல்லக் கதாசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் கோணமே இதுதான்!

மல்லிகா சாதாரணத் தங்கை அல்ல. சென்னை, பெங்களூர் என்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கலைக்காகச் சேவை செய்கிறார். நீலா கொல்லப்பட்ட பிறகு மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ளும் எம்.ஜி.ஆர். அவர் மூலம் உண்மையை வரவழைத்து நம்பியாரைச் சிறைக்கு அனுப்புகிறார். தவறுக்கு உடந்தையாக இருந்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற மனைவியை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.

கதை முடிச்சு சுவாரஸ்யமாக இருந்தாலும் படத்தின் பிற்பகுதி சவ்வாக இழுக்கிறது. உருவ ஒற்றுமையையும் மனப் பிறழ்வையும் வைத்துக்கொண்டு இன்னும் விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘இத்திரைக்கதையில் வலு இல்லை’, ‘வசனங்கள் சுமார்’ என்றெல்லாம் எழுதுவது தர்மமில்லை.

ஒரு பெரிய திருப்பம் வரும் என்று கடைசிவரை எதிர்பார்த்தால், ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் முடிவு மாதிரி தொடக்கத்திலிருந்தே கணித்துவிடும்படியாக இருக்கிறது.

1965-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படங்களில் எங்க வீட்டுப் பிள்ளையும், ஆயிரத்தில் ஒருவனும் பிளாக் பஸ்டர்கள் ஆயின. என்றாலும் அதே ஆண்டில் பணம் படைத்தவன், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களோடு இந்தக் கலங்கரை விளக்கம் படத்திலும் நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆர். படம் என்றாலும் அவரது ஹீரோயிஸத்துக்கு அதிக இடம் தராத படம். என்றாலும் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. தனக்கேற்ற வேடம் என்று பார்க்காமல் பாத்திரத்தை உள்வாங்கி அதற்கேற்ற நடிப்பை எம்.ஜி.ஆர். தந்திருக்கிறார். அவருடைய முத்திரை களும் ஆங்காங்கே படத்தில் உண்டு.

நகைச்சுவைக்கு நாகேஷ், வீரப்பன், மனோரமா. மகாபலிபுர டூரிஸ்ட் கைடுகளாக வரும் நாகேஷும், வீரப்பனும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். எம்.ஜி.ஆருடன் இந்தத் திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு அடுத்தபடியாக அதிக ‘நெருக்கமாக’ நடித்திருப்பது கோபாலகிருஷ்ணன்தான்!

பாடல்களும் இசையும் ஜீவனுள்ளவை. இப்போது கேட்டாலும் இனிமையாகத்தான் இருக்கின்றன.

‘நான் காற்று வாங்கப்போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..’ பாடல் எளிய கவித்துவம் மிக்க வரிகளாக பாமர ரசிகனை பண்டித ரசிகனையும் ஒருசேர ஈர்த்தது. இந்தப் பாடலை எழுதியவர் அன்று நிஜமாகவே வாலிபராக இருந்த வாலி. பாரதி தாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலை சீர்காழி கோவிந்த ராஜனின் மணிக்குரலில் இன்று கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது.

உணர்ச்சி மிக்க அந்தப் பாடலுக்கு நன்கு இசையமைத்திருந்தாலும், கதாநாயகனே அடிக்கடி ‘நீலா’, ‘நீலா’ என்று அரற்றுவதால் ரசிகர்களும் நிச்சயம் சரோஜா தேவியின் ரியாக்‌ஷன் என்னவென்று அந்தக் காலத்தில் கவனித்துக்கொண்டிருந்திருப்பார்கள். ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ ஆகிய பாடல்கள் மெட்டுக்காகவும் பாடல் வரிகளுக்காகவும் மறக்க முடியாதவை. பின்னாளில் தமிழ் சினிமாவில் சாதனைகள் படைத்த வி.சி. குகநாதன் இந்தப் படத்தின் உதவி வசன கர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனகர்த்தா ஜி.பாலசுப்பிரமணியம்.

50 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது குறைகள் தெரிந்தாலும் படத்தின் ஆதாரமான தொனியில் இருக்கும் நேர்மையும் எளிமையும் இன்றும் கவர்கின்றன. சாகாவரம் பெற்ற பாடல்கள் படத்தின் சிறப்பு முத்திரை.

பின் குறிப்பு: சங்கே முழங்கு பாடலை வானொலியில் கேட்கும்போதெல்லாம் ஒரு வருத்தம் உண்டு எனக்கு. ‘தமிழ் எங்கள் மூச்சாம்’ என்ற கடைசி வரிதான் நம்மை உணர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்வது. இசைத் தட்டில் இசைக் கோர்ப்புக்கேற்ப, ‘தமிழ் எங்கள் மூச்சா……..ம்’ என்று நீட்டித்திருப்பார்கள். ஆகாஷ்வாணியில் அந்த நாளில் இந்தப் பாடலை நான் கேட்கும்போதெல்லாம் ‘மூச்சா….’ என்றே முடித்துவிடுவார்கள். ஒலிபரப்பியவர்களுக்கு என்ன ஆச்சோ...!?

படங்கள் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024