Saturday, July 18, 2015

பிளஸ் 2-க்குப் பிறகு: விடுதி வாசமும் ஒரு வாழ்க்கைப் பாடம்!



சிலர் வெளியூரில் தங்கிக் கல்லூரியில் படிப்பதற்குத் தடுமாறுவார்கள். வேறு சிலரோ, விடுதியில் தங்கிப் புதிய சுதந்திரத்தை அனுபவிக்க விரும்புவார்கள். வெளியிடம், வெளி உணவு குறித்துச் சில பெற்றோர் பதைபதைப்பார்கள். கல்லூரி, பாடத் தேர்வுக்கு இணையாக விடுதியையும் வைத்து உயர்கல்வியை முடிவு செய்பவர்கள் பலர்.

விடுதியைத் தேர்வு செய்வதில் தங்குமிடம், உணவு, பாதுகாப்பு, தண்ணீர், உணவு, விடுதிக்கும் கல்லூரிக்குமான தொலைவு, மருத்துவ வசதி, இணைய வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.

கல்லூரி வளாக விடுதி

விடுதி வளாகம் கல்லூரி வளாகத்துக்குள்ளோ அல்லது அருகிலோ இருப்பது நல்லது. கல்லூரி நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் விடுதி இருப்பது நல்லது. சேர்க்கையின்போது கல்லூரியின் விடுதி என்று வசூலிப்பவர்கள், ஏதேனும் பிரச்சினை வரும்போது, அதன் நிர்வாகம் வேறு என்று தப்பிக்கப் பார்ப்பார்கள். அது போன்ற விடுதிகள் உசிதமானதல்ல.

கல்லூரி வளாக விடுதி சற்றுக் கூடுதல் செலவை வைத்தாலும், பாதுகாப்பு மற்றும் வைஃபை போன்ற இதர தேவைகளையும் பார்த்துச் செய்திருப்பார்கள்.

உணவு... உஷார்

தங்கிப் படிப்பதற்கான செலவில் பெரும் பங்கு உணவுக்கே செல்லும். ஆனாலும், நமது எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் விடுதி உணவு பூர்த்தி செய்யாது. வீட்டு உணவு போலத் தனிப்பட்ட அக்கறை இருக்காது. எனவே, குடும்ப மருத்துவரின் ஆலோசனையின்பேரில் சத்து பானங்களைப் பெற்றோர்கள் வாங்கித் தரலாம். விடுதியில் குறிப்பிட்ட நாட்களில் அசைவம் இருந்தால், சுகாதாரம் கருதிச் சைவப் பந்தியில் சேர்வதே நல்லது. அதேபோல, தங்களுக்கு ஒவ்வாமை உள்ள பதார்த்தங்கள் குறித்து வாரிசுகளிடம் பெற்றோர் அறிவுறுத்துவதும் நல்லது. உணவு விஷயத்தில் உதாசீனமாக இருப்பது, படிப்புச் சூழலைப் பாழாக்கும்.

வெளியார் விடுதி- கூடுதல் கவனம்

கல்லூரி விடுதியின் அடிப்படைத் தேவைகள் போதவில்லை, விடுதி-கல்லூரி இடையே தொலைவு அதிகம் உள்ளிட்ட காரணங்களால், வெளி விடுதியில் தங்க நேர்ந்தால் கூடுதல் கவனம் அவசியம். விடுதிப் பராமரிப்பாளர் அல்லது சீனியர் மாணவர்கள் நன்கு அறிந்தவர்களாக இருக்கும் வெளி விடுதிக்கு முன்னுரிமை தரலாம்.

உறுதிப்படுத்த வேண்டிய தேவைகள்

விடுதியில் தங்கிப் படிக்கும் உங்கள் வாரிசின் உதவிக்கும் கண்காணிப்புக்கும் உள்ளூர் பாதுகாவலர் ஒருவரை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு அவருடைய உதவியும், அரவணைப்பும் கிடைப்பது நல்லது. அவரைத் தவிர்த்து நம்பிக்கையான மற்றும் சில உள்ளூர் நபர்களின் தொடர்பு எண்களை உங்கள் வாரிசிடமும், அதேபோல வாரிசுகளின் விவரங்களை அவர்களிடமும் முன்னெச்சரிக்கையாகப் பெற்றோர் கொடுத்து வைக்க வேண்டும்.

விடுதிக்குள் முதலுதவி வசதிகளும், அருகில் பன்னோக்கு மருத்துவமனை இருக்கிறதா என்பதுடன், விடுதியிலிருந்து ரயில், பேருந்து நிலையங்களின் தொலைவு ஆகியவற்றை விடுதித் தேர்வின்போது கவனத்தில் கொள்ளலாம்.

