Friday, July 17, 2015

எம்.எஸ்.விக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது?

எம்.ஜி.ஆருடன் எம்.எஸ்.வி.

மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிடும் வெகு சிலரில் விஜயகாந்தும் ஒருவர். அதனாலேயே கிண்டலுக்கும் உள்ளாகுபவர் அவர். எம்.எஸ்.வி.யின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த விஜயகாந்த் ‘எனக்கு இரங்கல் தெரிவிக்க மனம் வரவில்லை’ என்றார். பெரும்பாலானோரின் உணர்வும் அதுதான். நம்முடன் எப்போதும் இருப்பவர் இவர் என்ற உணர்வு ஒரு சிலரிடம் மட்டும்தான் ஏற்படும்; அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.எஸ்.வி. அவருடைய இறப்பைப் பற்றிச் சொல்லப்போனால் நம் கிராமத்து வழக்கில்தான் சொல்ல வேண்டும்:


‘கல்யாணச் சாவு’. இப்படிப்பட்ட மரணங்களின்போது ஒரு பெருவாழ்வு நினைவுகூரப்பட்டு ‘ஆகா, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்’ என்ற பெருமகிழ்ச்சிதான் நம்மிடம் வெளிப்படும். எம்.எஸ்.வி காலமானதைக் கேள்விப்பட்டுப் பலரும் துயரத்தில் ஆழ்ந்துபோய் அவருடைய பாடல்களைக் கேட்க ஆரம்பித்துக் கடைசியில் சந்தோஷ உணர்வை, பரவச உணர்வை அடைந்ததுதான் உண்மை.

யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரிகிறது. நாம் கண்ணதாசனைக் கொண்டாடியிருக்கிறோம், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றோரைக் கொண்டாடியிருக்கிறோம். ஆனால், எம்.எஸ்.வி.யை அந்த அளவுக்குக் கொண்டாடவில்லை.

எம்.எஸ்.வி. இசையமைத்த எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களைக்கூட எம்.எஸ்.வி-யின் பாடல்களாகக் கருதாமல் எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களாகக் கருதிதான் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தனது கலையின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டவர் எம்.எஸ்.வி., அதனால்தான் நாம் எம்.எஸ்.வியின் பாடல்களில் கண்ணதாசன், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரைக் காண்கிறோமேயொழிய எம்.எஸ்.வியைக் காண்பதில்லை.

ஆக, கண்ணதாசனின் அற்புதமான வரிகள், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் ஈடிணையற்ற குரல்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோரின் உத்வேகம், சோகம் போன்ற எல்லாவற்றுக்கும் பின்னால் நின்று களம் அமைத்துக்கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தியதுதான் எம்.எஸ்.வியின் இசை. ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்று எம்.ஜி.ஆர். நீதியின் சாட்டையை வீசும்போது நாம் எம்.எஸ்.வி.யையா நினைத்துப்பார்க்கிறோம்? எம்.ஜி.ஆரைத்தானே நினைத்துப் புல்லரிக்கிறோம். ‘நான் ஆணையிட்டால்’ என்ற டி.எம்.எஸ்ஸின் குரலைப் பின்தொடரும் ஏற்றமிகு கொம்பு சத்தம்தான் தமிழ் வாழ்வில் எம்.ஜி.ஆரின் இடம் எது என்பதற்கு அழுத்தம் திருத்தமாகக் கட்டியம் கூறியது.

இரட்டை இசையமைப்பாளர்கள்

எம்.எஸ்.வி-யைப் பற்றிப் பேசும்போது அங்கே கண்ணதாசன் இருப்பார். கண்ணதாசனைப் பற்றிப் பேசும்போது எம்.எஸ்.வி. இருப்பார். ‘இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்’ என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். அதிலும் ‘மன்றம்’ என்ற சொல்லின் பயன்பாடு அற்புதமாக இருக்கும். சாதாரணமாகச் சொல்லும்போது கவித்துவமற்ற, பண்டிதத்தன்மை கொண்ட ஒரு சொல் அது.

ஆனால், எம்.எஸ்.வியின் மெட்டுக்குள் நுழையும்போது அது எளிமையான, அழகான சொல்லாக மாறிவிடுகிறது. இவ்வளவு எளிமையான சொற்கள், அதிக கனமில்லாத சொற்கள், அழகான சொற்கள் எப்படி இவ்வளவு இயல்பாகப் பொருந்தி, ஓடிவருகின்றன என்ற வியப்பு ஏற்படும். யோசித்துப்பார்த்தால் ஒரு உண்மை தெரியும்.