கைவசம் இருக்க வேண்டியவை

உங்கள் வாரிசு ஏதேனும் உடல்நலக் கோளாறுக்கு மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்பவர் எனில் அது குறித்துக் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்துத் தேவையான மருந்துகளைக் கையிருப்பாகக் கொடுத்து அனுப்ப வேண்டும். அவரது உடல்நலக் கோளாறு குறித்தும், வாரிசுக்கு மருத்துவ ஒவ்வாமை ஏதேனும் இருந்தால், அது குறித்தும் குடும்ப மருத்துவரின் கடிதம் ஒன்று வாரிசிடம் இருப்பது நல்லது.

வெளி மருத்துவரைச் சந்திக்க வேண்டிய சூழலில், அவற்றால் அசாதாரணச் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். அதேபோலக் குடும்ப மருத்துவருடைய ஆலோசனையின் பேரில் வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி, சாதாரணக் காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளுக்கான மாத்திரைகளைக் கைவசம் கொடுத்து அனுப்பலாம்.

இவை தவிர டார்ச் லைட் அல்லது எமர்ஜென்ஸி லைட் உள்ளிட்டவை அத்தியாவசியம். கைபேசியில் பதிந்திருப்பது போதும் என்ற அலட்சியத்தைத் தவிர்த்து, முக்கியமான தொடர்பு எண்களை எழுதி வைத்துக்கொள்ளலாம். கல்லூரி சேர்க்கையின்போதே அருகிலுள்ள வங்கி ஒன்றில் வாரிசின் பெயரில் கணக்கு ஆரம்பித்து, அதற்குரிய ஏ.டி.எம்., மொபைல் பேங்கிங் வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தொடக்கத் தடுமாற்றங்கள்

போதுமான ஏற்பாடுகளைச் செய்துதருவதுடன் கைப்பேசி, சமூக ஊடகங்கள் என அவர்களுடன் பெற்றோர் தொடர்பில் இருக்க வேண்டும். ஆரம்ப விடுமுறைகளில் வீட்டுக்கு அழைத்துவருவதோ, சென்று பார்த்துவருவதோ நல்லது. வாரிசு வருத்தப்படும் சிறு குறைகளையும் காது கொடுத்துக் கேட்பதுடன் நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கலாம். பெற்றோரின் அரவணைப்பிலிருந்து திடீரென்று விடுபட்டவர்களுக்கு வீட்டு ஏக்கம் வரும்.

காரணமில்லாத சிறிய பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திப் படிப்பை முறித்துக்கொள்ளவோ, வேறு பாடம் - வேறு கல்லூரி என்று தடுமாறும் யோசனைகளோ அவர்களை அலைக்கழிக்கலாம். பெற்றோர் இவற்றை எதிர்பார்த்திருப்பதும், உணர்ந்து எதிர்வினையாற்றுவதும் பிரச்சினை பெரிதாக வெடிக்காமல் பார்த்துக்கொள்ளும். அதேபோலச் சக மனிதர்களை எடை போடத் தெரியாமல், நண்பர்கள் மற்றும் சக வயதினர் தரும் அழுத்தங்களுக்குத் திசை மாறத் தயாராக இருப்பார்கள். வாரிசுகளிடம் அந்தத் தடுமாற்றங்கள் தென்பட்டால் அவற்றையும் களையப் பெற்றோர் தயாராக இருக்க வேண்டும்.

விடுதி வாசம் மற்றுமொரு பாடம்

கல்லூரியில் பயில்வது ஒரு வகைப் பாடம் என்றால், விடுதி வாசம் மாணாக்கர்களுக்கு மற்றுமொரு பாடம். பெற்றோர் அரவணைப்பிலிருந்து விடுபட்டு, புதிதாக முளைக்கும் சிறகுகளோடு திறந்த உலகுக்குள் காலடி வைப்பார்கள். பள்ளி போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத, வீட்டுப் பெரியவர்களின் நேரடிப் பார்வையில்லாத சுதந்திர உலகத்தை விடுதி வாசம் தரும். பலருக்கு உற்சாகத்தையும், சிலருக்கு மிரட்சியையும் தரும் இந்த அனுபவம், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் ஒன்று.

பலவித மனிதர்களைப் புரிந்துகொண்டு சமயோசிதமாய் அவர்களைக் கையாள, தனது பிரச்சினைகளைத் தனியாக எதிர்கொள்ள, தன்னுடைய சுய திறமைகளை பரிசீலிக்க, கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள, நட்பு வளர்க்க, உடல்-மன நலன்களைப் பேண, எதிர்காலத்துக்கு அடித்தளமிட... என்று வாழ்க்கையில் மறுபடியும் கிடைக்க வாய்ப்பில்லாத பொன்னான தருணங்கள் கல்லூரி விடுதி வாசத்தில்தான் கிடைக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024