அந்த மெட்டின் இயல்பே அதுதான். வேறு எப்படியும் எழுதிவிட முடியாது. இது கண்ணதாசனைக் குறைத்துச் சொல்வதில்லை. கண்ணதாசனிடம் அற்புதமான வரிகளை வாங்கும் வித்தை எம்.எஸ்.வி.யின் மெட்டுக்குத் தெரிந்திருக்கிறது; எம்.எஸ்.வியின் அற்புதமான மெட்டுக்குள் எப்படிப் பாய்வதென்று கண்ணதாசனின் வரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட பரஸ்பர உறவு அது.

திரைப்பட இசையைப் பொறுத்தவரை பிரதானமானவர்களாக இசையமைப்பாளர்களையும், அவர்களைச் சார்ந்திருக்கும் இரண்டாம் நிலையினராகப் பாடலாசிரியர்களையும் கருதுவதுதான் வழக்கம். ஆனால், இங்கு ஒரு இசையமைப்பாளர் காலம் முழுவதும் ஒரு பாடலாசிரியரைப் பிரதானப்படுத்தியபடி அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்கிறாரே, என்ன உறவு அது, என்ன மனிதர் எம்.எஸ்.வி!

அதனால்தான், கண்ணதாசனின் மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து எம்.எஸ்.வியும் அவரது இசையும் பெரும்பாலும் மீளவே இல்லை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி மட்டுமல்ல, விஸ்வநாதன் கண்ணதாசனும் இரட்டை இசையமைப்பாளர்கள்தான். தமிழர்களின் ரத்தத்தில் மயக்கத்தை, உத்வேகத்தை, காதலை, துயரத்தை ஏற்றத் தெரிந்த இரட்டை இசைக் கலைஞர்கள் அவர்கள்.

எத்தனையெத்தனை பாடல்கள்! ‘யார் அந்த நிலவு’ (சாந்தி) பாடலையே எடுத்துக்கொள்வோமே! விசித்திரமான ஒரு உணர்வைக் கொடுக்கும் பாடல். அந்தப் படத்தைப் பார்க்காதவர்களுக்கு அந்தப் பாடல் மௌனியின் கதையைப் படிப்பதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்தும். தூரத்தில் ஒலிக்கும் ஒரு பாடலைப் போல அந்தப் பாடலை உருவாக்கியிருப்பார் எம்.எஸ்.வி., அப்படியே பாடியிருப்பார் டி.எம்.எஸ்., அப்படியே எழுதியிருப்பார் கண்ணதாசன். ‘யார் அவள், எனக்கும் அவளுக்கும் என்ன உறவு, இது கனவா நனவா’ என்ற இனம்புரியாத உணர்வுக்கு உயிரூட்டிப் புகைமூட்டமான வரிகளாக எழுதியிருப்பார் கண்ணதாசன்:

இப்படி அவர்களுடைய உறவால் விளைந்த பாடல்கள் ஏராளம். அவர்களுடைய உறவு நம் வாழ்க்கையின் அனைத்து தருணங்களுக்குமான பாடல்களை உருவாக்கியிருக்கிறது. கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரிப் பருவத்தின் இறுதி நாள் பிரிவுக்கு ‘பசுமை நிறைந்த நினைவு’களை நாடுவது இன்று வரை நடக்கிறது.

காதலி/காதலன் பிரிவில் தவிக்கும் ஒருவருக்கு ‘நினைக்கத் தெரிந்த மனமே’ போன்று ஆறுதல் தருவது ஏது? ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ என்ற பாடல் போல் உழைப்பாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் பாடல்கள் மிகவும் குறைவு. இன்றும் மணப்பெண்களைக் கிண்டல் செய்ய ‘வாராயோ தோழி’ பயன்படுகிறது.

எம்.எஸ்.வி.க்காக எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை ஒன்றில் இப்படி எழுதப்பட்டிருந்தது: ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடல் ஒரு மனிதரைத் தற்கொலையிலிருந்து தடுத்துக்கொண்டிருக்கும் வரை, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல் இன்னும் இன்னும் காதல் கதைகளைப் பூக்கச்செய்யும்வரை எம்.எஸ்.வி. வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்’. இந்த வரிகள் எம்.எஸ்.வி., கண்ணதாசன் இருவருக்கும் பொருந்துகின்றன என்பதைப் பார்க்கும்போது நாம் இவ்வளவு காலம் கண்ணதாசனைக் கொண்டாடியதில் மறைமுகமாக எம்.எஸ்.வி.யையும் கொண்டாடியிருக்கிறோம் என்ற உண்மை நமக்குப் புரிபடும்.

கண்ணதாசன், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் மட்டுமல்ல நான், நீங்கள் என்று அனைவரும் சேர்ந்த மொத்தம்தான் எம்.எஸ்.வி. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் நாம் வாழும் காலத்துக்கே பின்னணி இசை கொடுத்த அந்த மகத்தான கலைஞனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது அபத்தமான விஷயமாக விஜயகாந்துக்குத் தோன்றியதில் ஆச்சரியமே இல்லை!

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.i

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...